சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

293

சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசால் சீர்காழியில் அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பின்றி, பழுதடைந்து, மூடிக்கிடக்கும் அவலநிலை மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தமிழிசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை செயல்படாத நிலைக்கு தள்ளியுள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழும் இசையும் ஒன்றோடொன்று இணைபிரியாமல் பல்லாயிரம் ஆண்டுகாலமாக மக்களின் வாழ்வியலுடன் தமிழ்மண்ணில் வழங்கி வரப்படுகிறது. தொல்காப்பியம் தொடங்கிச் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம் போன்ற ஐம்பெரும் காப்பியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் தமிழிசையின் கூறுகள் காணப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க தமிழிசையை வளர்த்தெடுத்த பெருமை தமிழிசை மூவராகிய முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் மற்றும் மாரிமுத்தாபிள்ளை அவர்களையே சாரும். நாடு போற்றும் நற்றமிழர்கள் மூவரும் வளர்த்தெடுத்த தமிழிசையை அவர்களுக்குப் பின்பு தோன்றிய தியாகராஜர் தெலுங்கு கீர்த்தனைகள் எழுதி கர்நாடக சங்கீதமாக மாற்றினார். அதன் தாக்கத்தால் இன்றுவரை தமிழிசை மறைந்து கர்நாடக சங்கீதமே மக்களிடத்தில் பெருமளவில் வழங்கப்படுகின்றது. தமிழிசையை மீட்கும் கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கே உள்ளது. குறிப்பாகத் தமிழ் வளர்ச்சித் துறை இதில் முதன்மையாகத் தனி கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசால் தமிழிசையின் வரலாற்றைப் போற்றும் விதமாக அதை வளர்த்தெடுத்த தமிழிசை மூவருக்குச் சீர்காழியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அந்த மணிமண்டபம் தற்போது பழுதடைந்து, இயங்கா நிலையில் உள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஊடாகத் தமிழ், தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த திமுகவின் தற்போதைய ஆட்சிக்காலத்தில், முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழைப் போற்றும் மணிமண்டபத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம்கூடத் தரப்படாமையால் மணிமண்டபம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் பெருந்துயரம்.

ஆகவே, சீர்காழியில் அமைந்துள்ள தமிழிசை மணிமண்டபம் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக அரசின் அதிகார அடக்குமுறை பச்சையான சனநாயகப் படுகொலை! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஇராயபுரம் தொகுதி குருதிக்கொடை முகாம்