மாட்டுக்கறியா? மதவெறியா? : மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

63

கட்சி செய்திகள்: இறைச்சிக்காக மாடுகள் விற்கத் தடை: மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் (சென்னை) | 05-06-2017

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்பதற்குத் தடை விதித்துள்ள மத்திய அரசின் செயலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 05-06-2017 அன்று மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும், மாட்டிறைச்சி தின்றதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களால் ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பிச் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியாகச் சீமான் கண்டனவுரையாற்றிய போது, ‘இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்குத் தடை என்பது ஒரு மதம்சார்ந்த உணவுப்பழக்கவழக்கத்தின் மீதான தடை மட்டுமல்ல! அது விவசாயிகள் மாடுவளர்ப்பு தொழிலை நொடிப்பு நிலைக்கு உள்ளாக்கி, நாட்டு மாட்டினங்களை முற்றாக அழிப்பதோடு, விவசாயிகளின் தற்சார்பு பொருளாதாரத்தை அழிக்கிற செயலென்றும், அது சனநாயகத் துரோகம்’ என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பேசுகையில் ‘அறவழியில் மெரீனாவில் நினைவேந்தல் நடத்த முயன்றவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசு, ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன்?’ என்றும் கேள்வியெழுப்பினார்.

செய்தியாளர் சந்திப்பு:

முந்தைய செய்திசீமான் தலைமையில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – திருவாடானை
அடுத்த செய்திகாயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தாம்பரம் | 08-06-2017