ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு,குறு முதலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் – சீமான் குற்றச்சாட்டு

15

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு,குறு முதலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் – சீமான் குற்றச்சாட்டு

தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! குறித்து சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் நாம் தமிழர் கட்சி நேற்று 04-07-2017 நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோவை வந்திருந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

மண்ணின் வளத்தை பயன்படுத்தி அதன்மூலம் உற்பத்தியை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு மக்களின் தலையில் வரியை சுமத்தி வருவாய் ஈட்ட நினைக்கிறது.

உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 28 சதவீதம் அளவுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீதம் தான் வரி. ஆனால் தரமான கல்வி, சுகாதாரத்தில் அந்த நாடு 3–வது இடத்தில் உள்ளது.

மத்திய அரசு வரி வருவாயை வைத்து நாடு முழுவதும் தரமான கல்வி, மருத்துவத்தை கொடுக்குமா?. 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இது குறித்து எந்த தெளிவான தகவலையும் மத்திய அரசு வெளியிட வில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியாது.

ஊதுபத்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டிகளுக்கும் வரி விதித்துள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி என்று பெயர் வைத்துவிட்டு சரக்குக்கு (மதுவுக்கு) வரி விதிக்காமல் விட்டுள்ளனர். முன்பு கறி…கறி என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது வரி..வரி.. என்கிறார்கள். ஜி.எஸ்.டி. வரி மாநில உரிமைகளை நிச்சயம் பாதிக்கும்.

சினிமா துறை ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தற்போது ஜி.எஸ்.டி. வரியால் தியேட்டர்களுக்கு 58 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது. வரிச்சுமையை சமாளிக்க முடியாது என்பதால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இப்பிரச்சினையை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்களின் பிரச்சினையில் தமிழக அரசு மவுனமாக இருக்கிறது.

பெயர் தான் அ.தி.மு.க. அரசு ஆனால் ஆள்வது பாரதீய ஜனதா அரசு. கதிராமங்கலத்தில் பாதிக்கப் பட்ட மக்களை பார்ப்பதற்கு அனுமதிக்க வில்லை. கதிராமங்கலம் சென்று தான் போராட வேண்டும் என்றில்லை. தமிழகத்தின் எந்த இடத்தில் இருந்தும் கதிராமங்கலம் மக்களுக்காக குரல் கொடுப்போம். இந்த வி‌ஷயத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது.

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை, ஊழியர் தற்கொலை சம்பவங்கள் சினிமாவில் திகில் படம் பார்ப்பது போல் உள்ளது. காவலாளி ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு நடக்கும் அனைத்தும் மர்மமாக உள்ளது. முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்களின் செயல்பாட்டை விட தற்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் போன்ற சில அமைச்சர்களின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. இப்போது தான் அமைச்சர்கள் பேசவே செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.