தமிழர் திருநாள் வாழ்த்து – சீமான்

129

பொங்கல் தமிழ்த் தேசிய இனத்தின் திருவிழா

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

வள்ளுவப் பெருமகனாரின் மறைமொழி

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.

பெரும்பாவலன் பாரதி

காடு களைந்தோம் — நல்ல
கழனிதிருத்தியும் உழவுபுரிந்தும்
நாடுகள் செய்தோம் — அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றிடச் செய்தோம்
வீடுகள் கண்டோம் — அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

இப்படி உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து
ஓலை குடிசையில் ஒடிங்கி கிடந்து
உலகிற்கே உணவு கொடுக்கும் உழவர் கூட்டம்!

உழவு இல்லையேல்! உணவு இல்லை!
உணவு இல்லையேல்! உலகு இல்லை!

இந்தப் பாடுபடும் பாட்டாளிகளின் பண்டிகை
உணவு தரும் உழவனின் திருவிழா

உழுது விதைத்து
அறுத்து எடுத்து
குத்திப் புடைத்து
புதுப் பானையில் போட்டு
பொங்கல் வைத்து
குலவையிட்டு கொண்டாடும்
அறுவடைப் பெருநாள்

தண்ணீரில் பொங்கிய பொங்கல்
இன்று எம்மக்களின் கண்ணீரில் பொங்குகிறது!

பயிர் வாடியதைக் கண்டு உயிர் வாடி
பயிரை அறுவடை செய்த உழவன்
இன்று தன் உயிரையே அறுவடை செய்துக் கொண்டிருக்கிறான்

உலகிற்கே உணவு தந்த உழவர் பெருமக்கள் இன்று தனக்கு உணவில்லாது தற்கொலை செய்கிற துயரம் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது

துயரம் தோய்ந்த வாழ்விலும்
தை மகள் பிறக்க
தமிழினம் சிறக்க
ஒரு புதுவழி பிறக்காதா? என்று ஏங்கி தவிக்கும் இனத்தின் பிள்ளைகள்!

நீண்ட காலமாக தூக்கி சுமந்து வரும் இந்த துயரத்தைத் துடைத்தெரிய முடியாதா? என்று துடிக்கும் இளைய தலைமுறை புரட்சியாளர்கள்!

பசி, பஞ்சம், இலஞ்சம், ஊழல், ஏழ்மை, வறுமை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது, மதப் போதை, பெண்ணிய அடிமைத்தனம், ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு இது ஏதுமற்ற ஒரு தூய தமிழகம் பிறக்க துளிர்க்கும் பொங்கலாக இப்பொங்கல் பொங்கட்டும்

தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல் என்று வாழ்த்துகிறோம்!

நாம் தமிழர்!