கோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! – சீமான் ஆறுதல்

90

கோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! – சீமான் ஆறுதல்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்திற்கு 174 பயணிகள் உட்பட 191 பேருடன் வந்த ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியையும் சொல்லொணாத் துயரத்தையும் அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் மனத் துயரினைப் பகிர்வதுடன் அவர்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலினால் பல மாதங்களாக விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ள சூழ்நிலையில், நீண்ட காத்திருப்புகள் மற்றும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு தாயகத்தையும் உறவுகளையும் காணும் ஆவலில் வந்தவர்கள் எதிர்பாராத விபத்திற்குள்ளானதை நினைக்கும்போது மனம் மேலும் வேதனை அடைகிறது.

தொடர்புடைய கோழிக்கோடு விமான நிலையமானது மேசைதளக் குறுகிய ஓடுபாதையைக் கொண்ட விமான நிலையம் என்பதும், இரவு நேர மழைப்பொழிவும் விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் இதற்கு முன் ஆறுமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது. ஏற்கனவே இதே போன்ற குறுகிய ஓடுபாதையைக் கொண்ட கர்நாடக மாநில மங்களூர் விமான நிலையத்தில் கடந்த 2010 ஆண்டு ஏர்-இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதும், அதன் பிறகு ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்கும் வரை விமானநிலையம் செயல்படத் தடைவிதிக்கப்பட்டதும் நினைவுக் கூறத்தக்கது.

சிறிது பிழையானாலும் பலநூறு பயணிகளின் உயிர்களைப் பலிகொள்ளும் இவ்வகை விமான நிலையங்களின் ஓடுபாதையின் நீளத்தை அதிகரித்து சர்வதேச தரத்திற்கு உயர்த்துமாறும், வருங்காலங்களில் இதுபோன்ற விமான விபத்துகள் நிகழா வண்ணம் விமானப் போக்குவரத்தில் உள்ள அனைத்து நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளையும் களைய வேண்டுமெனவும் மத்திய-மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மீட்புப் பணிகளைத் தொய்வின்றி விரைந்து நடத்திடவும், காயமடைந்துள்ளவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும் இப்பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு வர தேவையான மனநல ஆலோசனையும் வழங்க ஏற்பாடு செய்யவேண்டுமெனக் கேரள அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே கொரோனோ நோய்த்தொற்று, கடுமையான மழைப்பொழிவின் காரணமாகப் பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை இந்த விபத்து மேலும் துயரக் கடலில் ஆழ்த்தியுள்ளது. வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் உடைமைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீட்டினைப் பெற்றுத்தரவும் துயர் துடைப்பு உதவிகள் வழங்கிடவும் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி+2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் – சிவகாசி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்