கட்சி செய்திகள்: காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை! – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் அறவழி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 அன்று சென்னை, அண்ணா சாலையில் ஐபில்(IPL) கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பொய்யாகப் புனையப்பட்டுச் சிறைபடுத்தும் போக்கு நடைபெற்றுவருகின்றது. கடந்த 4 நாட்களில் தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்னறிவிப்பின்றிப் பொய் வழக்குகளில் கைது செய்து சிறைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.
இது தொடர்பாக இன்று 14-04-2018 (சனிக்கிழமை) மாலை 04 மணியளவில் சேப்பாக்கத்திலுள்ள ‘சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஊடகவியலாளர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று விளக்கமளித்தார். மேலும், காவிரிக்காக போராட்டம் நடந்து வரும் தமிழகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என கூறி கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினோம்; இதனால் நாம் தமிழர் கட்சியினர் மீதும்,என் மீதும் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும்
நாம் தமிழர் கட்சியை குற்றவாளி கட்சி போல் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! ஐபிஎல்-க்கு எதிரான போராட்டத்தில் காவலரை தாக்கிய இளைஞர் நாம் தமிழர் கட்சியே கிடையாது. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு என்றும் குறிப்பிட்டார்.
காவலர்களை தாக்கியது என் கட்சிக்காரராக இருந்தால் நானே காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பேன். யார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதை காவல்துறைதான் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தாக்குதலை விலக்கிவிட்ட என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். இது அறம் சார்ந்ததல்ல. ஏராளமான பொய் வழக்குகள் நாம் தமிழர் கட்சியினர் மீது தொடரப்பட்டுள்ளது என்று சீமான் தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டினார்.
எந்த அமைப்பு, எந்த கட்சி என்று தெரியாமல் நாம் தமிழர் கட்சி மீது குற்றம் சுமத்துவது தவறானது. நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; காவலர்களைத் தாக்குவதற்காகவா நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா? – என்றும் கேள்விஎழுப்பினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடும் என் தம்பிகளைக் கைதுசெய்ய வேண்டாம் எனவும் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்றும் சீமான் கூறினார்.
வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்!
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084