செய்திக்குறிப்பு: இயற்கை உழவர் மூன்றாம் ஆண்டு நெல் அறுவடை திருவிழா – உலகம்பட்டி(சிவகங்கை) | சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் – உழவர் பாசறை
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இயற்கை விவசாயி உசிவராமன் அவர்கள், சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கரில் 9 பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் அழியும் தருவாயில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் முயற்சியில் இயற்கை விவசாயிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிங்கம்புணரி எஸ். புதூர் அருகேயுள்ள உலகம்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி உ.சிவராமன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாரம்பரிய நெற்பயிர்களை சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் சுமார் 10 ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா, காட்டுயானை, கருடன் சம்பா, செம்புழுதி சம்பா, ஆத்துார் கிச்சடி சம்பா, துாயமல்லி, குளவாழை, கருப்பு மற்றும் சிவப்பு கவுனி, சீரக சம்பா ஆகிய 9 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சிறந்த இயற்கை மற்றும் தோட்டப்பயிர் விவசாயிக்கான விருது கொடுத்துள்ளது. அவர் இரண்டு முறை பாரம்பரிய விவசாய ஆர்வலர்கள், அதிகாரிகளை வரவழைத்து நெல் அறுவடை திருவிழா நடத்தியுள்ளார்.
அதன்படி நேற்று 29-01-2020 நடைபெற்ற இந்த ஆண்டு அறுவடைத் திருவிழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயற்கை விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வயலில் விளைந்து நின்ற கரும்பு, கவுனி, நெல் உள்ளிட்டவற்றை அறுவடை செய்தனர். இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல்:-
இயற்கை வேளாண் பேரறிஞர் அப்பா நம்மாழ்வாருடைய பேச்சுகளூம், செயல்பாடுகளும், என்னைப் போன்றவர்களின் பேச்சுகளும், இலட்சியங்களும் தாய் நிலம் தேடி கிராமம் தேடி இயற்கை வேளாண்மை செய்வது என்பதே. இன்றைக்கு இதை சாதித்துக் காட்டி உள்ளார்கள் நம் தம்பிகள்.
ஜப்பான் வேளாண் பேரறிஞர் மசானபு ஃபுகோகா-வினுடைய ஒற்றை வைக்கோல் புரட்சியினை முன்னெடுத்து நம்முடைய அப்பா நம்மாழ்வார் அவர்கள் ஒரே ஒரு நாற்றினை வைத்து அதை என்பது நாற்றுகளாக பெருக்கி சாதித்து காட்டினார்.
நம்முடைய பாரம்பரிய நெல் விதைகளை எல்லாம் நாம் தொலைத்து விட்டோம். கத்தரி, தக்காளி விதைகள் இல்லை. 2013 ஆம் ஆண்டு ஒரே நாளில் 22972 பாரம்பரிய நெல் விதைகளை மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட்டனர். எனவே விதையை தொலைத்துவிட்ட நாட்டு மக்களாக நாம் இருக்கிறோம். இந்த சூழலில் எங்கள் அப்பா நம்மாழ்வார் எங்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வு அவருடைய பிள்ளைகளாக வந்த நெல் ஜெயராமன் போன்ற பேரறிஞர்கள், உழவர் குடிமக்கள் ஊர்ஊராக சென்று இந்த பாரம்பரிய நெல்விதைகளை சேமித்து எங்களுக்கு தந்தனர்.
அதில் சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட நெல்விதைகளை பயிரிட்டு என்னுடைய தம்பிகள் மீட்ருவாக்கம் செய்கின்றனர். மூன்றாவது ஆண்டாக இந்த அறுவடை திருநாள் விழா நடைபெறுகிறது.
என்னுடைய தம்பி சிவராமனின் இந்த முயற்சியானது அவருக்கு பின்வருகிற அவருடைய வயதொத்த அல்லது அவருக்கு மூத்த வேளாண்மை புரிவோரை பாரம்பரிய வேளாண்மை நோக்கி ஈர்ப்பதற்கான முயற்சிதான் இது. இப்பொழுது நாடெங்கிலும் இயற்கை வேளாண்மைக்கு மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருக்கிறோம். அதில் ஒரு படிநிலை பாய்ச்சலாகதான் இந்த நெல் அறுவடை திருநாள் செயல்பாடு இருக்கும். இது ஒவ்வொராண்டும் தொடரும். வருங்காலங்களில் பல தளங்களிலும் என்னுடைய பிள்ளைகள் இதை முன்னெடுத்து செல்வார்கள்.
கேள்வி: தமிழில் குடமுழுக்கு கேட்போரை எச்.ராஜா பயங்கரவாதிகள் என்று விமர்சித்துள்ளாரே?
பதில்: பைத்தியக்காரர்களுடைய அர்த்தற்ற புலம்பல்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
தமிழில் குடமுழுக்கு வேண்டும் என்று தமிழர்களாக நாங்கள் கேட்கிறோம். கோயில்கள் கட்டியது யாரு? எங்க மூதாதை அருண்மொழிச்சோழன். கோயில் கட்டியது யாருக்கு? எங்கள் பாட்டன் சிவனாருக்கு. கோயில் கட்டிய சித்தாள் கொத்தனார் யாரு? தமிழர்கள். கட்டியது தமிழன், உள்ள இருக்கிற சாமி எங்களது, கும்பிடுவது நாங்கள்! தமிழன் கட்டிய கோயிலில், தமிழ் இறைவனை, தமிழில் வழிபடுவதுதானே மரபு? இதில் சமஸ்கிருதம் எங்கிருந்து வந்தது.? இதில் எனக்கும் இறைவனுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எதற்கு? நான் என்ன சொல்கிறேன் என்று என் கடவுளுக்கு தெரியாது, கடவுள் என்ன கேட்கிறார் என்று எனக்கு தெரியாது! இன்று அவர்கள் இதை பேசிக் கொண்டிருக்கலாம், நாளை ஒருநாள் எங்களிடம் அதிகாரம் வரும்போது அதுவாக நடக்கும்.
கேள்வி: குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று அதே எச்.ராஜா சொல்லியுள்ளாரே?
பதில்: எச். ராஜா முதலில் குடியுரிமைச் சான்றிதழ் காட்டட்டும். அதன்பிறகு நாட்டு மக்களிடம் கேட்கலாம். அமித்ஷா, மோடி முதலில் தாங்கள் படித்ததற்கான சான்றிதழை காட்டட்டும்.
கேள்வி: டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்த அதிகாரிகளின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று வேல்முருகன் சொல்லியுள்ளாரே?
பதில்: அந்த மாதிரி ஒரு கடும் நடவடிக்கை தேவைதான். பணியிடை நீக்கம் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நிரந்தர பணிநீக்கம் தேவை. எங்கள் ஆட்சி காலத்தில் இது போன்ற முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு நிரந்தர பணிநீக்கம்தான். அது தவிர அவருடைய குடும்பம் சார்ந்த யாருக்கும் அரசுப்பணி கிடையாது. அப்போதுதான் இது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். எத்தனை ஆண்டுகளாக இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளது. இப்பொழுது தெரிந்துவிட்டது. ஆனால் எவ்வளவு காலமாக தகுதியற்ற அதிகாரிகள் எவ்வளவு பேர் உள்ளே போய் உள்ளார்கள்? இதை நாம் எப்படி சகித்துக் கொள்ளமுடியும். எனவே இந்த மாதிரியான முறைகேடுகளை தடுக்க வேண்டுமென்றால் அவர் சொல்வது மாதிரியான நடவடிக்கை கண்டிப்பாக தேவை.
கேள்வி: ஐந்து மற்றும எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதே?
பதில்: நாம் 5 மற்றும 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வே தேவையில்லை என்கிறோம். அது மிகப்பெரும் கொடுஞ்செயலாக மாறிவிடும். மனநோயாளிகளாக நம் பிள்ளைகளை மாற்றிவிடும். அவர்கள் பிஞ்சிலேயே வதங்கிப் போய் விடுவார்கள். ஒருவேளை தேர்வில் தோற்றால் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய மனமுதிர்ச்சி அவர்களிடம் கிடையாது. புரிந்து கொள்ளாமல் ஏன் இதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே இந்த தேர்வுகளும் பாடமுறைகளுகளும் சுமை என்று நாங்கள் கருதுகிறோம். இதில் கூடுதலாக ஒரு மணி நேரம் வேறு? இந்த பொதுதேர்வை போராடி நாங்கள் நிறுத்துவோம். அதற்காக வழக்கு தொடர இருக்கிறோம்.
கேள்வி: நீட் தேர்வினால் மருத்துவ துறைகளில் தமிழக மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் நேற்று கூட இரண்டு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதே?
பதில்: தமிழர் தாய் நிலம் மாற்றார் வேட்டைக் காடாக மாறிவிட்டது. வள வேட்டை , நில வேட்டை எல்லாமே நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்வி அனைத்தும் விற்கப்பட்டு விட்டது. வட இந்தியர்கள் வந்து வங்கிப்பணி உள்ளிட்ட எல்லா பணிகளிலும் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் மருத்துவத்தில் அத்தனை இடங்களையும் வட இந்தியர்கள் தான் நிரப்புகின்றனர். அரிதரிதாக ஒன்றிரண்டு இடங்களில் எங்கள் பிள்ளைகள் இருக்கின்றனர். இது எங்களுடைய மக்கள் கட்டிய வரிப்பணத்தில், எங்களுடைய மருத்துவ வசதிக்காக, நாங்கள் ஏற்ப்படுத்திய மருத்துவ கட்டமைப்பில் அவர்கள் படித்து போவார்கள். அதில் என் தாய்க்கு மருத்துவம் பார்ப்பார்களா? என் தாயின் மொழி அவர்களுக்கு புரியுமா? வட இந்தியர் ஒருவர் படித்தால் அவர் எங்கே மருத்துவம் பார்ப்பார்? தமிழ்நாட்டில் மருத்துவம் பார்ப்பாரா? எங்கு சம்பளம் அங்கு கிடைக்கின்றதோ அங்குதான் பார்ப்பார். எனில் எங்களுக்கு யார் சேவை செய்வது? இதில் நீதிமன்றம் நீட் தேர்வை தடை செய்ய முடியாது என்பது ஏற்புடையதல்ல. இது பாராளுமன்ற சட்டமன்ற சனநாயக ஆட்சிமுறையா அல்லது நீதிமன்ற சனநாயக ஆட்சி முறையா?
கேள்வி: நடிகர் ரஜினிகாந்த் மீது வருமான வரித்துறை தொடர்ந்த அபராத வழக்கை வாபஸ் பெற்றுள்ளனரே, அதை பற்றி உங்கள் கருத்து?
பதில்: வருங்கால நாட்டின் தலைவர் அவர்தானே. அதனால் அவரது வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். அவருக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என்று நினைக்கிறார்கள். அவரை பாதுகாக்கதானே இந்த அதிகாரங்கள் அனைத்தும் வேலைசெய்கிறது.
கேள்வி: தமிழ்நாட்டில் சுங்கசாவடிகளில் அடிக்கடி மோதல் போக்கும், தாக்குதல்களும் நடைபெறுகிறதே?
பதில்: அடிமை இந்தியாவில் இருந்தபோது கூட 50 கிலோ மீட்டருக்கு ஒருதடவை கப்பம் கட்டி நாங்கள் பயணித்தது இல்லை. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில்? பயணிக்க தம் மக்களுக்கு சரியான பாதையைக் கூட போட்டு தராத என் தேசம், எப்படி சரியான பாதையில் பயணிக்கும் என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.
சாலை வரி முதலிலேயே வாங்கி கொள்கிறார்கள். ஒரு ஈருருளி வாங்கினாலும் , ஒரு மகிழுந்து, பார உந்து உள்ளிட்ட எந்த வாகனம் வாங்கினாலும் சாலை வரி வாங்கி கொள்கிறீர்கள்? அந்த சாலைவரி எந்த சாலையில் நான் பயணிக்க வாங்கினீர்கள்? ஒரு மகிழுந்து வாங்கும்போது மூன்று லட்சம் ரூபாய் சாலைவரி என்று வாங்கினார்கள். பிறகு எதற்கு இப்போது 50, 75, 80 ரூபாய் என்று ஐம்பது கிலோ மீட்டருக்கு என்று இன்றுவரை பணம் வாங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில்லை.
எதனால் இங்கு பிரச்சினை வருகிறது என்றால், 100 கிலோ மீட்டர், 200 கிமீ என்று சாலைகளை ஏலம் எடுத்துக்கொள்வது. மொழி புரியாத வட இந்தியர்களை பணிக்கு அமர்த்திவிடுவது, அதில் விருப்பம் போல் பணத்தை வசூலிப்பது. அவசரமாக பயணம் செய்பவர்களைகக்கூட நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் காக்க வைப்பது. இதில் தான் நம் மக்கள் கோபப்படும்போது, மொழி புரியாமல் அவன் ஏதோ பேச, பிரச்சனைகள் வருகிறது. இதையெல்லாம் தமிழக அரசு சரி செய்யாது. ஏனென்றால் பாரதிய ஜனதாவின் ஆட்சியின் நீட்சிதான் இந்த அரசு. எனவே இது தடை செய்யாது.
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கூட நாடு முழுமைக்கும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்தியாவின் எந்த மாநிலமும் இதை செயல்படுத்த தொடங்காதபோது, இவ்வளவு அவசர அவசரமாக இதை கொண்டுவர வேண்டிய தேவை என்ன? பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த பொதுத்தேர்வு செயல்படுத்தவில்லை. நாங்கள்தான் முதலில் செயல்படுத்தினோம் என்று பாஜகவிற்கு தெரிவிப்பதற்கு இதை செய்கிறது அதிமுக அரசு.
கேள்வி: பெரியார் குறித்து ரஜினி விமர்சனம் செய்துள்ளாரே?
பதில்: துக்ளக் படித்தால் கூட இல்லை, வைத்திருந்தாலே அறிவாளி என்று பேசுவோரிடம் நாம் என்ன பதில் சொல்வது? அதில் ஒருவர் வேளாண்மை இல்லாமல் கூட ஒரு நாடு இருந்திடலாம். வேதம் இல்லாமல் இருக்க முடியாது என்கிறார். அவர் யார் ? துக்ளக் ஆசிரியர். அறிவாளிகளின் ஆசிரியர். அதனால்தான் அப்படி பேசுகிறார். வேளாண்மை செய்வது நிறுத்தப்பட்டு பட்டினியாக இருந்தால் எது நாட்டிற்கு தேவை என்று தெரியவரும்.
கேள்வி: 1971 ல் நடந்த நிகழ்வை ரஜினி இப்போது சொல்ல வேண்டிய தேவை என்ன?
ரஜினிகாந்த், எழுதி கொடுப்பதை அப்படியே பேசுகிறார். 1971ல் மாநாடு நடந்தது, பேரணி நடந்ததுலாம் ரஜினிகாந்திற்கு தெரியவா போகிறது. வசனகர்த்தா குருமூர்த்தி. அவர் எழுதி கொடுத்தததற்கு இவர் வாயசைக்கிறார்.
இவ்வாறு அந்த நேர்காணலில் சீமான் தெரிவித்துள்ளார்.
இறுதியாக சீமான் சிறப்புரையாற்றினார்.