உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (21-07-2016) காலை 11 மணிக்கு, சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,
தன் அளப்பறிய கலைத்திறமையால் சிவனை, கண்ணனை, கந்தனை, கர்ணனை, திருமாலை, அப்பர் பெருமானை, கப்பலோட்டிய தமிழனை, கட்டப்பொம்மனை நம் கண்முன்னே நிறுத்தியவர் ஐயா சிவாஜி கணேசன்;
மன்னனுக்கு ஒருநடை, அண்ணனுக்கு ஒருநடை, ஏர் உழவனுக்கு ஒருநடை, பெருங்கிழவனுக்கும் ஒருநடை, மீனவனுக்கு ஒருநடை, அன்பு மாணவனுக்கு ஒருநடை, கள்வனுக்கு ஒருநடை, கடுங்காவலனுக்கும் ஒருநடை, கவிஞருக்கு ஒருநடை, நற்காதலனுக்கு ஒருநடை – என்று தன் தனித்திறன்மிக்க நடிப்பாற்றலால் நாட்டுமக்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீண்டப் புகழோடு நிலைத்து வாழ்பவர்;
சிம்மக்குரலால், தன் சின்ன நாவசைவால் நம் தமிழர் நாட்டிற்கு நல்லதமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொடுத்த கலையுலகப் பேராசான்.
உலகத்தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய 15 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (21-07-2016), அந்த ஒப்பற்ற கலை உலக மேதைக்கு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம். நாம் தமிழர்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.