வடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலாரை வணங்கிப் போற்றுவதற்காக இலட்சக்கணக்கான அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை தமிழ்நாடு அரசு கையகப்படுத்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐயா வள்ளலாரின் மெய்யியல் வழியைப் பின்பற்றும் அடியவர்கள் பல இலட்சக்கணக்கில் கூடும் தைப்பூசத்திருநாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்ற நாம் தமிழர் கட்சியின் நெடுநாள் கோரிக்கையை முந்தைய அதிமுக அரசு ஆட்சி முடியும் தருவாயில் மிக காலதாமதமாக கடந்த 2021ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் நிறைவேற்றியது.
தமிழ் மண்ணை கடந்த 56 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி புரிந்துவரும் இரு திராவிடக் கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக பேரருளாளர் வள்ளலாரின் புகழைப் போற்றுவதற்கோ, அவர் காட்டிய சமத்துவ வழியைப் பரப்புவதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு திடீரென்று இப்போது வள்ளலாரின் மீது பற்றுக்கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ள முயல்வது ஏன்? விழாக்காலங்களில் பல இலட்சக்கணக்கான அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை, வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையம் அமைப்பதற்காக திமுக அரசு கையகப்படுத்த நினைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று. ஏறத்தாழ 70 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஆய்வு மையத்தால் அங்கு கூடும் அடியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதோடு, கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நிகழவும் வாய்ப்பேற்படும். எனவே, திமுக அரசு வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையம் அமைப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அதனை வடலூரிலேயே வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் மற்றும் அடியவர்களின் கோரிக்கையை ஏற்பதே நியாயமானதாக இருக்கும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உயர்மநேயர், தமிழர் மெய்யியல் மீ்ட்பர் வள்ளல் பெருமானார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியைக் கையகப்படுத்துவதை விடுத்து, புதிதான அமைக்கப்படவிருக்கும் பன்னாட்டு ஆய்வு மையத்தை வடலூரில் யாருக்கும் பாதிப்பில்லாத வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.