தமிழர் திருநாளில் தமிழிசைப் பயின்றிடுவோம்! – கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக இணையவழி தமிழிசைப்பயிற்சி

820

தமிழர் திருநாளில் தமிழிசைப் பயின்றிடுவோம்! – கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக இணையவழி தமிழிசைப்பயிற்சி

பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன். – தமிழ்மறை (996)

ஓர் இனம் அதன் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைச் சிதையக் கொடுக்குமானால் அந்த இனமே சிதைந்து அழிந்துவிடும். மொழி, கலை, இலக்கியம் பண்பாட்டில் சிறந்தோங்கி வாழ்ந்த தமிழினத்தின் அடையாளங்கள் யாவும் சிதைந்து அழிந்து வருகிறது; அவை அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் அரும்பாடாற்றிவருகிற நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பாக, தமிழிசைப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இசையில் ஆர்வமிக்க நாம் தமிழர் உறவுகளுக்கு, பழந்தமிழ்
பண்ணிசை ஆசிரியர் தம்பி ச.சரவணமாணிக்கம் அவர்கள் தமிழிசைப்பயிற்சி வழங்கி வருகிறார். தம்பியின் இசைப்பயிற்சி வகுப்புகளில் நாம் தமிழர் உறவுகள் பெருமளவில் இணைந்து தமிழிசையை நன்கு கற்றுத்தேர்ந்து, இசை உலகில் தமிழிசையை ஓங்கி ஒலித்திடச் செய்து, இசைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்திட வேண்டுமெனப் பேராவல் கொண்டிருந்தேன்.

எமது பெருவிருப்பத்தின் பேரில், வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான தைப்பொங்கலன்று உலகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் உறவுகளுக்கு இணையவழியில் தமிழிசைப் பயிற்சியைக் கட்டணமின்றி வழங்கும் திட்டத்தைத் தொடங்கவிருக்கிறார். இப்பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமைதோறும் இணையவழியில் நேரலையாக நடைபெறவிருக்கின்றன. தமிழிசையைப் பயின்றிட பேரார்வமுள்ள நாம் தமிழர் உறவுகள், +91-9443207376 / 9566473769 ஆகிய அலைபேசி எண்களில் இசையாசிரியரைத் தொடர்புகொண்டு பயிற்சி வகுப்புகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கலைகளை மீட்பதும் கலைஞர்களைக் காப்பதும் நமது கடமை!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி