தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்.

293

தமிழக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கு அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் கிடைக்க தமிழக அரசு வழிவகைச் செய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 110 அகதிகள் முகாம்களில் ஏறக்குறைய 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 68,௦00க்கும் மேற்பட்டவர்களும், முகாம்களுக்கு வெளியே ஏறக்குறைய 35,000க்கு மேற்பட்டவர்களும், சிறப்பு முகாம் எனப்படும் தடுப்பு முகாம்களில் கணிசமான எண்ணிக்கையிலுமென ஒரு இலட்சத்திற்கும் மேலான ஈழச்சொந்தங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான பேரிடர் கால உதவிகளை அரசு செய்யாதிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

ஈழத்தமிழர் முகாம்கள் போதிய இடவசதியின்றி நெருக்கடிமிக்கதாக இருப்பதாலும், சுகாதாரமற்ற முறையிலும், சரியான கழிப்பிட வசதிகளிலில்லாத நிலையிலும் அக்குடியிருப்புகள் அமைந்திருப்பதாலும் அங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழக அரசு உடனடியாக முகாம்களின் சுகாதாரத்தை ஆய்வுசெய்து போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்து, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் உடல்நலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகிறது. ஆகவே, அங்கு வாழும் ஈழச்சொந்தங்களிடம் கொரோனா நோய்த்தொற்று சோதனைகளைச் செய்வதோடு, தடுப்பூசி முகாம்கள் அமைத்து அவர்களது உயிர்க்காக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டுமெனக் கோருகிறேன்.

தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையினர் அன்றாடம் வேலைகளைச் செய்து வாழ்வை ஓட்டும் அமைப்புசாரா தொழிலாளர்களாகத்தான் உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இப்பேரிடர் காலக்கட்டத்தில் அவர்களது வாழ்வாதாரமும், வாழ்க்கையும் முழுமையாகக் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதாகத் தற்போது அறிவித்து வழங்கி வரும் நெருக்கடிகால நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்கிட வேண்டும் எனவும், அனைத்துத் துயர்துடைப்பு உதவிகளும் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர் குடும்பங்களுக்கும் கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகச் சிறைகளிலுள்ள கைதிகளைக் கொரோனா நோய்த்தொற்றுப் பரவுலை தடுப்பதற்காகச் சொந்தப் பிணையில் விடுவிப்பது போல, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க ஆவணம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகளப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துநிலை ஊடகவியலாளர்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றி முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபத்மநாதபுரம் தொகுதி தேவர் குளத்தை தூய்மை செய்யும் பணி