திருப்பூரில் மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் அதிகாரத் திமிரின் உச்சம்! – சீமான் கண்டனம்

35

திருப்பூரில் மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் அதிகாரத் திமிரின் உச்சம்! – சீமான் கண்டனம்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம், சாமாளபுரத்தில் மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுக் கண்மூடித்தனமாகத் தாக்கியது பெரும் அதிர்ச்சியினையும், அளவற்ற கோபத்தினையும் தருகிறது. ஏற்றுக்கொள்ளவே முடியாத இந்நிகழ்வு வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் மீது துளியும் அக்கறையுமற்று உழன்று திரியும் ஊழல் பேர்வழிகளின் கொடுங்கோல் ஆட்சி இம்மக்களை எந்தளவுக்கு வாட்டி வதைக்கிறது என்பதைக் காட்டும் சாட்சியங்களாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. மதுபானக்கடையை ஊருக்குள் அமைக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி அறவழியில் போராடிய பொதுமக்களைக் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தித் தாக்குவதும், போராடிய பெண்களின் கன்னத்தில் காவல்துறை அதிகாரி அறைவதும், தடியால் அடித்துப் பொதுமக்களின் மண்டையைப் பிளப்பதுமாக நடந்தேறிய இந்தச் சம்பவங்கள், அடிமை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ‘ஜாலியன் வாலாபாக்’ சம்பவத்தையே நமக்கு நினைவூட்டுகின்றன.

போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாது அரசப்பயங்கரவாதத்தின் கைக்கூலிகளாக மாறிப்போன காவல்துறையினரை வைத்துக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மதுபானக்கடையை அகற்றக்கோரி மக்கள் போராடியபோது அவ்வழியே வந்த சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் போராட்டத்தை ஆதரிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மதுபானக்கடையை அகற்றக்கோரும் எழுத்துப்பூர்வமான உத்திரவாதத்தை மக்கள் கேட்கவே, பாதியிலே கிளம்பிச் சென்றிருக்கிறார். அதன்பிறகுதான், காவல்துறையானது பொதுமக்கள் மீது தடியடித் தாக்குதல் தொடுத்திருக்கிறது. இதன்மூலம், கனகராஜின் உத்தரவின்பேரிலேதான் தடியடித் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. தேர்தலுக்கு முன், முகமலர்ச்சியோடு மக்களைச் சந்தித்து இனிப்பான வார்த்தைகள் பேசி வாக்குகளைப் பெற்றுவிட்டு, சட்டமன்ற உறுப்பினரானவுடன் மக்களைச் சட்டை செய்யாமல் செல்வது திராவிடக் கட்சியின் ஆட்சியாளர்களுக்குப் புதிதா என்ன? அதேபாணியினைத்தான் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜூம் திறம்படச் செய்திருக்கிறார்.

குடிமக்களின் தேவையறிந்து குறிப்பறிந்து சேவை செய்வதே நல்லாட்சி எனச் செங்கோன்மைக்கு இலக்கணம் வகுக்கிறான் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருந்தகை. ஆனால், இங்குக் குடிநீர், சாலை, சுகாதாரம், பாதுகாப்பான வாழ்க்கை முறை என அத்திவாசியத் தேவைகளையே போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. அரைநூற்றாண்டு காலத் தமிழகத்தில் போராட்டமே தமிழர்களின் வாழ்வியல் முறையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அதிகப்படியாகப் போராட்டங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்று வெளியாகும் ஆய்வறிக்கைகளே இதற்கு எடுத்துக்காட்டு. ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்த கோரிப் போராடிய வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே திமுக அரசு ஏவிவிட்ட கோரத்தாக்குதலும், மெரீனாவில் போராடிய இளையோர் கூட்டத்தைக் கலைக்க அதிமுக அரசு தொடுத்த கொலைவெறித்தாக்குதலும் மக்களின் போராட்ட உணர்வுக்கு இருபெரும் திராவிடக் கட்சிகளும் தங்கள் ஆட்சியில் அளித்துவரும் மதிப்புக்குச் சான்றாகும்.

நெடுஞ்சாலையோரம் உள்ள மதுபானக்கடைகளை மூடக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வேறுவழியின்றித் தமிழகத்திலுள்ள 3,303 மதுபானக்கடைகளை மூடுவதாக அறிவித்த தமிழக அரசு, அதே எண்ணிக்கையிலான மதுபானக்கடைகளை ஊருக்குள் திறக்கிற வேலையினை முடுக்கிவிட்டுள்ளதானது மதுவிலக்கை நோக்கி நகர்கிறோம் என்று கூறியதற்கு எதிரான மாநில அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுவதாகும். மதுவிலக்கு கோரிப் போராடிய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது, மதுவிலக்கு கோரி அக்களத்திலே உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு நிகழ்ந்த கொடுமைகள், மதுவிலக்குக்காகப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்தேறிய நீண்ட மக்கள்விரோதப் போக்குகள் அவரை அடியொற்றி ஆள நினைக்கிற இன்றைய அதிமுக அரசிலும் தொடர்கிறது என்பதையே இத்தாக்குதல் நிரூபிக்கிறது. மதுபான ஆலையின் அதிபரை வழிகாட்டியாக ஏற்று ஆட்சி செய்யும் அரசிடம் மதுபானக்கடையை மூடக்கோரினால் கோபம் வருவது வாடிக்கைதானே? கோரிக்கை வைத்தவுடன் அதனை நிறைவேற்றித் தருவதற்கும், ஊழியமும், சேவையும் மக்களுக்குக் கிடைக்கப் பெறுவதற்கும் நாட்டை ஆள்வது காமராசரா? கக்கனா? ஊழல் வழக்கில் சிறைசென்றவர்களின் உத்தரவுக்குக் காத்திருக்கும் ஆட்சியாளர்கள் தானே? அவர்கள் மக்களைத் தாக்கச் சொல்லி உத்தரவிட்டதில் வியப்பில்லை.

மன்னார்குடி அருகே வடசேரியில் முன்னாள் மத்தியமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களுக்குச் சொந்தமாக எரிசாராய ஆலை அமைக்கத் திட்டமிட்டு, அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தபோது, அதில் ஆலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் மீது குண்டர்களைக் கொண்டு தாக்குதலைத் தொடுத்தது முந்தைய திமுகவின் ஆட்சி. மதுபானக் கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினரை விட்டுத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது தற்போதைய அதிமுகவின் ஆட்சி. காலமும், இடமும்தான் மாறுபடுகிறதே ஒழிய, செயல்களுக்குள் எந்த மாற்றமுமில்லை. இரு கட்சிகளுக்குள்ளும் எவ்வித வேறுபாடுமில்லை. தேர்தலுக்கு முன்பு, முழு மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த அதிமுக அரசு, மதுபானக் கடையை அகற்றக்கோரி போராடுபவர்களை அடித்து உதைப்பது அதிகாரத்திமிரின் உச்சம். கள்ளை இறக்குவதற்குத் தடைவிதித்து, கள் இறக்குவோரைக் கைதுசெய்கிற தமிழக அரசு மதுபானக்கடைகளை மூடுவதற்குத் தயக்கம் காட்டுவதன் நோக்கமென்ன? தங்களின் ஆலைகளுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்பதன்றி வேறு என்ன! மக்களைக் குடிநோய்க்கு அடிமைப்படுத்தி அள்ளிக்குவித்த பணமெல்லாம், ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்ற தமிழர்மறை போல, ஒருநாள் அவர்களை வீழ்த்தும் என்பது மட்டும் உறுதி. கண்முன்னே நடந்தேறும் இத்தனை அநீதிகளையும், அபத்தங்களையும், அநியாயங்களையும், கொடுமைகளையும், கோர நிகழ்வுகளையும் அரங்கேற்றுபவர்கள், நாம் செலுத்திய ஒற்றை வாக்காலேயே வலிமைபெற்று நம்மை அடிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதனையுணர்ந்து, மக்களை வெறுமனே வாக்காக மட்டும் பார்த்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைகொள்ளா கயமைத்தனம் மிகுந்த ஆட்சியாளர்களுக்கு அளித்த ஆதரவினை மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது.

மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட செயலானது எக்காரணம் கொண்டும் ஏற்கத்தக்கதல்ல! எனவே, மக்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தால் காயம்பட்டவர்களுக்கும், அவமரியாதை செய்யப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் மதுபானக்கடைகளை உடனே அகற்றுவதோடு, தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று முழு மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

முந்தைய செய்தி9-4-2017 சீமான் எழுச்சியுரை – செரியன் நகர் | தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்
அடுத்த செய்தி14-4-2017 அம்பேத்கர் பிறந்தநாள் : சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செய்கிறார் சீமான் – பெரம்பூர்