தமிழ்மறையோன் வள்ளுவர் பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்

97

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமைப்படப் பாடுகிறான் பெரும்பாவலன் பாரதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

/// எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

/// இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும்.

///ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

///உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

///உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

///முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றிய பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

///மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

///எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

///நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

///(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

///ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

///மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

///நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று கருதித் தனியே மதிக்கப்படுவான்.

இப்படி எண்ணற்ற குறட்பாக்களை அருட்பாக்களாக மானுட வாழ்க்கைக்குத் தந்தருளிய பெருந்தகை!

133 அதிகாரங்களில் 1330 மறைமொழிகளை இந்த மானுடச் சமூகத்தின் வாழ்வுக்கு நெறிகாட்டியாகத் தந்த முப்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையின் பிறந்தநாள் இன்று

பைபிள் கிறித்தவர்கள் போற்றுகிற வேத நூல்!

குரான் இசுலாமியர்கள் போற்றுகிற பின்பற்றுகிற புனித நூல்!

பகவத்கீதை இந்துக்கள் போற்றுகிற பின்பற்றுகிற புனித நூல்!

எல்லோரும் போற்றக்கூடிய பின்பற்றக்கூடிய ஒரு மறை ஒன்று உண்டென்றால் அது நம் வள்ளுவப்பெருமகனார் தந்தருளிய திருக்குறள் என்கிற பொதுமறை தான்!

அந்த மறையோனின் மறைமொழி வழிநின்று

அடிமை இனத்தின் உரிமை வென்று நிலைநாட்ட நிற்கும் தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள், போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரிய நம் மூதாதை வள்ளுவப் பெருமகனாரின்
பிறந்தநாளை மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கொண்டாடுவோம்
நாம் தமிழர்!