திராவிடம் என்றால், எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான்..! – சீமான் சீற்றம்

125

திராவிடம் என்றால், எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான்! – சீமான் சீற்றம்

‘அடிமை வாழ்வினும் உரிமைச் சாவு மேலானது. அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானது!’ என்று எம்மின முன்னோர்கள் வைத்த புரட்சிகர முழக்கத்திற்கு ஏற்ப அந்நியப் பேராதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் மிகவும் முதன்மையானவர் விடுதலை போராட்ட வீரர், எங்களுடைய பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்கள். மாடு கூட இழுக்கத் திணறுகின்ற செக்கை ஒரு மனிதர் இழுத்தார் என்பதை எவரும் கற்பனைக்கூடச் செய்ய முடியாது. இன்று நாங்கள் பேசும் தற்சார்பு பொருளாதாரத்தை அன்றைக்கே கடைப்பிடித்தவர். வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்தவர். தமிழ் ஓலைச்சுவடிகளைச் சேமித்து வைத்தவர். நாங்கள் இன்று பேசும் தமிழ்த்தேசியம் எனும் பொருள்படும்படி Tamil Nation எனும் இதழை நடத்தியவர். தமிழர்களின் மானம் கப்பலேறிவிடக்கூடாது என்பதற்காகக் கப்பல் ஓட்டிய பெருந்தமிழர். அவருடைய ஈகங்களுக்கு இணையாக இந்த மண்ணில் எவரும் தியாகம் செய்யவில்லை. அனைத்து சொத்தையும் விற்றுவிட்டு, இறுதிக்காலத்தில் வறுமை காரணமாக மண்ணெண்ணெய் விற்று வாழ்ந்து வந்தார் என்பதும். அத்தகைய பெருந்தலைவனின் பிள்ளைகள் அனுபவிக்காத பதவிகளை இன்று யார் யாரோ அனுபவிக்கிறார்கள் எனும் வரலாற்றுப் பெரும்பிழை தான் மிகவும் வேதனைக்குரிய செய்தி. அந்தப் பாட்டனாருடைய பிறந்தநாளில் அவருடைய வழியில் பயணிக்கும் இந்தத் தலைமுறை பிள்ளைகள், சாதி, மாத உணர்ச்சிகளையெல்லாம் கடந்து எங்கள் மண்ணை அந்நியர்கள் ஆக்கிரமிக்கக் கூடாது, களவு போய்விடக்கூடாது என்று எந்தப் புனித நோக்கத்திற்காக எங்கள் இன முன்னோர்கள் போராடினார்களோ அதையெல்லாம் நிறைவேற்றுவதற்காகவாவது தமிழிளந்தலைமுறை பிள்ளைகள் ஒன்றிணைந்து நாம் தமிழர்கள் என்ற பெரும்படையாக மாறி வருகிறோம். அதுதான் எங்கள் பாட்டனாருக்கு நாங்கள் செய்கிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும். தமிழினப் பிள்ளைகள் பெருமிதத்தோடும் திமிரோடும் எங்கள் பாட்டனார் வ.உ.சிதம்பரனாருக்குப் புகழ்வணக்கம் செலுத்துவதில் பெருமிதமும் நெகிழ்ச்சியும் அடைகிறோம்.

தமிழ் நூல்களைத் தொகுத்து திராவிடக் களஞ்சியம் என்று தமிழக அரசு பெயர் வைப்பது தேவையற்றது. அதனை எதிர்த்துக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளோம். இச்சிக்கல் தொடரும்பட்சத்தில் வழக்குத் தொடரவும் உ ள்ளோம். அமைச்சர் சொல்வதுபோல நாங்கள் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கவில்லை வரவில்லை; குட்டையே எங்களுடையது என்கிறோம். யார் குழப்புவது, யார் தெளிவற்று இருக்கிறார்கள் என்று முதலில் புரிந்துகொண்டு பேச வேண்டும். தமிழர்களுக்குத் திராவிடர் இல்லாது அரசியல் இல்லை என்கிறார்கள். திராவிடரால் எங்களுக்கு ஒரு அரசியலும் இல்லை. ஆனால் தமிழர் என்று சொல்லாது இங்கு எவருக்கும் அரசியல் இல்லை. அரியத்திற்கு எதிரான கருத்தியல்தான் திராவிடம் என்றார்கள். தெலுங்கர், கன்னடர், மலையாளி, குஜராத்தி, மராத்தி என்று அவரவர் அவரவருடைய அடையாளங்களோடு வாழும்போது தமிழர்கள் நாங்கள் மட்டும் ஏன் திராவிட முகமூடி போட்டு அலைய வேண்டும்? தமிழம்தான் திரிந்து திராவிடம் என்று ஆகிவிட்டது என்கிறார்கள். நாங்கள் திரிந்த பாலையே பயன்படுத்துவதில்லை. நாங்கள் எதற்குத் திரிந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும்? தமிழம் என்ற சொல்தான் உயிரோடு இருக்கிறதே? பிறகு ஏன் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்? முதலில் ஆரியத்திற்கு எதிரான சொல் என்றீர்கள். பிறகு அது மரபினம் என்றீர்கள். தற்போது தமிழம்தான் திரிந்துவிட்டது என்கிறீர்கள். ஒரு கோட்பாட்டில் முதலில் உறுதியாக நிற்க முடிகிறதா உங்களால்? சாதியை மறுப்பவன் திராவிடன் என்றால் நாங்கள் எல்லாம் சாதியை ஏற்றுக் கொண்டுள்ளோமா? தமிழர்கள் என்றால் பிராமணர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்று கூறுகிறீர்கள். நாங்கள் பத்தாண்டுகளாகக் கட்சி நடத்துகிறோம். ஒரு பிராமணர்கூட நாங்களும் தமிழர் என்று வரவில்லையே? ஆரியர், திராவிடர் இருவரும் ஒன்றுதான் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்கத்தேவர் கூறினார். அவர் சொன்னதுபோல் இன்றைக்கு நாங்கள் தமிழர்கள் என்றவுடன் எங்களை எதிர்ப்பதில் இருவரும் ஒன்று கூடியுள்ளார்கள். திராவிடக் களஞ்சியம் என்ற ஒன்று எங்கே உள்ளது? கால்டுவெல்லுக்குப் பிறகு வந்த நூல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது? தமிழ் மொழியில்தானே? அப்படியென்றால் அவையும் தமிழ் இலக்கியங்கள்தானே. கால்டுவெல்லே திராவிடம் என்ற சொல்லை மனுஸ்மிரிதியிலிருந்துதான் எடுத்ததாகக் கூறியுள்ளார்,. வடக்கிருந்து வந்த பிராமணர்களைக் குறிக்கவே அந்தச் சொல்லை பயன்படுத்தியுள்ளனர். வாக்கு கேட்கும்போதும், மாநாடு போடும்போதும், ஏன் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. திராவிடர் தலைவர், திராவிட இனத்தலைவர் என்று பட்டம் போட்டுக்கொள்ளாமல் ஏன் தமிழினத் தலைவர்கள் என்று ஏன் போட்டுக்கொள்கிறார்கள்? எனில் ஆட்சியதிகாரத்தை அடைய தமிழ், தமிழர் வேண்டும். பதவி, அதிகாரத்தை அடைந்தவுடன் திராவிடன் ஸ்டோக் தேவைப்படுகிறது. தமிழரா? திராவிடரா? என வாதம் செய்யத் தயாரா?

திராவிடம் என்றால், எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, கணக்கிலடங்கா இலஞ்சம்-ஊழலில் திளைத்து பெருத்து, எங்கள் நிலத்தின் வளத்தைக் கெடுத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, காடு, மலை, ஏரி, அருவி, ஆறு எல்லாவற்றையும் அழித்து நாசம் செய்ததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்.

அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என்று பெயரை மாற்றினால் மட்டும் போதாது. ஈழத்தமிழர்களை வதைக்கும் சிறப்பு முகாம்களை உடனடியாக மூடவும். அவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைபடுத்தும் க்யூ பிரிவைக் கலைக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

தமிழக அரசு, சட்டப்பேரவையில் புதிய திட்டங்களுக்காக வெளியிட்டுள்ள அறிவிப்புகளை வெற்று அறிவிப்புகளாக மட்டுமே பார்க்கிறோம். ஏனென்றால் ஐம்பதாண்டுகளாக வெறும் அறிவிப்புகளை மட்டுமே பார்த்துப் பழகியுள்ளோம். மேலே மோடி அறிவிக்கிறார். கீழே இவர்கள் அறிவிக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து அடுத்த நிதிநிலை அறிக்கை வெளியாகும்பொழுது இந்த அறிவிப்புகள் எல்லாம் என்னவாகும் என்பது தெரிந்தது தானே?

வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டிடுவோம். அது தொடர்பாகக் கடந்த மூன்று நாட்களாக மாவட்டவாரியாகக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலைவிட வரும் தேர்தலில் இன்னும் அதிக மக்கள் ஆதரவுடன் முன்னேறிச் செல்வோம். தமிழக அரசு பள்ளி, கல்லூரி அருகே போதைபொருட்கள் விற்பனையைத் தடைசெய்வோம் என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். குட்கா விற்பனைக்குத் தடை விதித்துள்ள அரசு, குவாட்டரை ஏன் தடை செய்யவில்லை? டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப்பொருள் இல்லையா?