மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நாளை சென்னையில் பொதுக்கூட்டம்-சீமான்

28

20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்குப் பிறகும் இந்திய குடியரசுத்தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய கோரி நாளை 16.06.11 செவ்வாய்க்கிழமை சென்னையில் நாம் தமிழர் கட்சியும் பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து மாபெரும் பொதுக்கூட்டத்தை நாளை நடத்துகின்றன.இந்தக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர்.த.செ.மணி, இயக்குநர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன்,விடுதலை ராசேந்திரன்,சாகுல் அமீது, கலைகோட்டுதயம், பால்நீயூமென்.அய்யநாதன்,அற்புதம் அம்மாள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இது குறித்து இன்று நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்,இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பாற்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது. தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.அதன்படியே குற்றம் இழைக்காத நமது ரத்த சொந்தங்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோருக்கு 20 வருட கொடுமையான சிறைவாழ்க்கைக்குப் பிறகும்,தூக்குத் தண்டணை அளிக்கப்பட்டுள்ளது.நியாயத்தின் படியும்,நீதியின் படியும்,சட்டத்தின் படியும் தவறு இழைக்காத அவர்களின் விடுதலைக்காய் இறுதிவரை போராடி வெல்வது நமது முதற்கடமை.இந்த நிலையில் மரண தண்டனை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் என்னும் பதாகையின் கீழ் நாளை செவ்வாய்க்கிழமை மாலை தியாகராய நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு தமிழர்கள்,மனித உரிமைக்காய் களம் காணும் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமாய் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முந்தைய செய்திநாளை 16.08.11 அன்று சென்னையில் சீமான், கொளத்தூர் மணி பங்குபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திமதுரையில் இன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது