சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அடைப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம்

46

தமிழ்நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தினால், கேரளத்திற்கு உணவு பொருட்களை நிறுத்துவோம்: நாம் தமிழர் கட்சி போராட்டம்

சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் கொண்டுவர அமைக்கப்பட்டுள்ள குழாய்களை கேரள அரசின் பொதுப் பணித்துறை அதிகாரிகள் சிமெண்ட்டை அப்பி அடைத்து வருவது இரு மாநிலங்களுக்கு இடையிலான சிறுவாணி அணை நீர் பகிர்வு ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும்.

சிறுவாணி அணையில் தண்ணீரைத் தேக்கி கோவை மாவட்டத்தின் குடி நீர் தேவையை நிறைவு செய்துகொள்ள கேரள அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்ட காலத்திற்கு முன்னரே, சிறுவாணி அணையின் நீர் மட்டம் அணையில் இருந்து திறந்துவிடப்படும் குறைந்த அளவிற்கு கீழே போகும்போது, அணையில் இருந்து தமிழ்நாட்டின் தேவைக்காக குடிநீர் கொண்டு செல்ல இக்குழாய்கள் புதைக்கப்பட்டிருந்தது. எனவே, இந்தக் குழாய்கள் எந்த விதத்திலும் இரு மாநில ஒப்பந்தத்திற்கு எதிரானது அல்ல. இதனை தமிழ்நாடு அரசின் பொதுப் பணி்த்துறை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இந்த உண்மை கேரள அரசிற்கும் தெரியும் என்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, கோவை மாவட்டத்தின் குடி நீர் தேவைக்காக எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிறுவாணி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதோ, அதில் இந்த குழாய்களின் மூலம் கொண்டுவரப்படும் நீரும் சேர்க்கப்பட்டுத்தான் கணக்கிடப்படுகிறது. உண்மை இவ்வாறிருந்தும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்தக் குழாய்களை அடைக்க முற்படுவது ஏன்?

இதற்குக் காரணம், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதென்றும், அதன் நீர் மட்டத்தை தற்பொதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதே. இதற்கு மேலும் முல்லைப் பெரியாற்று அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் போவதை தடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதால், தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணத்தாலேயே, சிறுவாணி அணையில் உள்ள குடி நீருக்கான குழாய்களை அடைக்கும் வேலையை கேரள பொதுப் பணித்துறை செய்து வருகிறது.

அதுமட்டுமல்ல, சிறுவாணி அணைப்பகுதியில் வாழ்ந்துவரும் 20 ஆயிரம் தமிழர்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளது கேரள காவல்துறை. ஒரே நாட்டில் ஒரு மாநிலத்திற்கு எதிராக மற்றொரு மாநிலம் இப்படி சட்டத்திற்கும், ஒப்பந்தத்திற்கும் புறம்பாக அடாவடித்தனத்துடன் நடந்துகொள்கிறது. இதனை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய அரசும்,அதன் நீர்வளத் துறையும் அமைதி காக்கின்றன.

இந்த அநியாயத்தை தமிழர்கள் எதற்காக சகித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது. தமிழ்நாடு சம்மந்தப்பட்ட ஒவ்வொரு பிரச்சனையிலும் தான்தோன்றித்தனமாக, ஒரு வன்மத்துடன் கேரள அரசு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை ஏற்கனவே இருந்த காங்கிரஸ் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதற்கு ஒரு முடிவு கட்ட, தமிழ்நாட்டிற்கு நீரை மறுக்கும் கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக செல்லும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் நாளை புதன்கிழமை நாம் தமிழர் கட்சி குதிக்கிறது.

வேறு எந்த ஒரு மாநிலத்தையும் விட, தமிழ்நாட்டில்தான், அதுவும் கோவை மாவட்டத்தில்தான் அதிக அளவிற்கு மலையாளிகள் வாழ்கின்றனர். சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீரை அவர்களும்தான் குடிக்கின்றனர். தனது மாநில மக்கள் பொருளாதார வளத்துடனும் பாதுகாப்புடனும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவதை கருத்தில் கொள்ளாமல், தமிழ்.நாட்டிற்கு நீரை மறுப்பதே தங்களது அரசியல் என்பதுபோல் கேரள அரசும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து நடந்துகொண்டு வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழர்களே திரளுங்கள், பெரும் போராட்டத்தில் குதிப்போம். நீங்கள் நீரை மறுத்தால், நாங்கள் உங்களுக்கு உணவை மறுப்போம் என்று காட்டுவோம். நாளை காலை கோவையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழர்கள் பெருந்திரளாக கூடுவோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திNTK 20140616 Speech at Sivakasi Part 2 MQTSV1
அடுத்த செய்திசேலம் மாவட்டம் ஓமலூரில் அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.