சுற்றுச்சூழல் பாசறை – மாநிலக் கலந்தாய்வு | தீர்மானங்கள் | காணொளி – புகைப்படங்கள்

264

சுற்றுச்சூழல் பாசறை – மாநிலக் கலந்தாய்வு 02/02/2020

என்றேனும் ஓர் நாள் நிகழும் உலக மாற்றத்தை ஏதோ ஒரு சாதாரண விடியலில் சின்னஞ்சிறியோர் கூடியெடுக்கும் முடிவுகள் தான் தீர்மானிக்கும். அப்படி ஒரு விடியலை தான் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கனவுகளைக் கருக்கொண்ட அந்த நாள் சலமின்றி விடிந்தது.

தமிழ் நிலமெங்கிலும் இருந்து அன்றைய தினம் சாரிசாரியாக இளையோர் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைத்தண்டலம் எனும் சிற்றூரை சென்றடைய காரணமிருந்தது, அவர்கள் விடுதலை வேட்கையை உடலெங்கும் அப்பிக்கொண்ட அசாதாரண தினசரிகளைக் கொண்ட சாதாரணர்கள், அவர்களின் கண்களின் ஓரம் மண் விடுதலை கனவு முகாமிட்டிருந்தது. நம்மை உயிர்ப்பசையோடு உலவ வைத்திருக்கும் இந்த மண்ணையும் மலையையும் மரத்தையும் மழையையும் ஏனையவர் பார்க்கும் பார்வைக்கும் எங்களவர் பார்க்கும் பார்வைக்கும் வானொத்த வேறுபாடு உள்ளது, அவர்களின் செந்நிறக் குருதியில் சிறிது பச்சைப் பசுமை இயல்பாகவே இழையோடியிருந்தது.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறைத் தலைவர் ஐயா. மரம் மாசிலாமணி அவர்களின் “எழில் சோலை இயற்கை வேளாண் பண்ணை” பெயருக்கும் இயல்புக்கும் இடைவெளியின்றி இன்முகத்துடன் வரவேற்றது. அவரின் பெயரைப் போலவே தோட்டமும் மாசில்லாமல் அமைந்தது. வேளாண் கானியல் என்று விளிக்கப்படும் பண்ணைக்காடான அதில் அரிதான பல பறவைகளும் ஊர்வன உள்ளிட்ட பல உயிரினங்களும் வந்து செல்வதும் வசிப்பதுமாய் சிறப்புற அமைந்தது எழில் சோலை. சுற்றுச்சூழலுக்கென பாசறை கண்டு பசுமை செய்வோரின் முதல் மாநில கலந்தாய்வுக்கு என்று தேர்ந்த அந்த இடத்தின் பொருத்தப்பாடு அரசியல் நிறை அழகியல்.

தாய் நிலமெங்கிலும் மண் நேயமும் மாந்த நேயமும் கொண்டு பரவி வாழும் அனைத்து சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்களும் அங்கு வந்திருந்தனர். கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது, பல்வேறு சூழல் சார் காரணங்களை முன்னிறுத்தி நாம் செய்ய வேண்டிய கடமைகள், முன்னெடுப்புகள் குறித்த அறிவுசார் கருத்துகளை சுற்றுச்சூழல் பாசறையின் தலைவர் ஐயா மரம் மாசிலாமணி அவர்களும், துணைத்தலைவர் ஐயா காசிராமன் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் கல்வியாளருமான ஹுமாயுன் அவர்களும், சிறப்பு அழைப்பாளரான அன்பர் திரு. பனை சதிஷும் உறவுகளிடத்தில் தூவினர்.

 

இன்றளவில் பாராட்டத்தக்க பலரின் பங்களிப்போடு நாம் நகரங்கள் தோறும் கிராமங்கள் தோறும் வீடுகள் தோறும் முன்னேறிச் சென்றாலும், நம்மை, குறிப்பாக இப்பாசறையினை மற்றுமோர் சர்வதேச தரத்திற்கு இட்டுச்செல்ல மற்றுமோர் உயர்தளம் தேவைப்பட்டது. அங்கு தான் “வனம் செய்வோம்” என்ற அறம்சார் அறக்கட்டளை பிரசவிக்கப்பட்டது, அது திசைகள் தோறும் சென்றடைய வேண்டி வனம் செய்வோம் என்ற அடையாளம் தாங்கி சுற்றுச்சூழல் பாசறையின் பிரத்தியேக இணையதளமும் தொடங்கப்பட்டது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் துவங்கி வைத்து அறக்கட்டளையின் கடிதத்தாள் மற்றும் நன்கொடை ரசீதினை வெளியிட்டார். மேலும் முதல் நன்கொடையினையும் அவரே அளித்து உற்சாகமளித்தார்.

இன்றளவில் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது என்ற உண்மையை ஆழப்புரிந்து அதற்கேற்ப முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் ஒரே அரசியல் பேரியக்கமாக இருந்து வரும் நாம் தமிழர் கட்சியும் அதன் மக்கள் தொடர்பாக விளங்கும் சுற்றுச்சூழல் பாசறையும் ஏறத்தாழ அழிந்து அல்லது இழந்து விட்ட சூழல்சார் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய காலப்பேரறிவிப்பை உணர்ந்து மாநில கலந்தாய்வினூடாக அதிமுக்கிய சுற்றுச்சூழல் சிக்கல்களைக் குறித்தும் அதன் தீர்வுகளை குறிப்பிட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதனை பலதரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு தளத்திற்கும் எடுத்துச்சென்று மத்திய மாநில அரசுகளின் காதுக்கு எட்ட வழி செய்ய வேண்டிய காலப்பணி நமக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்து உளமாற களமாட உறுதியேற்கப்பட்டது.

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்காக சிறந்த செயல் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரிசுகள் வழங்கியதுடன் மூத்தாயாக முன்னின்று சூழலியல் பேராசானாக நம் ஒவ்வொருவரின் காலக்கடமைகளை நினைவூட்டி உரமேற்றினார். நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் முகமாகவும் முகப்பாகவும் விளங்கும் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்கள் தங்கியிருந்து தன் கைகளால் நட்டு வைத்து இன்றளவும் வாழும் மரங்களின் சாட்சியாக இம்மண்ணையும் அதற்கு நேரவிருக்கும் பேரிடர்களையும் எந்த விலை கொடுத்தேனும் தடுத்துக்காப்போம் என்ற உரம் ஏற்றிக்கொண்டு அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாயினர் மண்ணியல் சமர் வீரர்கள்.

இக்கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 1. காவிரிப்படுகையை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உடனே அறிவித்திட மத்திய, மாநில அரசுகளைக் கோருகிறோம். விளைநிலங்களை பாழாக்கும் வகையில் நிலங்களுக்கடியில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு தொடரா வண்ணம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக வலியுறுத்துகிறோம். மீத்தேன், உயர் மின்னழுத்தக்கோபுரம் அமைத்தல், நியூட்ரினோ ஆய்வு, விளைநிலங்கள், காடுகள் மற்றும் மலைகளை அழிக்கும் எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களை கைவிட்டு அவற்றிற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து அவற்றை செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது. பல்வேறு சுற்றுச்சூழல் முறைகேடுகளுக்கு உள்ளான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கா வண்ணம் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்து நடைமுறைப்படுத்துமாறும், தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடிவடிக்கைகளுக்காகப் போராடிய சூழலியல் ஆர்வளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவர்கள் தொடர்ந்து இயங்க ஒத்துழைப்பைத் தருமாறும் தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறோம்.
 1. அணுக்கழிவு மேலாண்மை தொடர்பான இறுதி முடிவெடுக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தியை நிறுத்தி வைக்கவும், அதன் விரிவாக்கப் பணிகளைக் கைவிடவும் மத்திய அரசை வலியுறுத்துவதோடு, பிற நாடுகளைப் போல் இந்தியாவும் இத்தகைய ஆபத்து நிறைந்த அணுவுலை மின்னாக்க ஆலைகளைக் கைவிட்டு மாற்று வழி மின்னாக்கத் திட்டங்களை செயல்படுத்த முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
 1. இயற்கை வேளாண்மைக்கு எதிரான, மக்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், காய்கறிகள் அவற்றின் விதைகள் பற்றிய களப்பரிசோதனை, உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்குமாறு தமிழக அரசைக் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வலியுறுத்துகிறோம்.
 1. தமிழகம் முழுவதிலுமுள்ள ஆற்று மணல், தாது மணல், கல் மற்றும் மலை மணல் குவாரிகளில் கட்டுப்பாடின்றி நடைபெறும் வளக் கொள்ளைகளை உடனடியாக தடுத்தி நிறுத்தி, மீட்டுருவாக்கம் செய்ய இயலாத இத்தகைய இயற்கை வளங்களை மனிதப் பேராசையிலிருந்து பாதுகாத்திட உரிய திடமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசைக் வலியுறுத்துகிறோம். அனைத்து உயிர்களுக்கும் பொதுவான நீரை முழுவதும் வணிக மயமாக்குவதைக் கண்டிப்பதோடு, நீர்நிலைகளில் இருந்தும், நிலத்தடியிலிருந்தும் நீரை கட்டுப்பாடின்றி பெருமளவில் உறிஞ்சும் குளிர்பான நிறுவனங்கள், மது உற்பத்தி ஆலைகள், வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள் போன்றவற்றை மீளாய்வு செய்து எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
 1. திருப்பூரைச் சுற்றியுள்ள சாயப் பட்டறைகள் மற்றும் வேலூரைச் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்து அங்குள்ள நீர்நிலைகளை அத்தொழிற்சாலைகள் மேற்கொண்டு மாசுபடுத்தா வண்ணம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்திடுமாறு தமிழக அரசைக் வலியுறுத்துகிறோம். பெருந்துறை, கடலூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் அங்குள்ள பல தரப்பட்ட ஆலைகளால் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுத்தி நிறுத்திட ஒரு உயர்மட்ட ஆய்வுக் குழுவை உருவாக்கி இத்தகைய தொழிற்பேட்டைகளை மறு ஆய்வு செய்து மேற்கொண்டு சுற்றுச்சூழல் கெடாதவாறு கட்டுப்படுத்திட தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். வேளாண் நிலங்களையும், நிலத்தடி நீரையும் பாழாக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பெரும் தனியார் முதலாளிகளால் நடத்தப்பட்டு வரும் இறால் பண்ணைகளை முறையாக ஆய்வு செய்து அவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மேற்கொண்டு சேதாரம் ஏற்படாமல் தடுக்குமாறு தமிழக அரசைக் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது.
 2. கடந்தாண்டு மத்தியில் ஏற்பட்ட அமேசான் காட்டுத்தீ மற்றும் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்து இந்த நாள் வரை பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயென கோடிக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்த இந்த தீ விபத்துகளில் சிக்கி எரிந்து உயிர்விட்ட கோடிக்கணக்கான விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும், மரம், செடி, கொடிகளுக்கும், மனிதர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதைப் போன்ற பெருங்கொடுமையான நிகழ்வுகள் இப்புவியில் இனி நிகழா வண்ணம் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு செயல்திட்டத்தை வகுத்து இதனை உடனே செயல்படுத்துமாறும், அதற்கு இந்திய அரசு முன்னின்று துணை புரியுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இயற்கை விதிகளுக்கு முரணாக பெரும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு ஆறுகளோடு தொடர்புடைய அழிந்து கொண்டிருக்கும் சிற்றாறுகளை மீட்டு அவற்றை இணைப்பதன் மூலமும், இன்ன பிற ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அவற்றோடு இணைப்பதன் மூலமும் வெள்ளப்பெருக்கைத் தவிர்ப்பதோடு, மழை நீர் கடலில் சென்று கலப்பதை தவிர்க்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவில் உயர்த்தவும் உதவுமென அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 1. மிக வேகமாக அழிந்து வரும் தமிழக அரசின் சின்னமும், சூற்றுச்சூழலுக்கு எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியதும், தமிழர் தொல் குடி மரமுமான பனையை அழிவிலிருந்து மீட்டு அதன் எண்ணிக்கையை பெருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற 10 லட்சம் பனை விதை நடும் விழாவில் பங்கேற்று அந்த இமாலய சாதனையை செய்து முடித்த நாம் தமிழர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அதில் பங்கேற்ற பொது மக்களுக்கும் இப்பாசறை தனது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
 1. மண்ணை மலடாக்கும் மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ தடை விதித்த தமிழக அரசைப் பாராட்டும் இவ்வேளையில் இவ்விதி வந்த தொடக்கத்தில் நல்ல பலனைக் கொடுத்து பிறகு நாளடைவில் இந்த விதிமுறையானது நீர்த்துப் போகும் நிலைக்கு இப்போது வந்துவிட்டபடியால் இதனை உடனே மறு ஆய்வு செய்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய வழிவகைகளை ஆய்வு செய்யுமாறும், அத்தகைய நெகிழி உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கும் தடைவிதிக்க பரிசீலிக்குமாறும் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, தமிழக அரசைக் கோருகிறது.
 1. பல்லுயிர்ப் பெருக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் பூச்சிகளில் மூன்றில் ஒரு பங்கு வேகமாக அழிந்து வரும் சூழலில், செயற்கை உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் வேளாண்மைக்கு பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்து அவற்றிற்கு பதிலாக தமிழகம் முழுவதும் இயற்கை உரப் பண்ணைகளை அரசே திறந்து இயற்கை வேளாண்மையை ஒரு பரந்துபட்டளவில் மாநிலம் முழுக்க கொண்டு வர தமிழக அரசு முயற்சியெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அழிந்து வரும் பாரம்பரிய நெல் வகைககளை மீட்பதுடன், அனைத்து விதமான பாரம்பரிய வேளாண் பயிர்களையும் மீட்டுருவாக்கம் செய்யும் வகையிலான ஒரு தனித்த கொள்கைத் திட்டத்தை உடனே வகுத்து அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஆவண செய்யுமாறு தமிழக அரசைக் கோருகிறோம்.
 1. உலகளவில் சிறப்பு வாய்ந்த சதுப்பு நிலப் பகுதிகளாக விளங்கும் வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை, பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி மேற்கொண்டு அங்கு எந்தவிதமான கட்டடக் கட்டுமானத்திற்கொ, தொழிற்சாலைகள் தொடங்கவோ அனுமதிக்காது, உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் பறவைகளுக்கும், அங்கேயே வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் இப்பகுதிகள் ஒரு சிறந்த சரணாலயம் போல் இயங்கிட, அதன் வழியே இவ்வுலகின் பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தொடர்ந்திட, அழிந்துவரும் அந்த சதுப்பு நிலப்பகுதிகளைப் பாதுக்காக்கப்பட்டப் பகுதிகளாக அறிவிக்க தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வலியுறுத்துகிறோம். புதிய சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவும், கட்டிடங்களைக் கட்டுவதற்காகவும் அதிகளவிலான மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டிப்பதுடன், அவ்வாறு மரங்களை வெட்டாது அவற்றை வேரோடுப் பிடுங்கி மாற்று இடங்களில் நடும் வகையிலான செயல்திட்டத்தை மாநிலம் முழுவதும் முறையாகச் செயல்படுத்துமாறும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். 38 சிகரங்கள், 126 நீர்வீழ்ச்சிகள், 139 வகையான பாலூட்டிகள், 508 வகையான பறவையினங்கள், 179 வகையான இருவாழ்விகள், 250 வகையான ஊர்வனங்கள், 7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள் மற்றும் மூலிகைச்செடிகள், 10 வகையான காட்டுத்தேனீக்கள், 6,000 வகையான பூச்சிகள், 288 வகையான மீன் வகைகள் என இவை அனைத்திற்கும் அடைக்கலம் தந்து இவ்வுலகின் மிகப்பெரிய பல்லுயிர்களின் தொட்டிலாக விளங்கும், 6 மாநிலங்களைச் சேர்ந்த 25 கோடிக்கும் அதிகமான மக்களின் நீராதாரமாகவும் விளங்கும் 1,60,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளை மனிதப் பேரழிவிலிருந்து தடுத்து பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளை உடனே செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
 1. சென்னை மாநகரில் மக்கள் பெருமளவில் பரவி வாழும் இடங்களில், குறிப்பாக 270 ஏக்கரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியான பெருங்குடியிலும், 270 ஏக்கரில் கொடுங்கையூரிலும் மிகப் பெரிய குப்பைக் கிடங்குகளை வைத்துள்ள சென்னை மாநகராட்சி அதன் விதிகளுக்கு முரணாக குப்பைகளை முறையாகப் பிரித்து மறுசுழற்சி செய்யாமல் அப்படியே விடுவதன் விளைவாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசுபடுவதோடு காற்றிலும் நஞ்சு கலந்து அப்பகுதி மக்களுக்கு எண்ணற்ற நோய்களைத் தருவதுடன் பிற உயிரினங்களும் அந்நிலப்பரப்புகளில் வாழ இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளதை இனிமேலாவது அரசு உணர்ந்து உடனடியாக அக்குப்பைக் கிடங்குகளை அங்கிருந்து அகற்றி மறுசுழற்சி செய்வதோடு மேற்கொண்டு வரும் குப்பைகளை நகருக்கு வெளியில் எடுத்துச்சென்று முறையான மறுசுழற்சி செய்யத் தேவையான திடக்கழிவு மேலாண்மை ஆலைகளை நிறுவுமாறும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகிறது.
 1. மனிதர்களுக்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் பொதுவான காடுகளை, கடற்பரப்புகளைத் தனியாருக்கு விற்கும் முடிவுகளைக் கைவிடுமாறு மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்வதோடு, அவற்றை எதன் பொருட்டும் ஆக்கிரமிப்பு செய்வதை இப்பாசறை வன்மையாகக் கண்டிக்கிறது.
 1. தமிழ்நாட்டிலுள்ள ஆறு, ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் உடனே அகற்றுவதுடன், அவற்றைத் தூர்வாரி தொடர்ந்து முறையாக நிர்வகிக்க தமிழக அரசைக் கோருவதுடன், அப்பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்களுக்கு எவ்வித இடையூறும் நேரா வண்ணம் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
 1. இயற்கை வளங்களின் மீதான மனிதர்களின் கட்டுப்பாடற்ற பேராசை, சுற்றுச்சூழல் குறித்த அலட்சியம் மற்றும் அது குறித்த போதிய விழிப்புணர்வின்மையினால் ஏற்பட்டுள்ள புவி வெப்பமயமாதல் காரணமாக புவியின் வெப்பம் இப்போது இருப்பதை விட 3 மடங்கு அதிகமாகப்போவதோடு, இதன் காரணமாக கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதால் 2100-ஆம் ஆண்டு வாக்கில் கடல் நீர் மட்டம் 60-செ.மீட்டரிலிருந்து 110- செ.மீட்டர் வரை உயரக்கூடிய அபாயமுள்ளது. இப்படி கடல் நீர் மட்டம் உயர்வதால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்களென ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சூழலியல் ஆராய்ச்சி அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். சென்றாண்டில் மட்டும் உலகளவில் இயற்கைப் பேரிடர்களால் வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடிக்கும் மேல். கடல் நீர் மட்டம் உயர்வதால் பெரிதும் பாதிக்கப்படுவது இந்தியா போன்ற கடல் சூழ்ந்த நாடுகள் தான். குறிப்பாக இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் சென்னை உள்ளிட்ட கடலோர நகரங்களுக்கு பெரிய ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் புயல் உருவாவது 32 சதவீதமும், பத்து ஆண்டுகளில் 11 சதவீதமும் உயர்ந்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலை சரி செய்ய, இப்புவியை பேரழிவிலிருந்து மீட்டுக் காப்பாற்ற உலகளவில் ஆளும் அரசுகளும், பொது மக்களும் இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமெனவும், அதற்கான விழிப்புணர்வை உருவாக்கி மக்களைத் தயார்படுத்தும் பணிகளை இப்பாசறை தொடர்ந்து மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
 1. இந்திய அரசியலில் ஏறக்குறைய முதன்முறையாக பசுமை அரசியலை கையிலெடுத்துள்ள நாம் தமிழர் கட்சியில் மரம், செடி நடுதல், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், நெகிழி ஒழிப்பு, விதைப்பண்ணை, நாற்றுப்பண்ணை என பல சூழலியல் தளங்களில் இயங்கிவரும் இப்பாசறையின் உறுப்பினர்களுக்கும், அதற்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இப்பாசறை தனது புரட்சிகர வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 2021 க்கான இப்பாசறையின் சிறப்பு செயல்திட்டங்களை அனைவரும் இணைந்து நிறைவேற்றுவதெனவும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான அனைத்து விதமான நாசகரத் திட்டங்களையும், பணிகளையும் முழு மூச்சாக எதிர்ப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதுடன் அதற்கான புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜயராகவன்,
செய்தித் தொடர்பாளர்,
நாம் சுற்று கட்சி-சுற்றுச்சூழல் பாசறை

[WRGF id=92666]