ஆண்டாள் பற்றிய கருத்து மோதல்: வைரமுத்து மீதான தனிநபர் தாக்குதல் அல்ல; தமிழ்த்தேசிய இனத்தின் மீதான தாக்குதல்! – சீமான் சீற்றம்

18

ஆண்டாள் பற்றிய கருத்து மோதல்: வைரமுத்து மீதான தனிநபர் தாக்குதல் அல்ல; தமிழ்த்தேசிய இனத்தின் மீதான தாக்குதல்! – சீமான் சீற்றம்

மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் புதிதாகக் கட்சி தொடங்குவதற்கும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர் அரசியலுக்கு வரட்டும். அவரது வருகையை வரவேற்கிறேன்.

ஆண்டாள் எங்கள் குல மூதாதை. தமிழர் முன்னோர். அவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரைப் பற்றிய குறிப்புகள் யாவும் இலக்கியச்சான்றாகத்தான் இருக்கிறதே ஒழிய, வரலாற்றுச்சான்றாக இல்லை. அவர் பாடிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் தமிழிலேதான் பாடப்பட்டிருக்கிறது. ஆனால். அவரது கோயிலிலேயே இன்று தமிழில் வழிபடுவதில்லை என்பது அவருக்குச் செய்கிற துரோகம். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஆண்டாள் பற்றிய ஒரு மேற்கோளைத்தான் பதிவு செய்திருக்கிறார். அக்கருத்தை ஆண்டாள் பக்தர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவரே கூறியிருக்கிறார். ‘தமிழை ஆண்டாள்’ எனத் தலைப்பிட்டு இருப்பதன் மூலம் அவர் ஆண்டாளை எவ்வளவு உயர்வாக மதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், அதனைப் பிரச்சினையாக்கி அரசியல் செய்வதையும், அநாகரீகமாகப் பேசுவதையும் ஒருபோதும் ஏற்க முடியாது. வைரமுத்து ஒரு தனிமனிதர் அல்ல; அவர் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு அடையாளம்; எம்மினத்தின் சொத்து. அவர் மீது தொடுக்கப்படுகிற இத்தாக்குதலைத் தமிழ்த்தேசிய இனத்தின் மீதான தாக்குதலாகவும், அதன் மீதான அச்சுறுத்தலாகவும்தான் பார்க்கிறேன். தான் ஆண்டாளுக்கு எதிராகத் தவறாக எதுவும் கூறவில்லை என்றபோதிலும், தனது கருத்து யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன் எனக்கூறியிருக்கிறார் வைரமுத்து. அப்போதே அப்பிரச்சினையை முழுவதுமாக முடித்திருக்க வேண்டும்.