சுற்றறிக்கை: பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு

31

க.எண்: 202009300

நாள்: 13.09.2020

சுற்றறிக்கை: பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை

      நாம் தமிழர் கட்சியின் செயல்திட்டங்களில் ஒன்றான பல கோடிப் பனைத் திட்டத்தின் முன்னோட்டமாக சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘பனைத் திருவிழா’ இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக குறித்த நேரத்தில் செயல்படுத்த வாய்ப்பின்றி தள்ளிப்போனது. தற்பொழுது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான பனைத் திருவிழாவினை வருகின்ற அக்டோபர் 04, ஞாயிற்றுக்கிழமையன்று பேரெழுச்சியாக நடத்த சுற்றுச்சூழல் பாசறை திட்டமிட்டுள்ளது.

“மரம் மண்ணின் வரம் அதை வளர்ப்பதே மனித அறம்” – என்ற கூற்றின்படி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, சுற்றுச்சூழல் பாசறையின் பொறுப்பாளர்கள் அனைவரும் தத்தம் மாவட்டம் / தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பனை விதை நடவுக்கான இடத்தைத் தேர்வு செய்து, வரும் செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் தெரியப்படுத்துவதோடு, இன்று முதல் பனை விதைகளை அதிகளவில் சேகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வழமைபோல, இந்த ஆண்டுக்கான பனைத்திருவிழாவினையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வருகின்ற அக்டோபர் 04, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் தொடங்கிவைக்கிறார். அன்றைய நாளில் தமிழகமெங்கும் உள்ள சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்பனைத் திருவிழாவில் பேரெழுச்சியாகக் கலந்து கொண்டு மண்ணையும், மக்களையும் காக்கும் மகத்தான பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கிருமி தொற்றின் காரணமாக அசாதாரணமானச் சூழல் நிலவுவதால் பனை விதை சேகரிப்பில் ஈடுபடுவோர் கையுறை, நாசிக்கவசம் போன்ற முறையான பாதுகாப்பு முறைகளைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:

சுற்றுச்சூழல் பாசறை
வெண்ணிலா: +91-9884323380 / விஜயராகவன்: +91-8939818797


தலைமை அலுவலகச் செய்திக் குறிப்பு
நாம் தமிழர் கட்சி