அறிவிப்பு: பேரிடர் மீட்புப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக

644

நாள்: 30.03.2020

அறிவிப்பு: பேரிடர் மீட்பு பாசறை

அன்பார்ந்த உறவுகளே,

தமிழகமெங்கும் நாம் தமிழர் கட்சி உறவுகள் தனித்தனியாகவும், பல தன்னார்வ குழுக்களாகவும் பல சமுதாய மற்றும் பேரிடர்கால மீட்பு பணிகளைச் செய்துவருகிறோம். இம்மாதிரியான இடர்காலங்களில் மக்களுக்கு உதவுவது நமது இயல்பான உணர்வு மற்றும் இனக்கடமை என உள்வாங்கியே செயல்படுகிறோம்.  ஒக்கி புயல் போன்ற பேரிடர் காலங்களில் ஏற்கனவே நாம் மக்களோடு இணைந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். பேரிடர்காலங்களில் சிறந்த செயல்திட்டம் மற்றும் கூட்டமைப்போடு ஒரு தேர்ந்த அமைப்பாகச் செயல்பாட்டால்தான் குழுவின் பணி சிறக்கும். எனவே இனிவரும் பேரிடர்காலங்களில் நாம் சிறப்பாக மீட்புபணியில் ஈடுபடச் செம்மையன மிகச்சிறந்த அமைப்பொன்றை நிறுவ முடிவு செய்து பேரிடர் மீட்பு பாசறையைத் துவங்குகிறோம்.

பேரிடர் காலங்களில் மட்டும் பணியாற்றுவதே இந்த அமைப்பின் தலையாய நோக்கம் என்பதால் மற்ற பாசறைகைளைவிட இந்த அமைப்பு-பாசறை ஆற்றல் வாய்ந்ததாகவும கணப்பொழுதில் இணைந்து செயல்படும் வல்லமையும் வலிமை கொண்டதாக இருக்கும்படி வடிவமைக்கப்படுகிறது.  அனைத்து பாசறைகளின் ஆளுமைகள், மனம் குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர் பாசறையின் ஆளுமைகள் மற்றும் மிகத்திறமையான மருத்துவப் பாசறையின் ஆளுமைகளின் பங்களிப்போடும் மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஈடுபாட்டோடும் இவ்வமைப்பானது செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பொருட்டே இந்த அமைப்பிற்கெனச் சிறப்பான தனித்துவமான விதிகள் வகுக்கப்படுகின்றன.

தலைமை:-

இவ்வமைப்பானது தலைமை ஒருங்கிணைப்பாளரின்  கீழ் இயங்கும், இப்பாசறை குறித்துத் தலைமை ஒருங்கிணைப்பாளர்  எடுக்கும் முடிவே இறுதியானது.

இரட்டை அடுக்கு:-

இந்த அமைப்பானது ஆலோசனை குழு மற்றும் செயல் குழு என இரண்டடுக்காகச் செயல்படும்.

ஆலோசனை குழு மேற்சொன்ன அனைத்து பாசறைகளின் உறுப்பினர்கள் மற்றும மனம் குழு உறுப்பினர்கள் ஆகியேரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் ஒரு மாநில அமைப்பாக இருக்கும், மேலும் ஆலோசனைக்குழுவில் தொழில் நுட்ப அறிவு மிகுந்தவர்களுக்கும், துறைசார் வல்லுநர்களுக்கும், தீவிர மக்கள்நல பணியாளர்களுக்கும், மருத்துவம் மற்றும் சட்டம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கும், சமுதாயச் சேவைக்காகத் தயக்கமற்றுப் பொருளுதவி செய்பவர்களுக்கும் உறுப்பினராக முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆலோசனை குழு கட்டமைப்பு குழுவின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் இயங்கும்.

வருவாய் மாவட்டம் தோரும் செயல் குழுக்கள் அமைக்கப்படும், அவற்றை வழி நடத்த பேரிடர் மேலாண்மை அறிந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் கட்டமைப்பு குழுவின் மூலமாகத் தலைமையால் நியமிக்கப்படுவார்கள். 

அப்பேரிடர் மேலாண்மை வருவாய்மாவட்டப் பொறுப்பாளர்களின் கீழ், கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களும், தொகுதிப் பொறுப்பாளர்களும், ஒன்றியப் பொறுப்பாளர்களும்  செயல்படுவார்கள்.

செயல்பாட்டு முறை:-

கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் தகுந்த தன்னார்வலர்களை இனம் கண்டு அவர்களின் விவரங்களடங்கிய தொகுப்பு ஒன்றை தயார் செய்து தலைமைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதனடிப்படையில் தன்னார்வலர்கள் பேரிடர் மீட்பிற்கு அனுப்பப்படுவார்கள் மேற்படி விவர தொகுப்பு தன்னார்வலரின் பெயர், தகப்பனார் பெயர், வயது, பாலினம், முகவரி, கைபேசி எண், குருதிப்பிரிவு, நீச்சல் முதலான சிறப்புத் தகுதிகள் முதலியவற்றைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

செயல் குழு தன்னார்வலர் உறுப்பினர் தகுதிகள்:-

பேரிடர்காலப் பணியில் இக்குழு ஈடுபடப்போவதை கருத்தில் கொணடு உறுப்பினர்களின் தகுதிகள் பின்வரும் அடிப்படையில் முடிவுசெய்யப்படுகின்ற தன்னார்வலர் நாம்தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கவேண்டும். தன்னார்வலர் 20 வயது நிறைந்தவராகவும் 51 வயது நிறையாதவராகவும் இருக்கவேண்டும

கீழ்கண்ட அடிப்படை தகுதிகள் உள்ளவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கையில முன்னுரிமை அளிக்கப்படும்.

• உடல் உறுதி உள்ளவர்கள்

• சிலம்பம் கராத்தே போன்ற தற்காப்புகலை அறிந்தவர்கள்.

• நீச்சல் தெரிந்தவர்கள்.

• முதலுதவி செய்யத் தெரிந்தவர்கள்.

• கடல் நீச்சல் அறிந்த மீனவர்கள்.

• படகு செலுத்த தெரிந்தவர்கள்.

• செவிலியர்கள்.

• அவசர ஊர்தி ஓட்டத் தெரிந்தவர்கள்.

• துணை மருத்துவம் அறிந்தவர்கள்.

• சமையற்கலை அறிந்தவர்கள்.

கீழ்கண்ட துறைகளின் முன்னாள், இந்நாள் பணியாளர்கள்:-

• தீயணைப்புத் துறை.

• இராணுவம்.

• மருத்துவத் துறை.

• விண்வெளி.

• வானியல்.

• நீரியல்.

• கடலியல்.

• பொதுப்பணித்துறை.

வேறு சிறப்பு அனுபவம் உள்ளவர்களுக்கும், களத்தை நன்கு அறிந்தவர்களுக்கும் உறுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

குறிப்பு:- உறுப்பினர் குறிப்பிடும்படியான உடல் உபாதைகள் ஊனங்கள், தொடர் நோய்கள், தீவிர நோய்கள், தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோய்கள் ஏதும் இருக்கக்கூடாது. பேரிடர்மீட்பு என்பது உயிராபத்துகள் நிறைந்த பணி என்பதால் இந்தக் குழுவில் உள்ளவர்கள் தன்னார்வத்துடன், தன்விருப்பத்தோடு வருபவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

உறுப்பினர் சேர்க்கை:-

மேற்படி தகுதிகள் கொண்ட உறுப்பினர் எவரும் சம்மந்தப்பட்ட மாவட்ட,தொகுதி,ஒன்றிய செயலாளரை அணுகி உரிய படிவங்கள் மூலம் தங்களை மேற்படி குழுவில் இணைத்துக்கொள்ளலாம்.

கட்டுப்பாடு:-

இந்த அமைப்பு தலைமையின் அனுமதியில்லாமல் எந்ந மீட்பு நடவடிக்கைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது. மீட்புப்பணியில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எந்தக் காரியத்திலும் உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது.

பயிற்சி திட்டம்:-

குழுவில் இணைந்த உறுப்பினர்களுக்கு மருத்துவ முதலுதவி பயிற்சி, அவசரகாலச் சிகிச்சை பயிற்சி, பேரிடர் மேலாண்மை பயிற்சி, தீ விபத்து மீட்புப் பயிற்சி, வெள்ளகால மேலாண்மை பயிற்சி, நிலநடுக்கக் கால மேலாண்மை பயிற்சி உட்பட அனைத்து சூழல்களையும் கையாளும் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

செயல் திட்டம்:-

இந்த அமைப்புக் கட்டமைக்கப்பட்டவுடன் சம்மந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தலைமையின் ஒப்புதலோடு நம்மிடம் பேரிடர் மீட்புக்குழு ஒன்று தயாராக உள்ளதையும், நாம் பேரிடர் காலங்களில் மக்களுக்காகப் பேரிடர் மீட்பில் ஈடுபட விருப்பமாக, ஆயத்தமாக உள்ளதையும் மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாகத் தெரியப்படுத்துவார்கள். அரசுக்கு உதவிகள் தேவையான காலங்களிலும், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலும் நமது குழு பேரிடர் மீட்பில் இறங்கும்.

பேரிடர் மீட்பிற்கான் அனைத்து கருவிகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் பெற்று உரிய பாதுகாப்புடன் மட்டுமே மீட்புக்குழு தன்னார்வலர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபடுவார்கள்.

நன்றி.

முந்தைய செய்திபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திதவறானப் பொருளாதார முடிவுகளால் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா? – சீமான் கண்டனம்