நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள்

370

நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள் | நாம் தமிழர் கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், வன்புணர்ச்சி படுகொலையுண்ட நம் அன்புமகள் ஆசிஃபா-வின் மரணத்திற்கு நீதி கேட்டும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்திய மாபெரும் கருத்தரங்கம் 28-04-2018 சனிக்கிழமையன்று காலை 10 மணிமுதல் 04 மணிவரை சென்னை எழும்பூரில் உள்ள ஃபயாஸ் மகாலில் (ஆல்பர்ட் திரையரங்கம் அருகில்) நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் இராவணன், அறிவுச்செல்வன், சுரேசுகுமார், கோகுலக்கிருஷ்ணன், ஏழுமலை உள்ளிட்ட பாசறைப் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியைச் ஒருங்கிணைத்து நடத்தினர்.

கருத்துரை வழங்கியவர்கள்:
=====================================
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா
தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவை
————————–
திருமிகு வே.பாலு
வழக்கறிஞர்
————————–
திருமிகு பியுஸ் மனுஸ்
சூழலியல் செயற்பாட்டாளர்
————————–
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

=====================================

இக்கருத்தரங்கில், தமிழகம் முழுவதுமுள்ள நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர்கள் , வழக்கறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், அமைப்பு சாரா சமூகச் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

1. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமானது மொழிவழி தேசிய இனங்களுக்கு ஏற்றவாறு மாற்றி, மறு ஆய்வுக்குட்படுத்தபட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.
2. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி, தமிழை வழக்காடு மொழியாக்க ஆவணம் செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.
3. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தேர்வில் பெரும்பாலும் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். முதல் இரண்டு நீதிபதிகள் வேற்று மாநிலத்தவர் என்ற நடைமுறையை மாற்றி இந்த மாநிலத்தைச் சேர்ந்தவருக்கே அப்பதவியைக் கொடுப்பதற்கான முறையை ஆவணம் செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.
4. உயர்நீதிமன்றத்தில் தற்போது பாதுகாப்பிலிருக்கும் மத்திய பாதுகாப்புப் படையை உடனே விலக்கிக்கொண்டு தேவையான பாதுகாப்பைத் தமிழ்நாடு காவல்துறையை வைத்தே மேற்கொள்ள வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை கேட்டுக்கொள்கிறது.
5. பாரம்பரியமிக்கச் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை தற்பொழுது இருக்கும் இடத்திலிருந்து மாறுதல் செய்யக்கூடாதென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வாயிலாக வலியுறுத்தப் படுகிறது.
6. வன்கொடுமை சட்டத்துக்கு எதிராக, தற்போது உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக, பாராளுமன்றம் கூட்டி உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென, அப்பொழுதுதான் சமூக நீதியை நிலைநாட்ட முடியுமென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை உரைக்கிறது.
7. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக வரும் மே 3-ஆம் தேதி வழக்கை விசாரிக்கக் கூடாதெனவும், மேலும் இரு வாரங்கள் வேண்டுமென மத்திய அரசு கேட்பது மிகவும் கேலிக் கூத்தான, தமிழர்களின் உரிமையைக் கொச்சைப்படுத்துகின்ற செயலெனவும், உடனடியாக அதைத் திரும்பப் பெறுவதோடு, மத்திய அரசின் இச்செயலை தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து, மத்திய அரசு பாராமுகமாவே இருக்குமானால் தமிழர்கள் தொடர்ந்து தெருவிலிறங்கி போராட வேண்டிய தேவை வருமென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை தீர்மானம் நிறைவேற்றுகிறது.
8. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனக் கடந்த 10-4-2018 அன்று சென்னையில் நடந்த இந்தியன் பிரிமியர் லீக் (IPL) மட்டைப் பந்து ஆட்டத்தை நடத்தக் கூடாதென்ற நோக்கத்தோடு, ஜனநாயக ரீதியாகப் போராடிய இயக்கங்கள் மீது கண்மூடித் தனமாகக் காவல்துறை நடத்திய தடியடியில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களால், தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மீது பொய் வழக்குகள் போட்டு, போராளிகளைப் பொறுக்கிகள் போல் நடத்துகின்ற தமிழ்நாடு அரசை மிக வன்மையாகக் கண்டித்து, கொலை முயற்சி போன்ற பொய் வழக்குகளை எவ்வித நிபந்தனையுமின்றித் திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வலியுறுத்துகிறது.
9. ஆசிபா கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல், அங்கு இருக்கின்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி எவ்விதமான விதியையும் பின்பற்றவிடாமல், சங் பரிவாரின் வழக்கறிஞர் குழு செய்கின்ற அட்டகாசம் அட்டூழியத்தை இம்மாநாடு கண்டித்து, தொடர்ந்து ஆசிபாவின் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு மன்றத்தில் வழக்காடுகின்ற பெண் வழக்கறிஞரை பாராட்டி அவருக்கு எப்பொழுதும் துணை நிற்குமென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை தீர்மானம் நிறைவேற்றுகிறது.
10. சட்டக் கல்விகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்குவதை, அவற்றைத் தனியார் மயமாக்குவதை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வன்மையாகக் கண்டிக்கிறது.
11. நிர்வாக நடுவராக வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்த நியமனத்தைத் தற்போது வந்திருக்கின்ற நகர மயமாக்கல் சட்டத்தின்படி காவல்துறை துணை ஆணையரிடம் ஒப்படைக்கின்ற அம்முறையை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வன்மையாகக் கண்டிப்பதோடு, வருவாய்த் துறையின் கையில் இருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டுபோய்க் காவல் துறையின் கையில் கொடுப்பது மிகுந்த சட்ட ஒழுங்கை கெடுத்து சர்வாதிகாரப் போக்கோடு காவல் துறை நடப்பதற்கு வழி வகைச் செய்யுமென, உடனடியாகக் காவல் துறை வசமிருக்கின்ற இப்பொறுப்பினை மீண்டும் வருவாய்த் துறை வசமே ஒப்படைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வலியுறுத்துகிறது.
12. பாரம்பரியம் மிக்கச் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதிலிருந்து உடனடியாகத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றுவதற்கு ஆவணம் செய்ய வேண்டுமென மத்திய அரசை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வலியுறுத்துகிறது.
13. இந்தியாவில் தற்போது இருக்கின்ற மின்னணு வாக்குப் பதிவு முறை குறித்த சந்தேகங்களும் அச்சங்களும் பொதுமக்களுக்கும் இயக்கங்களுக்கும் இருப்பதால், வெளிப்படையான சனநாயகத் தன்மை ஏற்பட வேண்டுமென்றால், மின்னணு வாக்குப்பதிவு முறையை மாற்றி மீண்டும் பழைய முறையான வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்துவதே உணமையான சனநாயகத்துக்கு ஆதரவாக இருக்குமென இவ்வழக்கறிஞர் குழு எதிர்பார்ப்பதோடு அதற்கேற்ப இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக மின்னணு வாக்கு முறையைத் தடை செய்து மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வலியுறுத்துகிறது.
14. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சட்டக்கல்வியைப் பயின்று வருகின்ற, அதுவும் கிராமப்புறங்களில் இருந்து பயின்று வரும் மாணவர்களுக்கு, இளம் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி தொடங்கியதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வலியுறுத்துகிறது.
15. சுற்றுச்சூழலுக்கு எதிராகவும், தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கின்ற வகையிலும் தற்பொழுது இருக்கின்ற கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளும், ஸ்டெர்லைட் (Sterlite) ஆலையும், நியுட்ரினோ (Neutrino) அணுப் பரிசோதனை மையமும், ஹட்ரோகார்பன் (Hydrocarbon) திட்டம் போன்ற நாசகரமான திட்டங்களைத் தமிழக மண்ணில் செயற்படுத்தி வருகின்ற தமிழ்நாடு அரசினுடைய செயலையும், அதற்குத் துணையாய் உள்ள மத்திய அரசின் செயலையும், வன்மையாகக் கண்டிப்பதோடு, இப்படி மக்களுக்கு எதிராகச் செய்கின்ற திட்டங்களனைத்தையும் உடனடியாக எவ்விதமான நிபந்தனையும் இன்றிக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை வலியுறுத்துகிறது.

புகைப்படங்கள்: https://www.facebook.com/media/set/?set=a.975658515927709.1073741960.560625584097673&type=3


 

[WRGF id=65767]

முந்தைய செய்திகல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திகாவிரிப்படுகையில் துணை இராணுவம் குவிப்பு! இன்னொரு காஸ்மீராக தமிழகத்தை மாற்றுவதா? – சீமான் கண்டனம்