ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை

42

செய்திக்குறிப்பு: ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை | நாம் தமிழர் கட்சி

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறை என்ற செய்தியைக் கேள்விப்பட்ட உடனே நாம் தமிழர் கட்சியின் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்” என்று  குருதிக்கொடைப் பாசறை வாயிலாக நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.   அதன்படி ஐநூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் குருதிக்கொடை பாசறை மூலமாக ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையிலும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும், எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையிலும், வேளச்சேரி ஏரி தூர்வாரும் பணியின் போது ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் இரத்ததான முகாமிலும் சேர்த்து 480 யூனிட்டுகளுக்கும் மேலாக குருதியைக் கொடையாக அளித்துள்ளனர்.

கடந்த 08-06-2019 முதல் 12-06-2019 வரையிலும் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் மட்டும் நாம் தமிழர் உறவுகள் 346 யூனிட் குருதியைக் கொடையாக அளித்துள்ளனர். இதற்கான சான்றிதழை நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ப.செ.நாதன் அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

குருதி அளித்த அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையின் மூலம் “உயிர்நேய மாண்பாளர்”சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன மற்றும் அரசாங்கத்தின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

உயிர் காக்க உதவிக்கரம் நீட்டிய அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் நன்றிகளையும், புரட்சிகர வாழ்த்துகளையும் நாம் தமிழர் குருதிக்கொடை பாசறை சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்  அரிமா மு.ப.செ.நாதன் தெரிவித்தார்.

மேலும் அவசரகால குருதி தேவைப்படுவோர்க்கு குருதிக்கொடை பாசறை மூலம் நாம் தமிழர் உறவுகள் அவ்வப்போது குருதிக்கொடை அளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை மிகச்சீரிய முறையில் ஒருங்கிணைத்த நாம் தமிழர் குருதிக்கொடை பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்  அரிமா மு.ப.செ.நாதன் மற்றும்  ஈகை மணி மற்றும் சுகுமார்  ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084