அறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள் 2019’ – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு

139

அறிவிப்பு: ஆக. 30, ‘பன்னாட்டு காணாமல் போனோர் நாள் 2019’ : காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் நிலை என்ன? – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் விளைவாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை நம் கண்முன்னே நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போரின்போதும், அதன்பிறகானக் காலக்கட்டத்தின்போதும் எண்ணற்ற ஈழத்தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த எந்த விபரங்களும் இன்றுவரைத் தெரிவிக்கப்படவில்லை.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரணடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்டநடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகின்றது. இவர்களைத் தவிர மேலும் சில ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன. ஈழப்போர் தொடங்கிய 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் இவ்வகையில் காணாமல் போனதாகத் தெரிகிறது.

இந்நிலையில், 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் நிலை என்னவானது? அவர்களை உடனடியாக நேர்நிறுத்த வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை மீட்பதற்காக, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழீழத்தில் இலங்கை அரசின் கடுமையான உயிர் அச்சுறுத்தல்களுக்கிடையே 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அறவழியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழீழத்தில் காணாமல் போனோர் சிக்கல் தீர்க்கப்படாமல் இருப்பதோடு நாளுக்கு நாள் காணாமல் போனோரின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்லும் அவலம் தொடர்கிறது.

இதுகுறித்து விவரிப்பதற்காக, ஆகத்து 30 – பன்னாட்டு காணாமல் போனோர் நாளன்று (International Day of the Disappeared) காலை 10:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் (Madras Reporters Guild )ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்