காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்

74

செய்தி: காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம் | நாம் தமிழர் கட்சி

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு!

வணக்கம்.

எல் & டி கப்பல் கட்டுமானத் தளத்திற்காக 2008-இல் காட்டுப்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போது, வேலை இழந்தவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று 2008 முதல் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உறுதியளிக்கப்பட்டு வந்தாலும், தற்போது வரை அவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாகவேப் பணியாற்றி வருகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. காட்டுப்பள்ளிக் குப்பத்தைச் சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் உடனடியாக நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவதற்குத் தேவையான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று அம்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் தரப்பில் வலியுறுத்துகிறேன். மேலும் இதே நிலை நீடிக்குமாயின் சட்டத்திற்குட்பட்டு அவர்களுக்குத் தேவையான உரிமைகளைப் போராடிப் பெற்றுத்தரவும் தயங்கமாட்டேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மின்னஞ்சலுடன் தமிழக முதல்வர் பார்வைக்கு அம்மக்களுக்கு இழைக்கப் பெற்றிருக்கும் சிக்கல்களைப்பற்றியும், அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வினையும் முன்வைத்து அவர்களின் சார்பில் விரிவானதொரு கோரிக்கை மனுவினையும் இணைத்துள்ளேன். நன்றி.

– செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

கடித நகல்:

காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும்
ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு!

வணக்கம்.

தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி (23.01.2008) எல் & டி கப்பல் கட்டுமானத் தளத்திற்காக காட்டுப்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, களஞ்சி கிராமத்திற்கு அருகே குடியமர்த்தப்பட்டுள்ளனர். மக்களுக்கும், நிறுவனத்துக்குமிடையே 31.05.2008 மற்றும் 14.08.2008 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு சார்ந்த ஒப்பந்தம் இடப்பட்டது. இதன்படி, இடமாற்றத்தினால் வேலையிழந்த மக்களுக்கு அமையவிருந்த எல்&டி திட்டத்தில் நிரந்தர வேலை வழங்குவதற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19.08.2008 அன்று மக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் மூலம் ஆட்சியர் அவர்களின் செயல்முறை உத்தரவு 26.08.2009 அன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் 139 பேர் ஒப்பந்ததாரப் பணியாளர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளது தெரியவருகிறது.

2008ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரந்தரப்பணி வழங்கப்படவில்லை, இதனால், எல் & டி நிறுவனத்திற்கும் காட்டுப்பள்ளிக்குப்பம் கிராமத் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் 05.02.2014 அன்று மீண்டும் ஒரு ஒப்பந்தம் இடப்பட்டது. இதன்மூலம், 139 தொழிலாளர்களுக்குத் தொழிற்பயிற்சி 2 ½ ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு முடிவில் (04.08.2016) தேர்ச்சிபெற்ற நபர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்றும், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் 139 பேருக்கும் பணிநிரந்தரம் செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், ஒப்பந்தம் குறிப்பிட்ட தேதியின் முடிவில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு (03.10.2020) வரை ஒப்பந்ததாரப் பணியாளர்கள் கூட்டுறவு சேவை சங்கத்தின் அங்கத்தினராகத் தொடர்வார்கள் என்றும், அதன் பின்னர், பணி நிரந்தரம் செய்து தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு 04.10.2017 அன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம் எல்&டி தரப்பில் மீண்டுமொருமுறை மீறப்பட்டு 03.10.2020 அன்றைய தேதிக்குப் பிறகும், பணி நிரந்தரம் செய்து கொடுக்கப்படவில்லை. அதன் பின்னரான, மக்கள் கோரிக்கையில் பணி நிரந்தரம் செய்துகொடுக்கப்படாது என்று வெளிப்படையாகவே நிறுவனத்தினரால் கூறப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

எம் மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்தும், வேலைவாய்ப்புகளிலிருந்தும் அப்புறப்படுத்தப்படுவது முதற்கண்ணாகக் கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன்பிறகு, ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் அவர்களுக்கான பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 2008ல் ஏற்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டபோதே அரசு தலையிட்டு சரியான தீர்வினை வழங்கியிருக்க வேண்டும். அதன்பின், 2014 இல் ஏற்பட்ட ஒப்பந்தமும், 2017 ஏற்பட்ட ஒப்பந்தமும் தொடர்ச்சியாக மீறப்படுவதென்பது எம் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

ஆகவே, இனியும் காலம் கடத்தாமல் அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கிணங்க 2017 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தப்படி, ஒப்பந்தப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்து தரப்படவேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக எடுக்க முன்வரவேண்டும் எனவும் கோருகிறேன்.

  • சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்