ர.சு.நல்லபெருமாள் மரணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு-சீமான் இரங்கல்.

112

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.நெல்லையின் மூத்த வழக்கறிஞரும்,தமிழ் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை நல்கியவருமான ஐயா ர.சு.நல்லபெருமாள் அவர்கள் மரணச்செய்தி நம் அனைவருக்கும் ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.

இளம் வயதிலேயே ர.சு.நல்லபெருமாள் அவர்களின் எழுத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது.அதனை எனக்கு கிட்டிய பேறு என்று தான் சொல்லுவேன்.சமூகப் பணியில் தம்மை அர்ப்பணிக்க எண்ணுபவர்களுக்கு அவரது நூல் ஒரு வாசலாக இருக்கும். நல்லபெருமாள் எழுத்து படிக்கும் எவரையும் சமூகத்திற்கு பங்களிப்பைச் செய்யும் எண்ணத்தை விதைக்கும்.தொடர்ச்சியாகத் துணை நிற்கும்.

அவரது “கல்லுக்குள் ஈரம்’ நாவலைப் படித்துத் தான் நான் போராளி ஆனேன் என்றும் அதில் வரும் ரங்கமணி பாத்திரம் தனக்கு மிகப்பெரிய துண்டுகோலாக இருந்தது என்றும் தேசியத் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கிறார். தலைவரைப்போல எத்தனையோ ஆயிரக்கணக்கான போராளிகளை இந்தச் சமூகத்திற்கு அவரது எழுத்துக்கள் அளித்திருக்கிறது என்பதே அவரது எழுத்தின் வல்லமைக்குச் சான்று.ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன்பு தனது நாவலில் காந்தியக் கொள்ககைகளை ஆதரித்த நல்லபெருமாள் அவர்கள் சில காலம் முன்பு அளித்த நேர்காணலில் இப்பொழுது அது ஒத்துவராது என்றும்  சொல்லியிருக்கிறார் என்பதையும் நாம் பதிவு செய்தாக வேண்டும்.மேலும் மாயமான்கள், மயக்கங்கள்,  திருடர்கள், நம்பிக்கைகள், தூங்கும் எரிமலைகள், உள்ளிய்ட்ட அவரது நூல்கள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றன.படிப்பவர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

”சிலைகளுக்கு மாலைகளை அணிவிக்கிறார்கள், சிந்தனைகளுக்கு மலர்வளையம் வைக்கிறார்கள்” என்பது போன்ற எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகளை அவர் அளித்திருக்கிறார். அவரது இழப்பு தமிழ்ச்சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.