எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு

63

                                                 நாள்: 24.09.2020

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,

வணக்கம்!

ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கலந்து நமது மூச்சோடு உலவிக் கொண்டிருக்கிற மாவீரர்களின் சுவாச நெருப்பு நமது நெஞ்சத்துக்குள் கனன்று கொண்டிருக்கிற விடுதலைவேள்விக்கு உரமூட்டி வளர்ப்பதை எந்த அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறையாலும் தடையிட்டு முடக்கிவிட முடியாது.

அடக்குமுறைகள் மூலம் அன்னைத்தமிழினத்தின் பேரெழுச்சியைத் தடுக்க முற்படும் சிங்களப்பேரினவாதத்திற்குப் பாடம் புகட்டவும், உலக அதிகார வர்க்கத்துக்குத் தமிழர்களின் ஓர்மையைப் பறைசாற்றவும் முன்பைவிடப் பன்மடங்குப் பேரெழுச்சியோடு அண்ணன் திலீபன் அவர்களது நினைவேந்தலை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் முன்னெடுத்துப் போற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழரின் பெருங்கடமையாகிறது. உலகின் ஒப்பற்றத் தியாகமாய் ஒரு சொட்டு நீராகாரம்கூட அருந்தாமல் வீரமரணம் அடைந்த ஈகைச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களது உன்னதத்தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பர் 26, சனிக்கிழமை அன்று அவரது திருவுருவப்படம் வைத்து, மலர் தூவி, சுடரேற்றி காலை 06 மணி முதல் மாலை 06 மணிவரை, 12 மணிநேரங்கள் அந்த ஒப்பற்ற மாவீரனின் ஈகத்தைப் போற்றும் வகையில், உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் உண்ணாநிலையை மேற்கொண்டு அவரது இலட்சியத்தாகத்தை நிறைவேற்றிட உறுதியேற்போம்.

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து,
நாமும் அரைநாள் பசித்திருப்போம்!


– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தொகுதி