அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

102

அச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் அச்சு காகித மூலப்பொருட்களின் விலை உயர்வால் அச்சக உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அச்சுத் தொழில்முனைவோர் பலமுறை கோரிக்கை வைத்தும் நசிந்து வரும்  அச்சுத்தொழிலை  பாதுகாத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய, மாநில அரசுகளின் தொடர் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டின் முக்கியத் தொழில் நகரமான சிவகாசியில் அச்சுத் தொழிலை மட்டும் நம்பி ஒன்றரை இலட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்திய ஒன்றிய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி  காரணமாகவும், கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாகவும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த அச்சு மை, காகிதம், காகித அட்டை, அலுமினிய தகடு மற்றும் ஒளி சுருள் ஆகியவற்றின் விலைகள், இந்த ஆண்டு தொடக்கம் முதல் இரு மடங்காக அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளன.

இதனால் அச்சக உரிமையாளர்கள்  அச்சுத்தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளாகி பல நூற்றுக்கணக்கான சிறு, குறு அச்சகங்கள் மூட வேண்டிய சூழல்
ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தும் ஏற்பட்டு அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும் உக்ரைன் – ரஷ்யா போர்ச்சூழல் காரணமாக அச்சு மூலப்பொருட்கள் இறக்குமதியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அச்சக உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

சிவகாசி அச்சகங்களிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் புத்தகங்கள், ஏடுகள், நாட்குறிப்பேடுகள், நாட்காட்டிகள் உள்ளிட்ட பல்வகையான அச்சு காகிதப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போதைய மூலப்பொருட்களின் விலையுயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அன்றாடப் பயன்பாடுகளான புத்தகம் மற்றும் ஏடுகளின் விலையும் பெருமளவு உயரும் சூழலும் ஏற்பட்டுள்ளதால், ஏழை எளிய மாணவர்களும்,  அவர்தம்  பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

ஆகவே, அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், உடனடியாக அச்சு காகிதத் மூலப்பொருட்களுக்கு இடப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவைவரியை முற்றிலுமாக நீக்கவேண்டுமென இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன்.

மேலும், மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்த்து விலையேற்றத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆவடி தொகுதி – தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திஆவடி தொகுதி – அன்னதானம் வழங்கும் நிகழ்வு