மழைக்காலத்தில் செய்ய வேண்டிய முதன்மைப் பணிகள்..! – சீமான் வேண்டுகோள்

323

அன்பின் உறவுகளே!

வணக்கம்.
வடகிழக்குப் பருவமழை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் சென்னை மாநகரம் முழுக்கப் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, சாலை முழுக்க வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சேர்ந்து, அவை வீடுகளிலும் புகுந்திருக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகிறது. இவையாவும் ஒரே ஒரு நாள் கொட்டித்தீர்த்த மழையினால் விளைந்தவையே. அக்கறையும், தொலைநோக்குப்பார்வையும் துளியுமற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தின் தலைநகரத்திலேயே அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்காததால் இத்தகைய துயரை நாம் எதிர்கொள்ள வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இயற்கை மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள முனையும் ஆட்சியாளர்கள் மீட்புப்பணிகளையோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ முடுக்கிவிடாது காலந்தாழ்த்துகிறார்கள்.

ஆகவே, நம்மை நாமே தற்காத்துக் கொள்ள நம்மால் இயன்றதை செய்வோம். இப்பேரிடரிருந்து மீண்டுவர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இம்மழைக்காலத்தில் நமக்காக நாம் செய்ய வேண்டிய குறைந்தபட்சப் பணிகள் :-

* மழைநீர் உட்புகாத வீடுகளில் வசிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில், பாதுகாப்பான இடங்களுக்குப் பயணப்படுங்கள்.

* மழைநீர் உட்புகுக்கூடிய பகுதிகளில் வசிப்போர் கட்டிடத்தின் முதல் தளத்தில் வசிப்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.

* குடிநீரை காய்ச்சி வடிகட்டிப் பருகுங்கள். நிலவேம்புச்சாறை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பருகுங்கள்.

* பால், ரொட்டி போன்ற உணவுப்பொருட்களைக் கூடுதலாக வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். குளிர்ச்சியான திரவப்பானங்களை அருந்துவதைத் தவிருங்கள்.

* மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, கைவிளக்கு, போர்வை போன்றவற்றை அதிகப்படியாய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

* காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கான மருந்துப்பொருட்களையும், மாத்திரைகளையும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

* மழை நேரங்களில் மிக அத்தியாவசியத் தேவைகளுக்காக அல்லாது வேறு எதற்காகவும் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.

* அலைபேசியில் மின்சக்தியை தேக்கிவைத்துக் கொள்ளுங்கள். மின்தேக்கி (POWER BANK) ஒன்றையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

* இடி, மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

* மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே மழைநேரங்களில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.

* மின் புரட்டியை (INVERTOR) தொடவோ, இடமாற்றம் செய்யவோ முயற்சிக்காதீர்கள்.

* பழைய கட்டிடங்களுக்குள்ளோ, அதன் அருகிலோ செல்வதை முழுமையாய்த் தவிருங்கள். குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாதீர்கள்.

* மின்சார ஒயர்கள் ஆங்காங்கே அறுந்து விழக்கூடும். ஆகவே, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கவனமாய்ச் செல்லுங்கள்.

* காலணி அணியாது வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். குடையையோ, மழைக்கவச ஆடையையோ எப்போதும் உடன் வைத்திருங்கள்.

* ஈரம் படர்ந்த கையுடன் மின்சாரச் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளை மின்சாதனங்கள் அருகே செல்ல அனுமதிக்காதீர்கள்.

* கொசுக்கள் உட்புகாவண்ணம் தடுக்கச் சன்னல்களை இறுக மூடி வையுங்கள். உடலை முழுமையாக மறைக்கிற பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

* உடைகளையும், போர்வைகளையும் ஈரம்படாத இடத்தில் வைத்திருங்கள். முடிந்தளவு துணிகளை நனைக்காதிருங்கள்.

* உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா எனக் கேட்டு உறுதிசெய்துகொள்ளுங்கள்.

* வீட்டில் ஒரு முதலுதவிப்பெட்டியை தயாராய் வைத்திருங்கள். மருத்துவரின் தொடர்பெண்ணையும், தீயணைப்புத்துறையின் தொடர்பெண்ணையும் நினைவில் வைத்திருங்கள்.

* சாலைகளில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடை திறந்திருக்கிற வாய்ப்பிருப்பதால் மிகக்கவனமாகச் செல்லுங்கள்.

* சுரங்கப்பாதைகளைத் தண்ணீர் தேங்கி நிற்கும்போது பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

* வாகன ஓட்டிகள் முடிந்த அளவு சாலையின் நடுவே பயணியுங்கள். இரு ஓரங்களிலும் எதிர்பாராத பள்ளங்கள் உருவாகியிருக்கக்கூடும்.

* வீட்டில் தண்ணீர் உட்புகுகிற வாய்ப்பிருந்தால் அத்திவாசியப் பொருட்களைத் தனியாகப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.

* உங்கள் தெருவில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதனை அகற்றக் கோருங்கள்.

மேலே கூறப்பட்டிருக்கிற அடிப்படையானவற்றை அவசியம் பின்பற்றுங்கள். நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். இக்கடின சூழலையும் மிக எளிதாய் நம்மால் கடக்க இயலும். அவசரத்தேவைகளுக்கு எங்களுக்கு அழையுங்கள். உங்களுக்கு உதவ எப்போதும் உங்கள் உடன்பிறந்தவர்கள் காத்திருக்கிறோம். உங்கள் பகுதி நாம் தமிழர் உறவுகள் உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பார்கள்.
நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத் தொலைபேசி எண் : 044-4380 4084

— செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.