கட்சி செய்திகள்: ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயாசி.பா.ஆதித்தனார் அவர்களின் 114ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டிஇன்று 27-09-2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
சாதி, மதங்களாகப் பிளந்து பிரிந்து கிடந்தத் தமிழ்த்தேசிய இன மக்களை ‘நாம் தமிழர்’ என்கிற தேசிய இன அடையாளத்திற்குள் ஒன்றுதிரட்ட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கிய தலைவர், நாடெங்கும் இருக்கிற உழைக்கும் மக்கள், பாட்டாளிச் சொந்தங்கள் நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் ‘தினத்தந்தி’ எனும் நாளேட்டினைத் தொடங்கி சிறப்புற நடத்தியவர், ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு!’ என உரக்க முழங்கிய தமிழர் தந்தை, போற்றுதற்கும், வணக்கத்துக்குரிய எங்களது ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 114வது பிறந்த நாள் இன்று. அந்த மகத்தானத் தலைவரின் பிறந்த நாளில் எந்த நோக்கத்திற்காக அவர் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினாரோ அதனைத் தொடர்ச்சியாக நடத்தி அவர் கொண்ட கனவை நிறைவேற்றும்வரை சமரசமின்றி களத்திலே நின்று போராடுவோம் என்கிற உறுதியை ஏற்கிறோம். அந்த மதிப்புமிக்கத் தலைவருக்கு எங்களுடையப் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
இராஜீவ்காந்தியோடு இறந்தவர்களின் குடும்பத்தினரை எழுவரின் விடுதலைக்கெதிரான கட்சிகளும், தலைவர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு குற்றச்செயலிலும் இதேபோல பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டுவிட்டுதான் முடிவினை எடுக்கிறார்களா? இல்லையே! எழுவரையும் விடுவிக்க மாநில அரசிற்கு அதிகாரமிருக்கிறது. 161வது சட்டப்பிரிவினைப் பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலோடு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதனைத்தான் இங்கு கருத்தில்கொள்ள வேண்டுமே ஒழிய, பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை வைத்து முடிவுசெய்ய முடியாது.
27 ஆண்டுகளாகக் கண்ணீரோடும், துயரத்தோடும் சட்டப்போராட்டம் நடத்தி இம்முடிவினைப் பெற்றிருக்கிறோம். அதனால், ஆளுநர் அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எழுவரையும் விடுதலைசெய்ய ஆவணம் செய்ய வேண்டும் எனக் கோருகிறோம். அதனை ஆளுநர் கவனத்திற்கொண்டு செயலாக்கம் செய்வார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084