சுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

333

சுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற, சனவரி 01, 2019 அன்று 18-வயது நிறைவடைவோர் (01.01.2001-க்கு முன் பிறந்தவர்கள்) தங்களது பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏதுவாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (01-09-2018)  தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. வாக்காளர்கள் தங்களுடைய பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான ஆவணச் சான்று நகலினை இணைத்து, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் இன்று முதல் வரும் அக்டோபர் 31 வரை முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் முகாம்கள் வருகின்ற செப்டம்பர் 9, 23 மற்றும் அக்டோபர் 7, 14-ஆகிய நாள்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாள்களில் பொதுமக்கள் உரிய படிவங்களைப் பெறவும், நிரப்பிய படிவங்களை அளிக்கவும், இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் (www.elections.tn.gov.in) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்திய இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற, 2019 சனவரி 4-ஆம் நாள் வெளியிடப்படுகிறது.

வருகின்ற தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் கடைசி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இதுவாக இருக்கலாம். ஆகவே இவ்வாய்ப்பை நாம் தமிழர் கட்சியினர் தவறவிடாமல் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

  • நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ள கட்சி உறுப்பினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தினர் ஆகியோரில் சனவரி 01, 2019 அன்று 18 வயது நிறைவடைவோர் அனைவரையும் படிவம் 6-னை நிரப்பி தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
  • பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-னைப் நிரப்பி அளிக்கவும்.
  • பட்டியலில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னைப் நிரப்பி அளிக்கவும்.
  • சட்டப்பேரவை தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய இருப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-னைப் நிரப்பி அளிக்கவும்.

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, வட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் தங்கள் பகுதி உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதைச் சரிபார்த்து பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், திருத்தம் செய்தல் பணிகளை நிறைவு செய்ய அவர்களுக்கு உதவி செய்து நம் கட்சிக்கான வாக்காளர்களை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது: மோடி அரசின் அப்பட்டமான சனநாயகப் படுகொலை! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர் பாசறை கலந்தாய்வு