உரூசோ, பகுக்கப்படாத, முழுமையான, தவறெனச் சொல்ல இயலாத, எப்பொழுதும் சரியான, பொதுநலன் சார்ந்த அதிகாரவைப்பை இறையாண்மை என்கிறார். இறையாண்மை இல்லாத சட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். எனினும் 1789இல் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பின்பு இறையாண்மை என்பது ஆளுவோரிடமிருந்து நாட்டு மக்களிடம் இட மாற்றம் பெற்றது. மாக்கியவல்லி, உலூதர், போடின், ஆபெசு (Machiavelli, Luther, Bodin, and Hobbes) முதலானோர் இறையாண்மை குறித்து அரசியல் சிந்தனைகளில் முதன்மை இடம் கொடுத்துள்ளனர்.அரசை உருவாக்கும் அதிகார ஆளுமை என்றும் வன்முறைக்கு அஞ்சா அரச ஆளுமை என்றும்கூட இறையாண்மை பற்றிய கருத்துகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இறையாண்மைக்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே பொருள் என்றும் இருந்ததில்லை எனப் பன்னாட்டுச் சட்டங்களில் வல்லுநரான இலாசா ஓபன்கெய்ம் (Lassa Oppenheim) கூறுகிறார்.சட்டப்படியும் நடைமுறைப்படியுமான (De jure and de facto) அதிகார உரிமையே இறையாண்மை என்றும் சொல்லப்படுகிறது. இதன்படி இறையாண்மை என்பது குடிமக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டுள்ளதா? நடைமுறையில் அவற்றிற்குக் குடி மக்கள் கட்டுப்படுகின்றனரா என்பவற்றைப் பொறுத்ததே. ஏட்டுச் சட்டத்தை விட நாட்டுச் செயல்பாட்டிற்கே இது முதன்மை அளிக்கிறது. நிலப்பரப்பு இருந்தால்தான் இறையாண்மை இருக்குமா என்றால் அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை என்பதே உலக வரலாறு உணர்த்தும் உண்மை. இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் அமைந்துள்ள திருத்தல ஆளுகை (Holy See) என்பது நிலப்பரப்பற்ற இறையாண்மை மிக்கதாகும். இதே போன்ற நிலப்பரப்பற்ற மற்றொரு இறையாண்மை அமைப்பு இத்தாலியில் உள்ள படைவீரத் துறவிகள் தொண்டகம் (Sovereign Military Order of Malta) ஆகும். பன்னாட்டு அவையிலும் இவற்றிற்குப் பார்வையாளர் தகுதி உண்டு.
பழந்தமிழ்நாட்டில் இறையாண்மை பற்றி ஒன்றும் சொல்லவில்லையா என்று வினவலாம். அவர்கள் இறையாண்மை பற்றிக் கவலைப்படவில்லை. இறைமாட்சி குறித்துத்தான் கருத்து செலுத்தினர். அஃது என்ன இறைமாட்சி என்கிறீர்களா? இறையாண்மை மாட்சிமையுடன் – சிறப்புடன் – அமைவதைக் குறிப்பதே இறைமாட்சி. இறையாண்மை ஆளும் முறைக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் இறைமாட்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற அறவுணர்வு தமிழர்களிடம் ஓங்கியதாலே இறைமாட்சி குறித்து வலியுறுத்தினர்.தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளின் இரண்டாம் இயலான பொருளியலில் முதல் அதிகாரமாக இறைமாட்சி குறித்துத்தான் விளக்குகிறார். குடிமக்கள் நலன் சார்ந்த இறையாண்மையே இறைமாட்சி மிக்கது என்பதை அவ்வதிகாரத்தின் முதல் குறளிலும் இறுதிக் குறளிலும் குடிமக்கள் பற்றிக் குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.
இவ்வதிகாரத்தின் முதல் குறள் (381)படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. பொருளியல் முதல் குறள் மூலம் குடிமக்களை அரசின் உறுப்பாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் விளக்குகிறார்.இவ்வதிகாரத்தின் இறுதிக் குறள் (340)கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளிஎன்பதாகும்.
இதன் பொருள், நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும் மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும் என்கிறார் கலைஞர் .இறைமாட்சி என்றால், அரசனின் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின், இறை என்றார். திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்று பெரியாரும் பணித்தார் என அரசனை இறைவனுக்கு ஒப்பாகக் கூறுகிறார் பரிமேலழகர். காலிங்கர் உலகத்து மக்கட்கெல்லாம் நலிவற்ற ஆட்சியை வழங்க மன்னவர் மாட்சிமை முற்பட வேண்டும் என்பதே இறைமாட்சி என்னும் பொருளில் விளக்குகிறார்.எனவே, இறையாண்மை யாரிடம் உள்ளது அல்லது எவ்வாறு உள்ளது என்பதை விட அது மாட்சிமைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் நெறி எனப் புரிந்து கொள்ளலாம். இதுவே உலகோர் போற்ற வேண்டிய தலைசிறந்த நெறியுமாகும்.
இவற்றின் அடிப்படையில் நாம் இந்திய இறையாண்மை குறித்து நோக்கலாம்.புவிப்பரப்பில் இயல்பாய் அமைந்த நிலப்பரப்பில் கூடி வாழும் மக்களினம் தம் நலனுக்கெனத் தன்னளவில் கொண்டுள்ள அதிகாரமும் உரிமையுமே உண்மையில் இறையாண்மையாக உருப் பெருகிறது அல்லது அழைக்கப் பெறுகிறது எனலாம். இருப்பினும் உலகின் பல பகுதிகள் குடியேற்றங்களாலும் ஆட்சிப் பரவலாலும் ஆளுகைப் பகுதிகளாக உருவாகிப் பின்னர் இறையாண்மை மிகுந்த நாடுகளாக விளங்குகின்றன. இதைப்போன்றே இந்தியா என்று இன்று அழைக்கப் பெறும் இந்நிலப் பரப்பும் இயல்பாய் உருவான இயற்கை நாடல்ல. அயலவர் ஆட்சி வசதிக்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆளுமைப் பகுதியே.
இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல் தனித்தனியாக இருந்தன. பின்னர் ஒவ்வொன்றாகப் பிரியவும் சேரவும் புதிய புவிப்பரப்பு உருவாகியுள்ளது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இலங்கையும் ஆப்கானிசுதானும் பிரிந்தன. 1935இல் பருமாவும் (மியான்மர்); 1947 இல் பாகிசுத்தானும் பிரிந்தன. அதேபோல் மாகி-காரைக்கால்- புதுச்சேரிப் பகுதிகளும்(1954), கோவா(1961), சிக்கிம் (1975) டையூ-டாமன்(1987) ஆகியனவும் இந்தியாவுடன் இணைந்தன. வெவ்வேறு காலங்களில் பெரு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு இந்தியா எனப்படும் பரப்பிலிருந்து சில நிலப்பரப்புகள் பிரிக்கப்பட்ட பொழுதும் வேறு சில நிலப்பரப்புகள் சேர்க்கப்பட்ட பொழுதும் சில நிலப்பரப்புகள் மாற்றியமைக்கப்பட்ட பொழுதும் இந்நிலப்பரப்பின் பெயர் மாற்றப்படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பரப்பளவு சுருங்கியும் விரிந்தும் இந்திய இறையாண்மை என்பது இவ்வாறு மாறுதலுக்குள்ளாகும் பொழுது அதனை நிலையானதாகக் கருதி, அது பற்றிப் பேசக் கூடாது என்பது நடைமுறைக்கேற்றதல்ல. ஆளும் அதிகாரம் நாம் வாழும் நிலைக்கு ஊறு விளைவிக்கும் பொழுது அது குறித்துப் பேசித்தான் ஆக வேண்டும் என்பது உலக நடைமுறையே. மக்களாட்சி மக்களாட்சியாகவே விளங்குவதற்கு இறையாண்மை குறித்த கருத்துப் பரவல்கள் தேவை. எனவே, இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகும் பொழுது கருத்தாய்வுகள் எழுவது இயற்கையே. இதனை வரவேற்று உரியவாறு செப்பம் செய்யும் பொழுதுதான் இந்திய இறையாண்மை செழுமை அடையும்.நம் நாட்டமைப்பு எத்தகையது எனக் குறிப்பிடும் 26.11.1949 இல் அறிவித்து 1950இல் வெளிவந்த இந்திய அரசியல் யாப்பு பேரரசாண்மை வாய்ந்த மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிட்டது. பின் 1976 இல் நடைமுறைப்படுத்திய திருத்தத்தின்படி, பேரரசாண்மை வாய்ந்த சமநலமை நெறிசார்ந்த சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு எனக் குறிப்பிடுகிறது. நாம் இறையாண்மை என்பதுதான் இந்திய அரசின் தமிழ் மொழி பெயர்ப்பில் பேரரசாண்மை எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் விதி முதல் உட்பிரிவில் 1.1. இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக இருத்தல் வேண்டும். எனக் குறிக்கப்பட்டுள்ளது. states என ஆங்கிலத்தில் குறிப்பதை மாநிலங்கள் என மொழி பெயர்த்துள்ளனர். எனினும் united states of America என்னும் பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்வது போல் அரசுகளின் ஒன்றியம் என்று குறிப்பிடுவதே சிறந்தது. அவ்வாறு குறிக்கும் பொழுது ஒவ்வோர் அரசும் இறையாண்மை மிக்க அரசாக இருத்தலை உணர்த்துவதாகக் கொள்ளலாம். இந்திய ஆட்சியால் ஏற்கப்பட்ட அரசியல் யாப்பின்படி இந்தியாவை அல்லது பாரதத்தை நாடு என்று கூறுவதுகூடத் தவறுதான். பரத அரசுகளின் கூட்டமைப்பு என்று சொல்லலாம். இங்கே பரதம் என்பது பரதனின் பெயரால் வந்தது அல்ல. இந்நிலப்பகுதி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முற்றிலும் தமிழர்களால் ஆளப்பட்டு வந்த தமிழ்நிலமாக இருந்தது. கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பரதவர்கள் எனப்பட்டனர். பெரும்பான்மைப் பரதவர்களால் சூழ்ந்த நிலப்பகுதி பரதவ நாடு என்றும் பின்னர்ப் பரதநாடு என்றும் அழைக்கப்பெற்றது. இதுவே பரதனின் பெயரால் அமைந்த நாடு என்று தவறாகவும் எண்ணப்படுகிறது. இதுவே பின்னர் பாரதநாடாகவும் குறிக்கப் பெற்றது. இந்தியா என்ற பெயர்தான் வேண்டுமென்றால் தமிழ் இந்தியா என்று அழைக்கப்படலாம். இனி, எவ்வாறு அழைக்கப்படலாம் என்பது குறித்து ஆராயாமல், தற்போதைய சூழலில் இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது தவறா எனப் பார்ப்போம்.
இந்திய அரசியல் யாப்பு விதி 19.1.இல் பின்வருமாறு கூறுகிறது.19.1.அ. குடிமக்கள் அனைவரும், அ.பேச்சு உரிமைப் பேற்றுக்கு மற்றும் சிந்தனை வெளிப்பாட்டு உரிமைப் பேற்றுக்கு உரிமை உடையவர் ஆவர்.இதற்கிணங்க இந்திய இறையாண்மை குறித்துப் பேசுவது அல்லது சிந்தனையை வெளிப்படுத்துவது சட்டப்படித் தவறாகாது. இந்திய அரசியல் யாப்பு விதி
29.1. தமக்கெனத் தனிவேறான மொழி, எழுத்துரு அல்லது பண்பாடு உடையவராயும் இந்திய ஆட்சிப் பரப்பில் அல்லது அதன் பகுதி எதிலும் குடியிருப்பவராயும் உள்ள குடிமக்களின் பிரிவினர் எவரும் அவற்றைச் சிதையாது காக்கும் உரிமை உடையவர் ஆவர். எனக் குறிக்கிறது. எனவே, நமது மொழிக்கோ எழுத்துருவிற்கோ பண்பாட்டிற்கோ சிதைவு நேரும் பொழுது அல்லது சிதைவு நேரும் வாய்ப்பு உள்ளது என அச்சம் வரும் பொழுது அது குறித்துப் பேச ஒவ்வொருவருக்கும் உரிமையை நமது அரசியல் யாப்பே தந்துள்ளது.
மேலும் இந்திய அரசியல் யாப்பு 344.3. இந்தியாவின் தொழில், பண்பாடு, அறிவியல் ஆகியவற்றின் முன்னேற்றத்தையும் பொதுப்பணிகள் பற்றிய வகையில் இந்தி மொழி பேசாத பரப்பிடங்களைச் சேர்ந்தவர்களின் நேர்மையான கோருரிமைகளையும் நலப்பற்றுகளையும் உரியவாறு நாட்டத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும்.
எனக் குறிப்பிடுகிறது. இந்த விதி இந்தியைப் பரப்புவதால் ஏற்படும் நலக்கேடுகளைக் குறித்தாலும் வேறுவகையிலும் இவ்வாறு நலப்பற்றுகளை நாட்டத்தில் மேற்கொள்ளாமல் அரசுகள் நடந்து கொள்ளும் பொழுது அது குறித்துத் தட்டிக் கேட்கும் உரிமை, நலப்பற்றுகளை இழந்தவர்களுக்கு உரித்தாகின்றது. இருப்பினும் பின்னர்க் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இந்தியாவின் பேரரசாண்மை, ஒருமைப்பாடு, ஏமக்காப்பு, அயல்நாட்டரசுகளுடன் நட்புறவு முதலானவற்றிற்கு எதிராக விதி 19.1.அ. பயன்படுத்தப்படக் கூடாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்கவே அயல்நாட்டு நட்புணர்விற்கு எதிராகப் பேசுவதைக் குற்றமாக அரசு கருதும் நிலைப்பாடு வருகிறது. எனினும் நாம் ஒன்றைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். இறையாண்மை என்பது அதிகாரம் உறைதலைக் குறிப்பதால் இந்த அதிகாரமானது நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக மாறும்பொழுது அதைத்தட்டிக் கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. பலராலும் பலவகையாக விளக்கப்படும் இறையாண்மை என்பதன் அடிப்படையில் குற்றம் சுமத்துவது நல்லரசிற்கு ஏற்றதல்ல. இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சிங்கள அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதைக் குற்றம் எனக் கருதினால் இறையாண்மை இலக்கணத்தின்படி, முப்படைகளும் பொருள்களும் அமைச்சும், நட்பும் அரணும் உடைய தமிழ்ஈழ இறையாண்மைக்கு எதிராக இந்திய அரசு நடந்து கொள்வதும் தவறாகிறது.
நிலப்புற அரசுகளும் (States on exile) இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன. அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத் அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது. இப்பொழுது நிலப்புறத் தமிழ்ஈழம் (Eezham on exile) அமைக்கப்பட்டுள்ளதும் இறையாண்மை மிக்கதாகக் கருதப்பட வேண்டியுள்ளது. இவற்றின் அடிப்படையில் சிங்கள இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளை ஆராய வேண்டும்.
ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டு மக்களுக்கு எதிராகவோ நம் நாட்டிற்கு எதிராகவோ பிற நாடு அல்லது பிற நாடுகளுக்கு எதிராகவோ அமைந்தது எனில் அது குறித்து யாரும் பேசலாம் அல்லது எதிராகச் செயல்படலாம் என்னும் பொழுது அந்த இறையாண்மை மீறலால் துன்பங்களுக்கு உள்ளாவோர் அந்த அயல்நாட்டு இறையாண்மைக்கு எதிராகப் பேசுவது குற்றமே ஆகாது. மாறாக தன் நாட்டுமக்களின் உணர்விற்கு எதிராக அந்த நாட்டு அரசின் இறையாண்மையைக் காக்க முற்படும் அரசின் செயல்பாடுதான் குற்றமாகிறது. தமிழர்க்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், தமிழர் படுகொலைகள் நடைபெற்றிருக்காது. தமிழ் மீனவனைத் தாக்கினால் சிங்கள மாணவன் தாக்கப்படுவான் எனப் பேசுவதற்கே தேவையில்லாமல் அரசே உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். இறையாண்மை மிக்க அரசிற்கு எதிராகச் சிங்களம் வாலாட்டாது. இந்தியாவும் இறையாண்மை மிக்க நாடுதானே! அப்பொழுதும் சிங்களம் அஞ்சவில்லையே என எண்ணலாம். இந்திய அரசு என்பது தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. எனவே, ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றும் பொழுது இந்திய இறையாண்மை குறித்துச் சிங்கள இறையாண்மைக்குக் கவலை இல்லை. செம்மொழிச் சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப் பலி கொடுத்து விடுவார்களோ என்று அஞ்ச வேண்டியுள்ளது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே அச்சத்தைத் தெரிவித்துள்ளார் எனில் இந்தியா எப்பொழுதும் தமிழர் நலனில் கருத்து செலுத்தாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், நமக்கென இறையாண்மை மிக்க அரசு இருந்தது எனில், இத்தகைய அவலங்கள் ஏற்பட்டிருக்காது. போர்க்குற்றங்களும் படுகொலைகளும் நடைபெற்றிருக்காது, சிங்கள அரசின் கொடுங்குற்றச் செயல்களை இறையாண்மை மிக்க தமிழக அரசு, தானே உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வரும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய சூழலில் இந்திய இறையாண்மை சிங்கள இறையாண்மைக்கு வால்பிடித்து அலையும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
இத்தகைய குற்றச் செயல் நிகழ்வுகளுக்கு இந்திய இறையாண்மை உடன்படுவதன் காரணம் என்ன? இறையாண்மை மிக்க அரசுகளின் கூட்டிணைவாக ஒன்றிய அரசு அமையாமல் தனி வல்லரசாக நடைமுறையில் மாறியுள்ளதே காரணம் என்பது எளிதில் யாவர்க்கும் புரியும். எனவே நம் நலன் காக்க நாம் இறையாண்மை மிக்க அரசாகத் தமிழக அரசு விளங்க வேண்டும் என வேண்டுவது முற்றிலும் அறவழிப்பட்டதே. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பொழுதே செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1942 இல் சங்க இலக்கியம் இதழ் மூலம் பின்வருமாறு வினாக்கணை தொடுத்தார்.தமிழா சிந்தனை செய்!வீரத்தமிழா வீறிட்டெழு!முன்னை நிலையை உன்னிப் பார்!நாடு – பரந்த தமிழகம் குறைந்ததேன்?மொழி – உலகாண்ட உன் மொழியை ஒடுக்குவதேன்?வீரம் – இமயம் கொண்ட ஏற்றம் எங்கே?ஆட்சி – பாவலனைப் போற்றிய காவலனெங்கே?வாணிகம் – கப்பலோட்டிய கண்ணியம் எங்கே? கொடை – பெருந்சோறளித்த பெருமைதான் எங்கே? தாய்மொழி உயரத் தாய்நாடு உயருமே!
இவ்வினாக்களுக்கெல்லாம் தீர்வு வேண்டுமெனில் தமிழகம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்தல் வேண்டும்.கோட்டையில் இந்தியத் தேசியக்கொடியேற்றும் உரிமையைத்தான் முதல்வரால் பெற முடிந்ததே தவிர, அவர் வேண்டியவாறு தமிழக அரசிற்குத் தனிக் கொடியைப் பெற இயலவில்லை. காவல் துறை போன்ற பல துறைகளுக்கெனத் தனித் தனிக் கொடிகள் இருப்பினும் மாநில அரசுகளுக்குத் தனிக் கொடி இருப்பதை இந்திய இறையாண்மை விரும்பவில்லை. நாம், இந்திய இறையாண்மையில் சிக்கியுள்ளதால் இந்தி மொழித் திணிப்பிற்கும் சமசுகிருதமயமாக்கத்திற்கும் ஆளாகி அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திய கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறியும் கூட அதனைச் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க்கடவுள்களுக்கான கோயில்களில் தங்கள் மொழியாகிய தமிழில் வழிபாடு நடத்த முடியவில்லை.ஓர் அரசு ஒரு நாட்டின்மீது நடைமுறை ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துகிறது; ஆனால் அந்த நாட்டின் அரசுடன் இணைந்து செயல்படவில்லை எனில் அந்த அரசு அயலக இறையாண்மை உடையதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்திய இறையாண்மை என்பது தமிழகத்திற்கு(ம் பிற மாநிலங்களுக்கும்) அயலக இறையாண்மையாக விளங்குகிறது எனலாம்.
தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர் . . . இந்திய கூட்டரசின் உறுப்பு நாடான தமிழகத்தைப் பற்றி உலகுக்கு அறிவிப்பதற்கு இந்தியக் கூட்டரசு எள்ளத்தனையும் செய்திலது. வெளிநாடுகளில் இந்தியா, இந்தி என்றுதான் விளம்பரப்படுகின்றது என்றும்இந்திய அரசினர்க்குத் தமிழகம் என ஒன்றுகூடாது; தமிழ் இனம் எனக் கூறல் சாலாது. தமிழர் பண்டைய வரலாற்றை, மறக்கச் செய்து மறைக்கத்தான் வழிகோலுவார்கள் போல உள்ளது. . . நமக்கு உயர்வு தரும் நமது பழைய வரலாற்றை மறைத்து விட்டு, மறந்து விட்டு நாம் எதற்காக வாழ வேண்டுமோ? வரலாறு மறந்த வாழ்வு வரலாற்றில் இடம் பெறாது என்பது உலகம் அறிந்த உண்மை என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே தெரிவித்த உண்மையும் கவலையும் எச்சரிக்கையும் இன்றும் மாறாமல் இருக்கும் காரணம் நமக்கென இறையாண்மையுள்ள அரசு அமையாததுதான்.பணக்குறியீட்டில் தேவநாகரி எழுத்து புகுந்துள்ளது. கணிணி வழி கிரந்தம் புகுந்து தமிழ் எழுத்துகளை அழிக்கப் பார்க்கின்றது. இந்திய இறையாண்மையின் எழுத்தழிப்பு முயற்சிகள் குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
எல்லா மொழிகளுக்கும் ஒரே எழுத்து என்பது முற்றிலும் பொருந்தாது. இத்திட்டமும் இந்திமொழி ஒன்றையே நிலைக்கச் செய்யவும் ஏனைய மொழிகளை அழிக்கச் செய்யவும் உதவுவதற்கே கொண்டு வரப்படுகின்றது. . . . ஒரு மொழிக்குரிய ஒலிகளை இன்னொரு மொழிக்குரிய எழுத்தால் எழுத முயல்வது உயிர் கூடுவிட்டுக் கூடு பாய்வதை ஒக்கும். . . . .இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். மொழியின் உடல்போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்தபின்னர், மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? . . . . கூட்டரசு என்று கூறிக்கொண்டு அரசு மொழிகள் அனைத்துக்கும் சம உரிமையும் நிலையும் அளியாது ஒரு மொழிக்கு மட்டும் உயர்வு அளித்து ஒருமொழித் தனிஅரசுபோல் செய்வது என்றும் பொருந்தா வல்லாண்மை நெறியாகும்.
தமிழக அரசிற்கு இறையாண்மை இல்லாத வரை இவை மேலும் மோசமாக நம்மைஇட்டுச் செல்லுமே தவிர நமக்கு அறம் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு தனி இறையாண்மை கோருவது என்பது பிரிவினை ஆகாதா எனச் சிலர் எண்ணலாம். தனித்தமிழ் நாடு என்னும் நிலைப்பாடு வேறு. தமிழர்களுக்கென்று இறையாண்மை உள்ள அரசு வேண்டும் என்பது வேறு. கூட்டாட்சி (federation govt.) முறையில் பரதக் கண்டம் தேசிய இன அரசுகளின் கூட்டிணைவாக இருத்தல் வேண்டும். அதன் அடிப்படையில் தேசிய அரசுகளுக்குத் தனித்தனி இறையாண்மை இருக்கும். கூட்டிணைவிற்குத் தனி இறையாண்மை இருக்கும், ஒவ்வொருவருக்கும் தேசிய அரசின் குடியுரிமை, கூட்டிணைவின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை இருக்கும். இதன்படி நாம் முதலில் தமிழ்க் குடிமக்களாகவும் அடுத்து பரதக் கூட்டரசின் குடிமக்களாகவும் இருப்போம். இந்திய அரசியல் யாப்பு அதற்கு இடம் தருமா என்று ஐயம் வரலாம். நமக்கு எது தேவையோ அதற்கேற்பத்தான் இந்திய அரசியல் யாப்பு இருக்க வேண்டுமே தவிர இந்திய இறையாண்மைக்குள் நம் உரிமைகளைத் திணிக்கக் கூடாது. என்றாலும் தற்போதைய அரசியல் யாப்பின் அடிப்படையிலேயே நமக்கு இவ்வுரிமை வழங்கப்பட முடியும்.
1957 இல் சம்மு-காசுமீருக்கெனத் தனி அரசியல்யாப்பு இயற்றப்பட்டு இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநில மக்கள் முதலில் சம்மு-காசுமீர்க் குடிமக்கள்; பின்னர்தான் இந்தியக் குடிமக்கள், எனவேதான் அவர்களது அரசியல் யாப்பு (அரசமைப்புச் சட்டம்) முகவுரை, சம்மு-காசுமீர் குடிமக்களாகிய நாங்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இந்திய இறையாண்மை, வல்லாண்மை மிக்கதாக உள்ளதால் தன்னாட்சி மிகுந்திருந்த சம்மு-காசுமீர் மாநிலத்தின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, தமிழர்க்கு இறையாண்மை நிறைந்த அரசியல் யாப்பு இயற்றப்படும் பொழுது அதற்கேற்ப பரதக் கண்டக் கூட்டரசின் இறையாண்மையும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்தக் கூட்டரசுகளின் பாதுகாப்பு, நாணய வெளியீடு, கூட்டரசுகளின் இடையேயான வான்வழிப் போக்குவரத்து முதலான சில மட்டும் ஒன்றியத்தின் இறையாண்மைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
இவற்றால் நாட்டுத்தலைமையின் அதிகார வரம்பைத்தான் இறையாண்மை குறிக்கின்றதே தவிர, வேறு சிறப்பு இல்லை என்பதும் அந்த இறையாண்மை மாட்சிமை மிக்கதாக விளங்க வேண்டும் என்பதையும் செயற்கையாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்திய நிலப் பரப்பு தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என்பதையும் உலகில் தோன்றிய முதல் இனமான தமிழ் இனம் தனியுரிமையுடன் தன்னாட்சி செலுத்தும் வகையில் இறையாண்மையும் இறைமாட்சியும் மிக்க அரசினைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதையும் தற்போது தமிழினத்திற்கு ஏற்பட்டு வரும் அழிவுகளுக்கெல்லாம் அதுவே அருமருந்தாய்த் திகழும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளலாம்.எனவேதமிழ் நிலத்தில் தமிழ் முதன்மை பெறதமிழர் தலைமை பெறதமிழர்க்கான இறையாண்மை அரசு அமையட்டும்!
இப்படிக்கு ,
இலக்குவனார் திருவள்ளுவன்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்