நம்பிக்கையோடு இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்று மீண்டு வருவோம்! – சீமான் நம்பிக்கை

67

பேரன்பிற்கினிய என் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். உலகெங்கிலும் கொரோனோ என்கிற இந்த நோய்த்தொற்றி நுண்ணுயிரியால் பேரச்சம் பரவியிருக்கிறது. உலகமே ஒடுங்கி, உறைந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இதை எதிர்கொள்ள வேண்டியதேவை உருவாகியுள்ளது.
மருத்துவர்கள் அறிவுறுத்துவதுபோல் நம்முடைய கைகளை அடிக்கடி கழுவி தூய்மைப்படுத்திக் கொண்டு, வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைக் கொடுப்பதை தவிர்த்தல் என நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்த நோய்த்தொற்று தவிர்க்க முடியாத ஒரு போராக மாறிவிட்டது. ஆயுதங்களைக் கொண்டு தொடுக்கப்படும் போர் போல, கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரி ஓர் உலகப்போரைத் தொடுத்துள்ளது. இதை எதிர்கொள்கிற நாம் ஒவ்வொருவரும் போராளிதான் என்றாலும் களத்தில் நின்று தீவிரமாகப் பணியாற்றி கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், தூய்மைப் பொறியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள், காய்கறி, பால் முதலிய அத்தியாவசியப் பொருட்களைத் தந்து கொண்டிருப்பவர்கள்தான் களத்தில் முன்னணியில் நின்றுப் போராடும் போராளிகள். எனவே அவர்களுக்குத் துணையாக, உதவியாக நாம் இருக்க வேண்டுமென்றால் அரசு அறிவித்து இருப்பதுபோல இந்த நாடு அடங்கு உத்தரவை ஏற்று வீட்டுக்குள் நம்மை நாமே பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதுதான்.

“நம்முடைய பாதுகாப்புதான் நாட்டின் பாதுகாப்பு”, “வீட்டின் பாதுகாப்புதான், நாட்டின் பாதுகாப்பு”, என்கிற தெளிவும் புரிதலும் நமக்கு வரவேண்டும்.

நடைபெறும் இந்த நாடடங்கு யாரும் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. திணிக்கப்பட்டதும் அல்ல. தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. காலரா, பெரியம்மை, போலியோ போன்ற எத்தனையோ கொடிய நோய்களில் இருந்தெல்லாம் நாம் மீண்டுள்ளோம். அதுபோல இதிலிருந்தும் நாம் மீண்டுவருவோம். நம்பிக்கையோடு, பாதுகாப்பாக இருங்கள். நாம் வெளியில் செல்லாமல் இருப்பது, நம்மால் பிறருக்கு இந்த நோய்த்தொற்று வந்து விடக்கூடாது என்பதற்காக. நாம் பிறரை சந்திக்காமல் தவிர்ப்பது, பெருங்கூட்டத்தில் போய்ச் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதென்பது மற்றவர்களிடமிருந்து நமக்கு இந்த நோய்த்தொற்று வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
எனவே இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நம்முடைய நாம் தமிழர் உறவுகள் முடிந்தவரை உணவின்றி, நீரின்றித் தவிக்கும் உறவுகளுக்கு உதவுங்கள். முகக்கவசம் , கையுறை அணிந்து நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு மற்றவர்களுக்கு உதவியை செய்ய வேண்டும். ஏனேனில் அதைச் செய்யும்போது அவர்களும் பாதுகாக்கப்படவேண்டும், நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இதில் முதன்மையாகக் கவனிக்கவேண்டியது. நம்பிக்கையோடு இருங்கள், நாம் இதிலிருந்து மீண்டு வருவோம். வாழ்த்துகள்!

– சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி