சாதி-மத ஒடுக்குமுறையால் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை: குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்

42

செய்தி: சாதி-மத ஒடுக்குமுறையால் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை: குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி

சென்னை, எழும்பூரில் உள்ள கவின் கலைக்கல்லூரியில் பீங்கான் கலைத்துறையில் இறுதியாண்டு படித்து வந்த மாணவரான பிரகாஷ் சாதி-மத ஒடுக்குமுறைகளால் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டுத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவர் மரணமடைந்து ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அதுகுறித்தான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாதிருக்கிறது. இந்நிலையில் நேற்று 27-11-2017 பிற்பகல் 1 மணியளவில் வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை எனும் சிற்றூரில் உள்ள மாணவர் பிரகாசின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்று பிரகாசை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

தம்பி பிரகாஷ், அளப்பெரிய திறமையும், தன்னிரகற்ற உழைப்பையும் கொண்டிருந்ததன் விளைவாக முதல் இரு ஆண்டுகள் சிறந்த மாணவனுக்காகக் கல்லூரியின் விருதையும் பெற்றிருக்கிறார்.  ஆனால் பிரகாசை அவரது துறைத்தலைவர் ரவிக்குமார் சாதி, மதக்கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கிறார். திட்டமிட்டுப் புறக்கணித்தல், வாய்ப்புகளை மறுத்தல், மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுப் பிரகாசை கல்விக் கற்கவிடாது பெரும் இடையூறு செய்திருக்கிறார். இதுகுறித்துக் கல்லூரியின் முதல்வர் சிவராசுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் துறைத்தலைவர் மீது மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, துறைத்தலைவரின் செயலுக்கு முதல்வரும் துணைபோயிருக்கிறார். இதனால், தனது கல்வியைத் தொடர முடியாமல் போகிறதே என்கிற வேதனையில் மனமுடைந்து போன பிரகாசு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்றும் கல்விக்கூடங்களே கொலைக்களமாகி மாணவர்களைக் கொலைசெய்கிறது என்பது கல்வி முறையிலுள்ள நிர்வாகச் சீர்கேட்டினையும், பேராபத்தினையும் எடுத்துரைக்கிறது. மேலும், பாடத்திட்டத்தில் மட்டுமல்லாது பயிற்று முறைகளிலும் சீர்திருத்தங்கள் தேவை என்பதைத் தெளிவாய் உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டார்..

தம்பி பிரகாஷ் மரணமடைந்து ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அதுகுறித்தான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாதிருப்பதும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குச் சாதகமாக வழக்கின் போக்கை மாற்ற முனைவதும் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. தம்பி பிரகாசின் மரணத்தை வெறுமனே தற்கொலை என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. இது சாதிய வன்மத்தோடும், மதவெறிப்போக்கோடும் கல்லூரி நிர்வாகத்தால் நிகழ்த்தப்பட்டப் பச்சைப்படுகொலையாகும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே, தம்பி பிரகாசின் மரணத்தை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாகக் கொலைவழக்காகப் பதிவு செய்து இதற்குக் காரணமான துறைத்தலைவர் ரவிக்குமார், கல்லூரி முதல்வர் சிவராஜ் உள்ளிட்டோரைக் கைதுசெய்ய வேண்டும் எனவும், கவின் கல்லூரியில் இருக்கும் பிரகாஷ் செய்த சிலைகளை அவர் குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனவும், பிரகாசின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் இல்லாவிடில், தம்பி பிரகாசுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084