தமிழகத்தில் இந்தியைத் திணித்தால் தைப்புரட்சி போல மொழிப்புரட்சி தமிழர் நிலத்தில் வெடிக்கும் : மத்திய அரசுக்கு சீமான் எச்சரிக்கை! | நாம் தமிழர் கட்சி | 04.05.2017
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (04-05-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் தனித்த அடையாளத்தோடும், பண்பாட்டு விழுமியங்களோடும், பாரம்பரிய மரபுகளோடும் சங்கமித்து வாழும் ஒன்றியமாகும். அத்தகைய தேசிய இனங்களின் அடையாளங்களை அறவேயொழித்து, அகன்ற பாரதத்தை உருவாக்குவதற்கு முன்முயற்சியாக ஒற்றை அடையாளத்தை முன்னிலைப்படுத்தி இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கிற வேலையினைக் கனக்கச்சிதமாகச் செய்து வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. அதற்கு முதற்படியாக மாநில மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது. எவ்வித இலக்கண, இலக்கிய, வளமோ, பாரம்பரியமோ, வரலாற்றுப் பின்முலமுமோ ஏதுவுமற்ற இந்தியையும், எவராலும் பேசப்படாத சமஸ்கிருதத்தையும் முதன்மைத்துவம் செய்யப் பாஜக அரசானது கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்து வருகின்றது.
கடந்த 2011ஆம் ஆண்டில் காங்கிரசு – திமுக ஆட்சியில் அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் இயங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்குத் தற்போது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயமாக்கவும், அரசு விளம்பரங்களில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கவும், மத்திய, மாநிலங்களுக்கிடையேயான நடைமுறைகளில் இந்தியை முதன்மைப்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பாராளுமன்றத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர் பெருமக்கள் யாவரும் இந்தியை அறிந்திருப்பார்களேயானால் அவர்கள் இந்தியிலேயே பேசுவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கிறது. காங்கிரஸ், பாஜக இரு தேசிய கட்சிகளில் எது அதிகாரப்பீடத்தை அலங்கரித்தாலும் இந்தியைத் திணிக்க முற்படுகிறது என்பதே நிதர்சனம். அவைகளுள் இந்தித் திணிப்பை செயலாக்கம் செய்யும் விதமும், செயல்பாட்டின் வீரியமும்தான் வேறுபடுகிறது.
இந்தியை முன்னிறுத்தும் இவ்வகை முயற்சிகளுக்குப் ப.சிதம்பரம் அடிகோலியபோதே எதிர்த்திருக்க வேண்டிய திமுக, அன்றைக்கு அதிகாரப்போதைக்காக அடிபணிந்துவிட்டு இன்றைக்கு எதிர்ப்புக்குரல் விடுப்பது அப்பட்டமான நாடகமேயன்றி, மொழிப்பற்று என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தித் திணிப்பினால் தமிழர் நிலத்தில் எழுந்த மொழிப்போர் ஏற்படுத்திய அளப்பெரிய தாக்கத்தினால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த திமுகவானது, தனது கால்நூற்றாண்டு கால ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கும், மீட்சிக்கும் எத்தகைய பங்களிப்பையும் ஆற்றாது விட்டுவிட்டு, தேசிய கட்சிகளிடம் தமிழர் மானத்தை அடமானம் வைத்து இந்தியைப் புறவாசல் வழியே தமிழர் நிலத்திற்குள் அனுமதித்தது. அக்கட்சியும் இப்போது இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடுவதாகக் காட்டிக்கொள்வது நகைப்புக்குரியதாகும்.
பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து ஒற்றை மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சி தத்துவத்திற்கும், சனநாயகத்திற்குமே எதிரானது. இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகச் சந்தையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் அவ்வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவையாவும் இந்துத்துவாவின் கிளைபரப்ப உதவுமே ஒழிய, இந்நாட்டின் வளர்ச்சிக்கும், ஒருமைப்பாட்டுக்கும் துளியளவும் நன்மை பயக்காது. ஒரு மனிதனின் சிந்தனை மேம்பாட்டுக்கும், திறமை வெளிப்பாட்டுக்கும் தாய்மொழி வழி கல்வியே உகந்தது என நிரூபிக்கப்பட்டு உலகெங்கும் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியானது மலட்டுச் சமூகமாக இந்நாட்டு மக்களை ஆக்குவதற்கான வேலைத்திட்டமேயன்றி வேறொன்றுமில்லை என்பதே வெளிப்படை.
இந்திய ஒன்றியத்தில் வாழும் எல்லாமொழி தேசிய இனங்களையும் தத்தம் அடையாளத்தோடு அவரவர் தாய்நிலத்தில் வாழச்செய்வதே தேசிய இனங்களின் ஓர்மைக்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஏற்றது. அதனைவிடுத்து, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அவர்கள் தலைமேல் சுமத்தினால் அது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்குமே ஊறுவிளைவிப்பதாகும். உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக அளப்பெரிய தியாகங்களையும், மகத்தான அர்ப்பணிப்புகளையும், உயிர் ஈகங்களையும் செய்த பெரும்பூமி தமிழகமாகும். அரை நூற்றாண்டுக்கு முன்பாக இந்தித் திணிப்பை எதிர்த்து இந்நிலமெங்கும் செங்குருதி சிந்தப்பட்டிருக்கிறது. அந்நிலத்தில் அந்நிய மொழியின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதியோம் என்பதே தமிழர்கள் உலகுக்கு உரைக்கும் பேரறிவிப்பாகும்.
தமிழர்களின் தொன்மையும், பெருமையும், கொண்டிருந்த நாகரீக உச்சமும் கீழடிக்குக் கீழே உறங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை அகழாய்வு செய்து உலகுக்கு முரசறிவிக்க இடையூறு செய்யும் மத்திய அரசானது, தமிழர் நிலத்திலும் இந்தியை இறக்குமதி செய்ய முற்படுமேயானால் அது மிகப்பெரிய எதிர்வினையைத் தமிழர்களிடம் ஏற்படுத்தும். நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழுவூர் சின்னச்சாமியும், சிவகங்கை இராஜேந்திரனும், கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் போராடி உயிர்நீத்த தமிழ்மண்ணில் இந்தித் திணிப்பையும், ஆதிக்கத்தையும் அவரது வழிவந்த மானத்தமிழ் பிள்ளைகள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகையினால், அந்நியமொழியை வேர்பரப்புகிற வேலையைக் கைவிட்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்தந்த மாநிலங்களில் அவரவர் தாய்மொழிக்கே முதன்மைத்துவம் தரப்பட வேண்டும். தமிழர் நிலத்தில் இந்தியைத் திணிக்கும் முயற்சியை முற்றுமுழுதாகக் கைவிட வேண்டும். இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில், சல்லிக்கட்டு உரிமைக்காகத் தமிழர் நிலத்தில் இளையோர் கூட்டம் நிகழ்த்திய தைப்புரட்சி போல, உயிர்மொழி தமிழைக்காக்க மொழிப்புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி