பாவேந்தர் பாரதிதாசன் 58ஆம் ஆண்டு மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

885

செய்திக்குறிப்பு: பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58ஆம் ஆண்டு நினைவுநாள் சீமான் மலர்வணக்கம் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 21-04-2022) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவப்படத்திற்கு முன் நினைவுச் சுடரேற்றி, மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார். உடன் நாம் தமிழர் கட்சியின் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் சந்திப்பு:

 

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு அடையாளமாக இருக்கக்கூடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவுநாள் இன்று. உணர்வற்று உறங்கி கிடந்த தமிழ்ச் சமூகத்தை உணர்ச்சிமிக்கப் பாக்களால் உசுப்பிய பெருந்தகை பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

‘நறுக்குவோம் பகையின் வேர், நாம் தமிழர், நாம் தமிழர், என்று முரசறைவோம் என்று பாடுகிறார். ‘குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி; கூண்டோடு போயிட்டு கொட்டடா முரசம்’ என்று பாடுகிறார். ‘சிங்கத்தின் குகைக்குள் சிறு நரிக்கு இடம் கொடுத்தோம்; செந்தமிழ்நாட்டின் உரிமை இழந்தோம்’, ‘பொங்கும் உணர்வில் எழுந்தமிழரசு; போர் தொடங்கிற்று கொட்டடா முரசு! என்று பாடி எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு உணர்வுச் சூடேற்றி உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலன் எங்களுடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். அவருடைய புகழை போற்றுகிற இந்நாளில் அவருடைய பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி உணவு பெற்று தமிழ்ப்பேரினத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் போராடி வருகிற இந்தத் தலைமுறை பிள்ளைகள் நாங்கள் பெருமிதத்தோடும் திமிரோடும் எங்கள் தாத்தாவுக்கு பாரதிதாசனுக்கு புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் மகிழ்வடைகிறோம். அவர் கண்ட கனவை எந்தச் சமரசமுமின்றி நினைவாக்குகிற வகையில் போராடுவோம் என்ற உறுதிமொழியை இந்த நாளில் ஏற்கிறோம்.

சனநாயக நாட்டில் கருத்துக்கு எதிர் கருத்து சொல்வதும், அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக கருப்புக்கொடி காட்டுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்வதும் மரபு தான்.  ஆளுநர் மீது கற்கள் எறிந்துவிட்டார்கள், கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று அரசியல் இலாபத்திற்காக பாஜக மடைமாற்றப்பார்க்கிறாகள். தமிழர்கள் அவ்வளவு அநாகரிகமானவர்களோ, வன்முறையாளர்களோ அல்லர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 20 தமிழர்களைச் சுட்டுக்கொன்று மரக்கட்டைகளோடு கட்டையாக போட்டபோது கூட தமிழர்கள் அறவழியில் போராடியாதைத் தவிர பெரிதாக எதுவும் எதிர்வினையாற்றவில்லை. ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்தபோது கூட இங்குள்ள தமிழர்கள் தங்கள் மீது தீயிட்டுக்கொண்டு செத்தார்களே ஒழிய சிங்களவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை.  அதுதான் தமிழர்கள் மரபு, ஏனெனில் தமிழர்கள் ஆகப்பெரும் சனநாயகவாதிகள். அதனால் ஆளுநர் மீது கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளை நான் ஏற்கவில்லை; எதிர்க்கிறேன். ஆளுநருக்கு எதிராக தமிழர்கள் நாங்கள் போராடுவதற்கு காரணம், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பதும், எத்தனையோ ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகும் எழுவர் விடுதலையை ஒற்றைக் கையெழுத்துக்காக உறங்க வைத்திருப்பதும் தான்.

தமிழர் என்று சொன்னால் பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள் என்றார்கள். 12 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்கிறோம். ஒரு பார்ப்பனரும் எங்களுடன் வரவில்லை. திராவிடர் என்றால் ஆரியர் வரமாட்டார்கள் என்றார்கள். இப்போது எச்.ராஜா என்ற ஆரியரே சொல்கிறார் நான்தான் திராவிடன் என்று. இதற்குத் திராவிடத் தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? திராவிடம் என்றால் இனம், இடம், மொழி, , திசை, வாழ்வியல் என்று மாற்றி மாற்றிக் கூறிக் குழப்பினார்கள். இப்போது வெறும் அரசியல் சொல் என்கிறார்கள். வாக்குத் செலுத்த தமிழர்கள் வேண்டும். அரசியலுக்கு மட்டும் திராவிடம் தேவைப்படுகிறதா? எங்களுக்கு இந்தியர், திராவிடர் என்ற முகமூடி தேவையில்லை. திராவிடத்தை எருமைமாட்டுடன் ஒப்பிடவில்லை. பாஜக தலைவரின் அண்ணாமலையின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக எருமையை உதாரணமாக காட்டி கேள்வி கேட்டேன். ஜனநாயக நாட்டில் அறவழியில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பிரதமர் வருகைக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டியபோது எங்கள் மீதும் வழக்குப் போடப்பட்டது. ஆளுநர் வருகைக்கு எதிராகப் போராடியதில் தவறில்லை.

தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் 9 பேர் அமைச்சர்களாக உள்ளனர். வேறு எந்த மாநிலத்தில் இந்த நிலை உள்ளது? மிகப்பெரிய இலாகாக்கள் அவர்களிடமே உள்ளது. எங்களை கோயிலிலிருந்து வெளியேற்றியது யார் ? தமிழ் பேசினால் நாக்கை அறுத்தது யார்? கோயிலுக்குள் போக விடாமல் தடுத்தது யார்? நிலங்களை பறித்து அரசுடைமையாக்கியது யார்? தெலுங்கு பிராமணர்களை கோயில்களில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓத நியமித்தது யார்? இத்தனையும் செய்து எங்களை தாழ்த்தவப்பட்டவர்கள் ஆக்கியது யார்? பொது விவாதத்திற்கு யார் தயார்? நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தானே ஒழிய, தாழ்ந்தவர்கள் இல்லை.

தமிழ்நாட்டில் காவல்துறையினரையே தாக்கும் அளவுக்கு அதிகரித்த வடமாநிலத்தவர் ஆதிக்கம், அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கோடி கணக்கில் பெருகிவிடும். ஒரு இனத்தின் பொருளாதாரம், அரசியல், அதிகாரம் பறிபோனால் அந்த இனம் அடிமைபட்ட இனமாகிவிடும். தமிழினத்திற்கு ஏற்கனவே மாற்றாரிடம்தான் உள்ளது. தமிழன் ஏற்கனவே அடிமைபட்ட இனமாகத்தான் இருக்கிறான். தமிழர்கள் இங்கிருந்தும் வெளியேற்றப்பட்டால் ஏதிலிகளாகபோகக்கூட வேறு நிலம் இல்லை.

நாங்கள் மூன்றாவது பெரிய கட்சி யார் என்ற இடத்திற்குப் போட்டியிடவில்லை. நாங்கள் முதல் இடத்திற்குப் போட்டியிடுகிறோம். வாழ முடியாத சூழலில் ஈழத்திலிருந்து வரும் தமிழர்ககளுக்கு கைகொடுத்து உதவ வேண்டிய பொறுப்பும், கடைமையும் நமக்கு உண்டு. அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டாமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கென முகாம் அமைத்துத் தங்க வையுங்கள். ஈழத்தில் தமிழர்கள் அனுபவித்த வலியை சிங்களவர்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள். இலங்கையில் நடக்கும் பொருளாதார நெருக்கடி விரைவில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வரும். பாவேந்தர் பாரதிதாசனை திராவிட ஆட்சியாளர்கள் கொண்டாடமாட்டார்கள். நாங்கள்தான் கொண்டாடுவோம். பாவேந்தர் பாரதிதாசனை மட்டுமல்ல எழுவர் விடுதலைக்கு உயிர்நீத்த செங்கொடியை, ஈழத்தமிழர்க்காக உயிர்நீத்த முத்துக்குமாரை இவர்கள் நினைவு கூறமாட்டார்கள்.

இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் பதிலளித்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஈரோடு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இசுலாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக மாற்றத்துடிப்பதா? – சீமான் கண்டனம்