வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்

988

செய்திக்குறிப்பு: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர் கோட்டம்) | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19-12-2020 அன்று மாலை 04 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தமிழர் பாரம்பரிய பறையிசையாட்டத்துடன் தொடங்கியது, ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் சீக்கிய எழுத்தாளர், அரசியலறிஞர் திரு அஜய்பால் சிங் பிரார் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் அகவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன், மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் துருவன் செல்வமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயூன் கபீர், மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் புதுகை ஜெயசீலன், மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்’ இளவஞ்சி, மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மாநில ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலிகான், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசப் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், சீக்கிய எழுத்தாளர், அரசியலறிஞர் திரு அஜய்பால் சிங் பிரார் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். இறுதியாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனப் பேருரையாற்றினார்.

முன்னதாக முத்தமிழ் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு, சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளின் ஈகத்தை நினைவுகூர்ந்து, விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தன்னுயிர் தந்த சந்த் பாபா ராம் சிங் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, திரு அஜய்பால் சிங் பிரார் அவர்கள் ஈகைச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினார்.

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகமெங்குமிருந்து கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், பாசறைகளின் பொறுப்பாளர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

உயர்தர புகைப்படங்கள்: https://drive.google.com/drive/folders/1PDgzGQx0GEZRK-LWcKHxHXFiQ2w8iksf?usp=sharing

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி