18-10-2016 சீமான் தலைமையில் மாபெரும் தொடர்வண்டி மறியல் போராட்டம் – சென்னை

72

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்துகின்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு ஆதரவளித்து நாம் தமிழர் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் இன்று (18-10-16) காலை 11 மணியளவில் சென்னை, மத்திய தொடர்வண்டி நிலையத்தில் பேரெழுச்சியோடு மாபெரும் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் திருமண அரங்கினுள் அடைக்கப்பட்டு மாலை 6 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்து இந்தத் தொடர்வண்டி மறியல் போராட்டத்தை நடத்தினோம். இதுவொரு தொடக்கநிலை போராட்டம்தான். தொடர்ந்து மத்திய அரசு மௌனம் சாதிக்குமானால் காவிரி நதிநீர் உரிமையைப் பெறும்வரை தொடர்ச்சியானப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.
மத்திய தொழில்நுட்பக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு 160 டி.எம்.சி. தேவை; அதில் குடிநீருக்கு 22 டி.எம்.சி. தேவை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அதில் கர்நாடகாவில்தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளபோது கர்நாடகாவில் மட்டும்தான் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பதுபோல அந்த அறிக்கை ஏன் காட்ட முயல்கிறது? அதனால், அந்த அறிக்கையில் நமக்கு முழுமையான நம்பிக்கையில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக இன்றைக்கு காங்கிரசு போராடுகிறது; திமுகவும் போராடுகிறது. ஆனால், 2007ஆம் ஆண்டிலிருந்தே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நமது கோரிக்கையாக இருக்கிறது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரசு, திமுக இரு கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன முன்முயற்சி எடுத்தது? ஒன்றுமில்லையே! ஆனால், இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விவகாரம் அரசியலாகிறது என்றவுடனே நாங்களும் போராடுகிறோம் என்கிறார்கள். இவர்கள் ஆட்சியில்தான் எமது உரிமையே பறிபோனது. அதனால், திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் அதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்காது.
கர்நாடகாவில் காங்கிரசு ஆளும் கட்சியாக இருக்கிறது. பாஜக ஆட்சியைப் பிடிக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. தேசிய நலனைப் பேசும் காங்கிரசு, பாஜக ஆகிய இரு கட்சிகளும் வரவிருக்கிற தேர்தலை மனதில்கொண்டு மாநிலக்கட்சியாக மாறி கர்நாடகாவுக்கு ஆதரவாக நிற்கிறது. அதனால், அவர்கள் தமிழகத்துக்கு ஒருபோதும் உண்மையாக இருக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இரு தேசியக் கட்சிகளும் தமிழ் மண்ணிற்குத் தேவையில்லை என முடிவெடுத்து அவர்களைத் துடைத்தெறிய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இவர்களோடு ஒருபோதும் கூட்டணியில்லை என அறிவிக்கிறோம். இதனை இரு திராவிடக் கட்சிகளுக்கும் அறிவிக்குமா? என்றால், அறிவிக்காது. அதனால், இவர்கள் எல்லோருக்குமே இந்த விவகாரம் வெறும் அரசியல்தான்!
– இவ்வாறு செய்தியாளர்களிடம் சீமான் தெரிவித்தார்

முந்தைய செய்தி17.10.2016 கவியரசு கண்ணதாசன் சிலைக்கு சீமான் மலர் வணக்கம் செய்கிறார் – தி.நகர்
அடுத்த செய்திகவியரசு கண்ணதாசன் நினைவு நாளையொட்டி சீமான் மாலை அணிவித்து மரியாதை!