‘அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபாவின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

1414

‘அறிவியல் தமிழின் தந்தை’ மணவை முஸ்தபா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு!
-சீமான் புகழாரம்

‘அறிவியல் தமிழின் தந்தை’ ‘கலைமாமணி’ மணவை முஸ்தபா அவர்கள் நேற்று 06-02-2017 காலை இயற்கை எய்தினார். இன்று 07-02-2017 காலை 12 மணிக்கு அவரது உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. மணவை முஸ்தபாவின் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தம் வாழ்நாள் பணியெனக் கொண்டிருந்த தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த மனத்துயருற்றேன். ஐயா முஸ்தபா அவர்களின் இழப்புத் தமிழ் எழுத்துலகில் ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, அவர்களது குடும்பத்தின் துயரில் நானும் பங்கேற்கிறேன்.

தமிழ்மொழி மீது தீராத காதல் கொண்ட பெருந்தமிழர் மணவை முஸ்தபா அவர்கள் தமிழைச் செம்மொழியாக்க அரும்பாடாற்றியவர்களில் முழுமுதற் பங்காற்றியவராவார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி என எட்டு துறைகளைச் சார்ந்த 8 லட்சம் கலைச்சொற்களைக் கொண்ட அகராதிகளை உருவாக்கி, ‘அறிவியல் தமிழின் தந்தை’ எனத் தமிழ் இலக்கிய ஆளுமைகளால் போற்றப்பட்டார். தனது வாழ்நாளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து உருவாக்கிய தமிழ் கலைச்சொற்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தைத் தாண்டும் என்பதிலிருந்தே இவரது அரும்பணியை அறிந்துகொள்ள முடியும். இவர் எழுதிய நூல்களில் ‘இசுலாமும் சமய நல்லிணக்கமும்’ எனும் நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசினையும், ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’ எனும் நூல், 1996 ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள்’ எனும் வகைப்பாட்டில் முதல் பரிசினையும் பெற்றிருப்பது இவரது இலக்கிய ஆளுமைக்குச் சான்றாகும்.

தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குனர், ‘புத்தக நண்பன்’ மாத இதழ் ஆசிரியர், யுனெஸ்கோ கூரியர் பன்னாட்டு மாத இதழின் ஆசிரியர், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் பதிப்பின் தலைமைப் பொறுப்பாசிரியர் என இவர் ஆற்றிய அரும்பணிகள் மகத்தானவை. இவரது தன்னிரகற்ற தமிழ்த்தொண்டுக்கு மணிமகுடம் சூட்டும்விதமாக 1985ஆம் ஆண்டு இவருக்குத் தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பெருந்தமிழர் முஸ்தபா அவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றுவதோடு நின்றுவிடாமல் தமிழ்ப்பற்றையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தும் காட்டினார். தமிழீழ விடுதலை மீதும், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் மிகுந்த ஈடுபாடும், பேரன்பும் நிறையப் பெற்றவராக விளங்கினார். தான் இசுலாமிய மார்க்கத்தை ஏற்று நின்றாலும் தன் பிள்ளைகளுக்கு அரபுப்பெயரை சூட்டாமல் செம்மலை, அண்ணல், தேன்மொழி எனத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டி, ‘இசுலாம் எம் வழி! இன்பத்தமிழ் எங்கள் மொழி!’ எனும் பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களின் வாக்குக்கேற்ப வாழ்ந்தார். அப்பெருமகனுக்குப் பெருமிதத்தோடும், நன்றியுணர்வோடும் நாம் தமிழர் கட்சி தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது. பேராண்மை கொண்டு வாழ்ந்த ஐயா பெருந்தமிழர் மணவை முஸ்தபா அவர்களின் வழியில் நம் உயிரினும் மேலான தமிழ்மொழி காக்க பாடுபடுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


https://goo.gl/gR32pA
07-02-2017
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமறைந்த ‘கலைமாமணி’ மணவை முஸ்தபாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார் சீமான்
அடுத்த செய்திசீமான் அழைப்பு: முப்பாட்டன் முருகனின் திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017