கல்விக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

2187

கல்விக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

 • அனைவருக்கும் சரியான சமமான, தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம். நல்லத் தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். எனவே தொடக்கக் கல்வி, தொடக்க சுகாதாரத்தில் நாம் தமிழர் அரசு அதிக அக்கறை செலுத்தும்.
 • உயிரும் அறிவும் விற்பனைக்கு வந்துவிட்ட தேசம் உருப்படாது. எனவே மருத்துவத்தையும் கல்வியையும் நமது அரசு பொதுமைப்படுத்தும்.
 • ஒரு தேசத்தின் எதிர்காலம், அந்த நாட்டின் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது.
 • கல்வி சுமை அன்று சுவை.
 • கல்வி விற்பனைப் பண்டமன்று, கல்வி குழந்தைகளின் உரிமை.
 • கல்வி சமூகத்தைக் கட்டமைக்கும் கருவி. ஒடுக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் வழிமுறை.
 • ஏற்றத்தாழ்வுகளற்ற, பாகுபாடுகளற்ற உண்மையான மக்களாட்சியை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்.
 • குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான, முன்னேறுவதற்கான சமவாய்ப்புகளை ஒழித்துக் கட்டிய கல்வி அமைப்பு; மக்களாட்சி நெறிகளுக்கு எதிரானது.
 • கல்வியைத் தனியார் முதலாளிகளின் வணிகப் பொருளாக மாற்றியது குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.
 • கல்விக்கென்று வரி வசூலித்துக் கொண்டு கல்வியை, விலைகொடுத்துப் பெற வைப்பது மாபெரும் சமூகக்குற்றம்.

அண்ணல் காந்தி

“ஒருவருக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல் தாய்மொழிக் கல்வி முக்கியம். அதைக் கொடுக்காதது தேசத்துரோகக் குற்றம்”  – அண்ணல் காந்தி.

 • “அயல்நாட்டு மொழியைப் பயிற்சி மொழியாக நம் இளைஞர்கள் மேல் திணித்திருப்பது நம்மையே அழிக்கவல்லது. அதுவே மிகப்பெரிய கொடுமை என்பதை வருங்கால வரலாறு சொல்லும்” -என்று 1928- ஜுலை 5-ஆம் தேதி அன்று எழுதி எச்சரித்திருந்தார்.
 • அயல்நாட்டுக் கல்விமொழி நம் ஆற்றலைப் பலவீனப்படுத்தும். ஆயுளைக் குறைத்துவிடும். மாணவர்களைப் பொதுமக்களிடம் இருந்து பிரித்துவிடும். இந்தக் கல்வி முறையை நாம் பிடிவாதமாகக் கடைப்பிடித்தால் நம் நாட்டின் உயிர் நாடியை அழித்துவிடுமென்று கவலைப்பட்டார். அதனால் தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்று நாம் நடைமுறைப்படுத்துவோம்.

கல்வி விற்பனைப் பண்டமன்று, கல்வி
குழந்தைகளின் உரிமை!

உலக நாடுகள்

ஒருவருக்குக் கனவு எந்த மொழியில் வருகிறதோ, அந்த மொழிதான் அவருக்கு கல்வி மொழியாக இருக்க வேண்டும்.

 • சப்பான், செர்மன், சீனா, பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் பலவும் முன்னேறிய நாடுகளாகவே இருக்கின்றன. காரணம் அவர்கள் தாய்மொழியில் கல்வியைக் கற்றுத் தருகிறார்கள். சொந்த மொழியில் கற்று சிந்திக்கும் போதுதான் அறிவு வளர்ச்சிபெறும் என்பது அறிவார்ந்த மக்களின் கருத்தாக இருக்கிறது. அதனால் தாய்மொழிக் கல்வியை முதன்மையாக்குவோம்.
 • உலகில் கல்வியில் முதலிடம் வகிக்கும் தென்கொரிய நாடு தனது தாய்மொழியில் தான் கல்வியைக் கற்றுக் கொடுக்கிறது. இங்கு அப்பிள்ளைகளை எட்டு வயதில்தான் ஒன்றாம் வகுப்பில் படிக்கச் செய்கிறார்கள்.
 • இரண்டாம் இடம் வகிக்கும் சப்பான், மூன்றாம் இடத்தில் இருக்கும் சிங்கப்பூர், அடுத்தடுத்து இருக்கும் ஹாங்காங், பின்லாந்து ஆகிய நாடுகள் எல்லாம் தங்கள் தாய்மொழியில்தான் கல்வியைக் கற்றுத் தருகின்றன. இங்கெல்லாம் ஆறு வயதில்தான் ஒன்றாம் வகுப்பில் படிக்கச் செல்கிறார்கள்.

மேதைகள்:

அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ஆ.ப.செ.அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் பி.சதாசிவம், கணிதமேதை சர் சி.வி.இராமன், புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராசா போன்ற பலரும் தாய்மொழியில் படித்தவர்கள்தான். தமிழ்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே அறிவு வளர்ச்சி மேம்படும். அது நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்று நாம் தமிழர் அரசு முன்வைக்கிறது.

அறிவுச் சோலை

அரும்பு – மொட்டு – மலர்

 • மூன்று வயதில் அரும்பு என்ற வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அடுத்து மொட்டு, மலர் என அடுத்தடுத்த வகுப்பில் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
 • இந்த வகுப்புகளில் விளையாட்டு, ஒவியம் வரைதல், நீதிக்கதைகள், இசையைக் கேட்டல், பாட்டுப் பாடுதல், அறிவியல் கதைகள் ஆகியவை எளிய முறையில் பயிற்றுவிக்கப்படும். விளையாட்டுப் பூங்கா, சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து சென்று ஒவ்வொன்றையும் விளக்கிப் பயிற்றுவிப்பார்கள். அரும்பு – மொட்டு – மலர் வகுப்புகளுக்குப் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.

தனித்திறன்

 • அரும்பு – மொட்டு – மலர் கல்விமுறையின் போது பிள்ளைகள் படிக்கமாட்டார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து பிள்ளைகளைப் படித்து அவர்களின் தனித்திறமையை அறிந்துகொள்வார்கள்.
 • ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும்போது சிறுவர்-சிறுமிகளின் தனித்திறமை என்ன என்பதைப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டறிந்து, அதுவே முதன்மைப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படும். மற்றவை எல்லாம் துணைப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படும்.
 • ஓவியத்தில் ஆர்வமா? அதுவே முதன்மைப் பாடம். விளையாட்டில் ஆர்வமா? அதுவே முதன்மைக் கல்வி. சமூகச் சேவை, மனித மேம்பாட்டில், கணினியில், அறிவியலில், கணிதத்தில் என்று எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு முதன்மைப் பாடமாக பயிற்றுவிக்கப்படும். துறைசார்ந்த ஆற்றல் மிக்க மேதைகளை உருவாக்குகின்ற கல்வியாக இருக்கும்.

தேர்வில்லாத் தேர்ச்சி – சுவர் இல்லாக் கல்வி

“மதிப்பெண்களை வைத்து மனித அறிவை அளவிட முடியாது”. எனவே, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பயிற்சி முறை கல்வி பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் அழைத்துச் சென்று, பயிற்சி முறைக் கல்வி அளிக்கப்படும். தேர்வில்லாத் தேர்ச்சி முறையாகப் பயிற்றுவிக்கப்படும்.

 • பத்தாம் வகுப்பில் அரசுத் தேர்வு நடத்தப்படுவதால், அதற்குப் பயிற்சியாக ஒன்பதாம் வகுப்பில் தேர்வுமுறைப் பாடம் நடத்தப்படும்.

முதன்மை

 • சச்சின் டெண்டுல்கர் உலகப்புகழும், பெரும் பணமும் சம்பாதிக்கக் காரணம் அவரது தனித்திறமைதான். கிரிக்கெட்டை மட்டுமே முதன்மையாக எடுத்துக்கொண்டார். சமைக்கா (Jamaica) என்ற தேசத்தை இந்த உலகிற்குப் பரவலாக அடையாளம் காட்டிய உசேன்போல்டு என்ற ஓட்டப்பந்தய வீரர் உலகப் புகழ் பெறக் காரணம் அவர் விளையாட்டில் மட்டுமே தனித்திறமை கொண்டவராக இருந்ததுதான்.
 • தேசத்தின் பல விருதுகளைப் பெற்றுப் புகழின் உச்சியில் நின்ற இளையராஜா, ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான் ஆகியோரெல்லாம் இசையில் மட்டுமே தனித்திறமை காட்டிப் புகழிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்தார்கள்.
 • அப்படித் தலைசிறந்த வல்லுநர்கள் பலரும் பல துறைகளில் தனித்திறமை பெற்றவர்களாக வளர்த்தெடுக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இந்தியாவிலேயே பல திறமையாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகத் தலைநிமிர்ந்து நிற்பார்கள். அதற்கான கல்விமுறையை நாம் தமிழர் அரசு வழங்கும்.

தாய்மொழிக் கல்வி

 • தாய் மொழியில் படித்தவன் படைக்கின்றான். படிக்காதவன் பயன்படுத்துகிறான்.
 • ஆரம்பப் பள்ளி முதல் உயர் படிப்பான மருத்துவம், சட்டம், பொறியியல் வரையிலுமான அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே மொழிபெயர்க்கப்பட்டுக் கற்றுத் தரப்படும். தமிழ்வழிக் கல்வியே சட்டமாக்கப்படும்.

மொழிக்கொள்கை:

 • தமிழ் – பயிற்று மொழி.
 • ஆங்கிலம் – கட்டாயப் பாட மொழி
 • விருப்ப மொழி – இந்தி உள்பட உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் விருப்ப பாட மொழி.
 • தமிழர்கள் தங்கள் தாய் மொழியில் ஆழமான புலமை பெற்றிருப்பார்கள். ஆங்கிலத்தில் ஆங்கிலேயர்களுக்கு இணையாக எழுதவும்-பேசவும் திறமையைக் கொண்டிருப்பார்கள்.
 • மேலும் உலகின் பல்வேறு மொழிகளிலும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட தலைமுறையை நாம் தமிழர் அரசு உருவாக்கும்.
 • தனித்திறன் – ஆங்கிலப் புலமைக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்றுவிக்கப்படுவார்கள்.

“எம்மொழியும் கற்போம் நாங்கள் வாழ்வதற்கு; எம் மொழி தமிழ் கற்போம் என் இனம் வாழ்வதற்கு!” இதுதான் நமது அரசின் கொள்கை.

பசுஞ்சோலைப் பள்ளிகள்

 • அரசுப் பள்ளிகள் அனைத்தும் பரம்பரைக் கட்டடக் கலைநுட்பத்துடன் கட்டப்படும். சுற்றிலும், தரமான விளையாட்டுத் திடல், சிறந்த அடிப்படை வசதிகள், உள்ளேயும் நிழல் தரும் மரங்களை நடுவதோடு, மருத்துவத்திற்கான மூலிகைச் செடிப் பண்ணைகளும் அமைக்கப்படும். பசுஞ்சோலைக்குள் பள்ளிகள் இருக்கும்.
 • கட்டடத்தின் மேல் தளத்தில் ’சூரிய ஒளிக்கற்றை’ முறை மின் தயாரிப்புக் கட்டமைப்பு உருவாக்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் பள்ளிகளுக்கும் அருகில் உள்ள வீடுகளுக்கும் அளிக்கப்படும்.
 • தூய குடிநீர், நவீன கழிப்பறைகள், விளையாட்டுத்திடல், நூலகம் கட்டாயம் அளிக்கப்படும்.

தமிழ் படித்தால் அரசு வேலை

 • தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? சோறு கிடைக்குமா? என்று பேசுவது அவமானகரமானது. ஆங்கிலம் படித்தால் அந்நிய நாட்டில் வேலை. இந்தி படித்தால் வட இந்தியாவில் வேலை. தமிழில் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை என்ற நிலையை நாம் தமிழர் அரசு கட்டாயமாக்கும்.
 • தனியார் – ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான நடவடிக்கைகள் இருக்காது. ஆனால் அரசுப் பள்ளிகள் அனைத்தும் உயர்ந்த தரத்திற்கு உயர்த்தப்படும்.
 • அரசுப் பள்ளிகளில் தாய்மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சமூக நீதி வாழ்வியல்:

 • தொடக்கப் பள்ளிகள் முதலே சமூகநீதி, நல்லொழுக்கம், வாழ்வியல், தொன்மம் குறித்துத் தெரிந்துகொள்ளவும், நூலகங்களில் சென்று படிப்பதற்கும் தனியாக ஒரு வகுப்பு, வாரத்தில் இரண்டு முறை நடத்தப்படும்.
 • மாணவர்களுக்குப் புத்தகச் சுமை இருக்காது. அவர்கள் புத்தகங்களை வைத்துக்கொள்ள வகுப்பறைகளிலேயே தனிப் பெட்டகம் அமைத்துக் கொடுக்கப்படும். வீட்டுப் பாடங்கள் இருக்கும் புத்தகங்களை மட்டும் மாணவர்கள் எடுத்துச் சென்றால் போதுமானது.

தொடக்கக் கல்வி

ஒவ்வொரு கிராமத்திலும். அவரவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே தொடக்கப்பள்ளிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

ஆரோக்கிய கல்வி

ஒவ்வொரு பள்ளியிலும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு என்று நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.

முதலமைச்சர் தொடங்கிக் கடைசி மட்ட அரசு ஊழியர்கள் வரை அனைவரின் பிள்ளைகளும் கட்டாயம் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும்.

ஆசிரியப் பெருமக்களின் நலன்

 • ஒரு குழந்தை, தாயின் கருவரையில் பத்து மாதம்தான் இருக்கிறது. அது உயிர்க் கருவறை. அந்த பிள்ளை பள்ளி, கல்லூரியிலும் பல ஆண்டுகள் இருக்கிறது. அது அறிவுக் கருவறை. ஒரு தாய் தன் குழந்தைக்கு உலகத்தைக் காட்டுகிறாள். ஆசிரியர் பெருமக்கள்தான் அந்த பிள்ளையை உலகத்திற்கே காட்டுகிறார்கள். எனவே ஆசிரியப் பெருமக்கள் தான் பெற்ற தாய்க்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர்கள். அதை உணர்ந்த நாம் தமிழர் அரசு, ஆசிரியர் பெருமக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு மேன்மைப் படுத்தும்.
 • தனிப்பயிற்சி
  தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டாண்டுப் பயிற்சிகளோடு தாய்மொழித் திறனில் (தமிழில்) தனிப்பயிற்சியும் அளிக்கப்படும்.
 • ஊதிய உயர்வு
  ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு என்பது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வுக்குட்படுத்தப்படும். மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
 • கூடுதல் வேலைகள்
  ஆசியர்களை மற்ற புள்ளிவிபரக் கணக்கெடுப்பது, தேர்தலுக்கான விபரக் கணக்கெடுப்புப் பணிகள் உள்ளிட்ட எந்த வேலைகளிலும் ஈடுபடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாது.
 • இடமாற்றங்கள்
  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்க வகை செய்யப்படும்.

கணவன்- மனைவிக்கு வெவ்வேறு ஊர்களில் பணிமாற்றம் இருக்காது. ஒரே இடத்தில் அல்லது ஊரில் பணியமர்த்தப்படுவார்கள்.

பொதுமை

 • முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்படும். கல்வியின் தரம் மேம்படுத்தப்படும்.
 • மறுப்பவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட அரசுச் சலுகை, உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும்.
 • அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கும் போதுதான் அரசுப் பள்ளிகள் இயங்கும். அரசுப் பள்ளிகள் இயங்கினால்தான் ஆசிரியர்களின் தேவைக்கேற்பப் பணியிடங்களை நிரப்பமுடியும்.

பள்ளிகளின் ஒருங்கிணைப்பு

 • மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும், நடுநிலைப் பள்ளிகள் 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும், உயர்நிலைப் பள்ளிகள் 7 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும், மேல்நிலைப் பள்ளிகள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும் இருக்கும்படியான திட்டம் கொண்டுவரப்படும்.
 • ஒவ்வொரு பள்ளியிலும் அந்த 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் பிள்ளைகளைதான் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

தனியார் பள்ளிகளுக்கான கட்டுப்பாடு

 • தனியார் பள்ளிகளுக்கான புதிய அனுமதிகள் வழங்கப்படாது.
 • தற்போது இருக்கும் தனியார் பள்ளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அவர்களின் சமூக பங்களிப்பின் தன்மைக்கு ஏற்ப அங்கீகாரம் நீட்டிக்கப்படும்.
 • எக்காரணம் கொண்டும் கல்வி வணிகமாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. கட்டண நிர்ணயக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசிடம் மட்டுமே இருக்கச் சட்டமியற்றப்படும்.
 • தனியார் பள்ளிகளின் நிர்வாகமும் அரசும் சேர்ந்து நிலையான ஒரு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும். அதை ஏற்று ஒத்துழைக்க வேண்டும். நட்டமேற்படுகிறது, தொடர்ந்து நடத்த முடியாது என்பவர்கள், பள்ளியை அரசிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கு உரிய தொகையினைப் பெற்றுக்கொள்ளலாம்.
 • ஏரி, கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகளைத் தத்தெடுத்துக்கொள்வது, சாலை வசதிகளின் மேம்பாட்டில் பங்கெடுப்பது, அரசு அமைக்கும் ஆதரவற்ற சிறுவர் – முதியோர் இல்லங்கள் பராமரிப்பில் பங்கெடுப்பது உள்ளிட்ட சமூக நலனில் பங்கெடுத்துக்கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு அரசின் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

மாநில அரசின் உரிமை

 • மத்திய அரசின் பட்டியலில் உள்ள உயர் கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றும் உரிமையைக் கோருவோம். மற்ற மாநில முதல்வர்களுடன் சேர்ந்து மாநில உரிமையை வென்றெடுப்போம்.. உயர் கல்வி அனைவருக்கும் சமமானதாக நடத்தப்படும்.

மத்திய அரசின் பட்டியலில் உள்ள உயர் கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றும் உரிமையைக் கோருவோம்.

மாணவர்களுக்கு மிதிவண்டி

மூன்று கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் தூரங்களில் கல்விக்கூடங்கள் இருப்பதால் மாணவர்கள் மிதிவண்டியில் சென்றுவர அறிவுறுத்தப்படுவார்கள். அவர்களுக்கான மிதிவண்டிகளை நாம் தமிழர் அரசே வழங்கும்.

உயர்கல்வி அவலங்கள்

இன்று உயர் கல்விகள் அனைத்தும் வர்த்தகமாக மாற்றப்பட்டு விட்டது. வெளிநாட்டு முதலீடுகளும் கல்விக் துறையில் வந்துகொண்டிருக்கிறது. இது வசதியானர்கள் மட்டுமே உயர் கல்வியைப் பெற முடியும் என்ற அவலத்தை ஏற்படுத்தும். ஏழைகளுக்கு எட்டாக் கல்வியாக மாறும்.

கூடுதல் ஆசிரியர்கள்

 • தற்போது 30 முதல் நாற்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருக்கிறார்கள். இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமே ஒரு மனச்சிக்கலை ஏற்படுத்துகிறது.
 • அதனால் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமிக்கப்படுவார். கூடுதல் இடங்களுக்கு மேலும் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

குளறுபடிக் கல்விமுறை

தேசியக் கல்விக்குழு, ஆச்சாரியா கல்விக்குழு, இராமமூர்த்தி கல்விக்குழு ஆகிய குழுக்கள் பரிந்துரைத்த, “பொதுப்பள்ளிகளோடு இணைந்த அருகாமைப் பள்ளி” என்ற திட்டத்தைப் பாராளுமன்றமும் ஏற்றது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.

அரசுப் பள்ளிகளுடன்- தனியார் பள்ளிகளையும் இணைத்துக்கொண்டு, அனைவருக்குமான சமநிலைக் கல்விமுறை என்ற திட்டம் கிடப்பிலேயே உள்ளது. நாம் அதைப் போராடி நிறைவேற்றுவோம்.

கட்டாயக் கணினிக் கல்வி

 • ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலும் கட்டாயக் கணினிப் பயிற்சி வகுப்பு இணைக்கப்படும்.
 • சுமார் 21 ஆயிரம் கணினிப் பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி முடித்துவிட்டு வேலையின்றிக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மாணவர்களுக்கும் கணினி அறிவு புகுத்தப்படும்.

தரம் உயரும் ஆராய்ச்சிப் படிப்புகள்

 • பொறியியல், அறிவியல், வேளாண்மைத் துறைகளின் ஆய்வுக் கட்டமைப்புகள் அரசுக் கல்லூரி வளாகங்களிலோ தனியாக ஒரு இடத்திலோ நிறுவப்படும். உலகத் தரத்தில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அனைத்தும் இதில் இருக்கும்.
 • பொறியியல் தொழில்நுட்பக் கல்வி என்பது அது சார்ந்த தொழிற் சாலைகளோடு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மருத்துவ மாணவர்களைப் போன்று அவர்களும் செயல்முறையில் பாடங்களைக் கற்றுக்கொள்ள வழி செய்யப்படும். இப்படிப் பயிலும் மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக ஆக வாய்ப்பு இருக்கும்.

சுற்றுலாத் துறைக்கான படிப்பு

 • தமிழகம் சுற்றுலாத் துறையில் முக்கிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே சுற்றுலா மேம்பாட்டிற்கென்று தனியே ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
 • இதன் மூலம் தமிழகத்தின் தொன்மை, வரலாறு, முக்கிய இடங்கள் அது குறித்த வரலாறு, கடலில் மூழ்கிய சங்ககால நகரங்கள் குறித்த வரலாறு அனைத்தையும் மீட்டெடுக்கும் ஆய்வுகள் நடத்தப்படும்.

தனித்தனிப் பல்கலைக் கழகங்கள்

 • மாணவர்களின் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகைகள் உயர்த்தப்படும். உயர்கல்வி ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குப் போதிய கற்கும் வசதிகள் உடனுக்குடன் வழங்கப்படும்.

நமது காடுகளின் வளர்ப்பு, பெருங்கடல் ஆய்வுகள், கடல்சார் அறிவியல், தமிழர்களின் வரலாறு, தொல்லியல் ஆய்வுகளுக்கென்று தனியாகப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

 • நீரிடர் மேலாண்மை, பேரிடர் மேளாண்மை, இயற்கை வளங்கள், இயற்கை உர மேலாண்மை, தேனி வளர்ப்பு, காளாண் வளர்ப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த உயர்கல்விக்கென்று தனிப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்படும்.

ஆசிரியர்களின் தகுதி உயர்த்தப்படும்

 • பட்டதாரி ஆசிரியர்கள்தான் தொடக்கக் கல்விக்கான ஆசிரியர்களாக நிரப்பப்படுவார்கள். ஆசிரியர்களின் கல்வித் தரம் உயர்ந்ததாக இருக்கும்போதுதான், மாணவர்களின் அறிவுத் தரமும் உயர்ந்த்தாக இருக்கும்.
 • தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், அரும்பு, மொட்டு, மலர் என்றிருக்கும் மழலைகளுக்கான ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கான ஊதியங்கள் அனைத்தும் உயர்த்திக் கொடுக்கப்படும்.
 • நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். அதுபோல் வரும்கால தலைமுறையை வலுவானதாக உருவாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

 கல்விக் கடன் தள்ளுபடி:

கடன் வாங்கிக் கல்விக் கற்கும் நிலையில் மக்களை வைத்திருப்பது இழிவானதாகும். இதுவரை மாணவர்கள் பெற்றக் கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

‘கல்வி கடன் அல்ல கடமை’

மத்திய அரசின் நிதி

மத்திய அரசின் மொத்த வருவாயில் ஆறு சதவீத நிதியைத்தான் தேசம் முழுவதுக்குமான கல்வி நிதியாக ஒதுக்கி வருகிறார்கள். இதை மற்ற மாநில அரசுகளோடு சேர்ந்து பத்துச் சதவீதமாக ஒதுக்க நடவடிக்கையை எடுப்போம்.

மாணவர்கள் நல வாரியம்

பள்ளி-கல்லூரிகளில் ஏற்படும் குறைபாடுகள், விடுதிகளில் உள்ள சிக்கல்கள், அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளில் உள்ள தடைகள் உள்ளிட்ட பல குறைகளைக் கண்காணித்து உடனடியாகத் தீர்க்க வேண்டி இந்த நலவாரியம் செயல்படும்.

புகையிலை எதிர்ப்புப் பாடம்

 • புகையிலை ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, அதனால் ஏற்படும் புற்றுநோய், இதய, நுரையீரல் நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படா வண்ணம் புதிய பாடத்திட்டம் இணைக்கப்படும்.
 • புகையிலைக்கு எதிராக மாணவர் சமுதாயம் செய்ய வேண்டிய கடமைகள் அதில் எடுத்துரைக்கப்படும். புகையிலை பயன்படுத்தாத சமுதாயத்தை ஏற்படுத்துவதே நமது அரசின் நோக்கம்.

நூலகங்கள்

உலக மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சிறந்த நூல்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழை ஓர் ஆய்வியல் மொழியாக உயர்ந்துவோம். அத்தகைய தமிழ் நூல்களைக் கொண்டு கணினி மயமாக்கப்பட்ட நூலகங்களை எல்லா மாவட்டங்களிலும் நிறுவுவோம்.

இராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் அறிவியல் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

மீண்டும் நுழைவுத் தேர்வு

 • மருத்துவம் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும். பல தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு +2-ற்கான பாடங்களை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் பள்ளியின் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றால்தான் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை கூடுதலாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் அப்படி நடத்துகிறார்கள். அதனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் +2 பாடத்தை மட்டுமே படிப்பதால் அந்த மாணவர்கள் பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெறுகின்றார்கள். அந்த மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அவர்களுக்கு மருத்துவம் – பொறியியலில் இடம் கிடைக்கிறது.
 • ஆனால் அரசு பள்ளியில் +1 மற்றும் +2 படிக்கும் மாணவர்கள் முறையாக அந்த பாடங்களை கற்று வருகிறார்கள். அதனால் அவர்கள் குறைந்த மதிப்பென்களையே பெருகிறார்கள். மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவம் – பொறியியலுக்கான இடங்களை இழக்கிறார்கள்.
 • ‘எனவே மீண்டும் நுழைவுத் தேர்வு முறை கொண்டு வரப்படும். அதில் +1, மற்றும் +2 பாடங்களில் இருந்து சரிபாதி கேள்விகளைக் கொண்ட கேள்வித்தாள் வழங்கப்படும். இப்படி நுழைவுத் தேர்வு எழுதும்போது முறையாக படித்த மாணவர்கள் வெற்றி பெருவார்கள் எனவே தனியார் பள்ளிகளின் நலன் கருதி நிறுத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும்.

உன்னை விமர்சிப்பவர்களுக்கு நிருபிக்கப் போராடுவதை விட,
உன்னை நம்பி நிற்பவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடு!
— புரட்சியாளர் லெனின்