வேலூரில் செவிலியர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதல் அரசப்பயங்கரவாதம் -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்

13

வேலூரில் இயங்கிவரும் தனியார் கல்லூரி மாணவிகள் மீது தடியடி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலூர் பில்டர்பெட் சாலையில் தனியாருக்குச் சொந்தமான செவிலியர் கல்லூரி மற்றும் மாணவியர் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதன் எதிரில் டாஸ்மாக் மதுபானக்கடையும் இயங்கி வருகிறது. கல்லூரிக்கு எதிரில் இருக்கும் இந்தக் கடையால் டாஸ்மாக் கடைக்கு வருவோர் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடப்பதும், வழியில் செல்வோருக்கு இடையூறு செய்வதும், கல்லூரியில் படிக்கும் பெண்களை கேலி செய்வதும், இரவு 12 மணிவரை தேவையற்ற சண்டை, சச்சரவுகள் நடப்பதுமாக இருந்து வந்தது. இதனால், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் கிட்டவில்லை. இந்நிலையில் 11-06-15 அன்று செவிலியர் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, பொதுமக்களோடு இணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, அதற்கு பூட்டுபோடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது அங்குவந்த காவல்துறை அதிகாரிகள், ‘போராட்டத்தைக் கைவிடாவிட்டால் மாணவிகளைக் கைதுசெய்வோம்’ என எச்சரித்திருக்கிறார்கள். மாணவிகள் போராட்டத்தைத் தொடரவே மாணவிகள் மீது காவல்துறை தடியடியை நடத்தியிருக்கிறது. கோயில், பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டருக்குள் டாஸ்மாக் கடை இயங்கக்கூடாது என்பது அரசு விதி. ஆனால், அதனையும், மீறி இந்தக் கடை இயங்கிவருகிறது. இப்படி விதிமுறைகளுக்கு மாறாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சனநாயக முறையில் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவியது சகித்துக்கொள்ளவே முடியாத அட்டூழியம். இது சனநாயகத்துக்கு எதிரான அரசப் பயங்கரவாதம்.

அண்டை மாநிலமான கேரளாவில் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, ‘மதுக்கடைகளின் மூலம் வரும் வருமானத்தைவிட எம் மக்களின் நலன்தான் முக்கியம்’ என அறிவித்து, மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், தமிழகத்தில் பால்முகம் மாறாத பிஞ்சுக்குழந்தைகள்கூட குடிக்கு அடிமையாக மாறிவரும் சூழலிலும் அரசு மதுபானக்கடைகளை நடத்தி, அதற்கு எதிராகப் போராடுபவர்களையும் தாக்குகிறதென்றால் அரசு யாருக்கானது? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அதனால், மக்களின் நலன், இளைய தலைமுறைப் பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தமிழகம் முழுக்க இருக்கிற டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும். அதற்குமுன், முதல்படியாக தமிழகம் முழுக்க பள்ளி, கல்லூரிகள் அருகில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடையை அமைப்பதற்கு இதுகாறும் அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தச் சம்பவத்தில் மாணவிகள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அரசு செய்யத்தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மக்களைத்திரட்டி மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.