13.10.2016 தியாகி சங்கரலிங்கனார் 60வது நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

237

13.10.2016 தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு சீமான் மலர்வணக்கம்
——————————
தமிழ்நாடு என்று பெயர்வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 13-10-2016 காலை 11 மணிக்கு கிண்டியிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார். உடன் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
தியாகி சங்கரலிங்கனார் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சென்னை மாகாணம் என்றும் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த நம் தாய் நிலம் தமிழகத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் தியாகம் செய்த போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரியப் பெருமகன் நமது ஐயா சங்கரலிங்கனார் அவர்களினுடைய நினைவுநாள் இன்று (13-10-2016).
மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை?
தனிப்பெரிதாந் துன்பமிது!
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை!
என்று வருந்திப் பாடினார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன்.
இங்கு நாடு தமிழ்நாடாக ஆகியிருக்கிறது;
தமிழுக்கும் தமிழருக்கும் இது சுடுகாடாக மாறியிருக்கிறது!
வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை!
ஆட்சி மொழியாக,
அதிகார மொழியாக,
பேச்சு மொழியாக,
வழிபாட்டு மொழியாக,
வழக்காடு மொழியாக,
பண்பாட்டு மொழியாக எவ்விடத்திலும் தமிழ் இல்லை என்ற நிலையை நாம் உணர்கிறோம்.
இந்நிலையை மாற்றி எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற நிலையை உருவாக்குவதுதான் நம் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.
உணர்வுப்பூர்வமாக அந்தப் பெருமகனின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும் அதை நிறைவேற்றுவோம் என்கிற உறுதியை ஏற்பதுதான் நாம் அந்த மதிப்புமிக்கப் பெருமகனுக்குச் செலுத்துகிற உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும். போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நமது ஐயா சங்கரலிங்கனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
– இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது