அறிவிப்பு: ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானப் புதிய செயலி – சீமான் வெளியிடுகிறார் | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் அதிகாரப்பூர்வமான ஓட்டுநர் சேர்க்கையை கடந்த 24-06-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் தங்களை ஆர்வமுடன் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானப் புதிய செயலியை மக்கள் பயன்பாட்டிற்காக நாளை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிடுகிறார்கள்.
இதுகுறித்து ‘உலா’ வாடகை மகிழுந்து சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சமீபகாலமாக மகிழுந்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகு முறையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கான செயலியை எந்தவித தரகுமுறை (Brokerage), சேவை இலக்கு (Daily Target) போன்றவை தவிர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வாடகை மகிழுந்து, தானி ஓட்டுநர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான நேரடி கட்டண நிர்ணயம் செய்யப்படுவதால் மிகக்குறைந்த சேவை கட்டணத்தில் பயணம் செய்யலாம். நெருக்கடி நேரக் கட்டணம் (PEAK TIME CHARGE), இரத்து செய்தலுக்கான கட்டணம் (CANCELATION FEE) மற்றும் இதர மறைமுகக் கட்டணங்கள் இல்லை. நேரடியாக மக்கள் பயணக் கட்டணத்தை ஓட்டுநரிடமே செலுத்தலாம். ‘உலா” செயலி நாளை (28-10-2018) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.
மக்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே நல்லுணர்வை உருவாக்குவதே ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் குறிக்கோள். இதுவரை ஓட்டுநர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வியப்பூட்டும் மேம்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு www.ulacabs.org
—
தலைமை அலுவலகச் செய்திக் குறிப்பு
நாம் தமிழர் கட்சி