புயலும் புனரமைப்பும்! சீமான் தலைமையில் 50000 தென்னை மரக்கன்றுகள் நடும் சுற்றுசூழல் பாசறை | நாம் தமிழர் கட்சி
காவிரி நதிநீர் சிக்கலால் வேளாண்மை பெருமளவில் பாதிக்கப்பட்டபோதிலும் டெல்டா மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாய் விளங்கிய தென்னந்தோப்புகள், கஜா புயலால் பல இலட்சக்கணக்கான தென்னை மரங்களை இழந்து பேரழிவைச் சந்தித்துள்ளன. வேளாண் குடிமக்கள் பலரின் குடியிருப்புகளும் புயலில் சேதமடைந்து உள்ளன. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் புயலில் சிக்கியும் சரிந்த மரங்களின் அடியில் சிக்கியும் இறந்துபோயுள்ளன. உண்மையில் தமிழ்நாட்டின் வளமான பாதி நாடு அழிந்துபோயுள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு டெல்டா மாவட்ட மக்கள் பேரழிவைச் சந்தித்துள்ளனர். கஜா புயல் பாதிப்பிலிருந்து நமது உறவுகள் மீண்டெழ துணைநின்று உதவிக்கரம் நீட்டவேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.
கஜா புயல் கடந்து 15 நாட்களானப் பிறகும் தமிழக அரசு, புயல் சேதத்தின் வீரியம் குறித்த முழு விவரத்தினையும், தகவல்களையும், புள்ளி விவரங்களையும் சேகரிக்காத நிலைமையில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, இயற்கை ஆய்வாளர்களுடன் கைகோர்த்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதோடு, கஜா புயல் விளைவித்த சேதம் பற்றிய முழு ஆய்வினையும் ஆவணப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இவ்வாய்வின் முடிவில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுகொண்டு அவர்களின் மறுவாழ்விற்குக் கைகொடுக்கும் விதத்தில் நாம் தமிழர் கட்சி கீழ்க்கண்ட நலத்திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது.
நாம் தமிழர் கட்சியால் தேர்வு செய்யப்படும் தென்னந்தோப்புகளில் வேரோடு சரிந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி, புது தென்னை மரக்கன்றுகள் நடவு செய்து கொடுக்கும். இதன் முதற்கட்டமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 50000 தென்னை மரக்கன்றுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுசூழல் பாசறை சார்பாக உரிய முறையில் நடவும் செய்து தரப்படும்.
ஓடு மற்றும் குடிசை வீடுகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்று இருப்பிடத்தை இழந்து தெருவில் நிற்கின்றனர். அங்ஙனம் உள்ளவர்களின் மீள்குடியேற்றத்திற்கு, நாம் தமிழர் கட்சி, இடிந்து போன வீடுகளைத் தம்மால் இயன்றளவுப் புனரமைப்பு செய்துக்கொடுக்கத் தீர்மானித்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள செயல்திட்டங்கள் அனைத்தையும் பாதிப்படைந்த இடங்களில் நாம் தமிழரின் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் நாம் தமிழர் உறவுகள் தற்காலிக முகாம்கள் அமைத்து செய்துகொடுப்பர் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இம்முயற்சியில், இயற்கை ஆர்வலர்களையும், தன்னார்வலர்களையும், பொதுமக்களையும், நாம் தமிழர் உறவுகளுடன் இணைந்து செயலாற்ற பேரழைப்பு விடுக்கின்றோம்.
தொடர்புக்கு,
நாம் தமிழர் கட்சி – சுற்றுசூழல் பாசறை
வெண்ணிலா – 9884323380
வச்ரவேல் – 8940616969
சுனந்தா – 9910385001
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி