தமிழ் மொழி இருக்கும்வரை ஐயா கி.த.பச்சையப்பனாரின் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்! – செந்தமிழன் சீமான் புகழாரம்!
பெருந்தமிழ் புலவரும், மொழி உணர்வாளருமான எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா புலவர் கி.த. பச்சையப்பனார் அவர்கள் காலமானச் செய்திகேட்டு பெரும் அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமுமடைந்தேன். ஐயா கி.த.பச்சையப்பன் அவர்கள் புதுச்சேரி மண்ணை இந்தியாவோடு இணைக்க பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர். ‘இந்தி வந்து நுழைந்தால் இன்பத்தமிழ் எங்கு மடிந்துவிடுமோ!’ என்று கருதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் புரட்சியாளர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மதிப்பியல் தலைவர் எனப் பல்வேறு பெருமைமிக்கப் பொறுப்புகளைச் சுமந்த அவர், நாம் தமிழர் கட்சியின் அறிவார்ந்த பெருமக்கள் அங்கம் வகிக்கிற ஆன்றோர் அவையத்தின் உறுப்பினராகவும் இருந்து முதுபெரும் மொழியின் சீர்மிகு சான்றோராக விளங்கினார். பெருந்தமிழர் ஐயா கி.த. பச்சையப்பன் அவர்கள் சென்னை வள்ளல் எட்டியப்பர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தவர்; மேலும், தமிழியக்கம் திங்களிதழின் ஆசிரியராகவும், தமிழ் ஓசை நாளிதழ் மொழிநடை ஆசிரியராகவும் இருந்து இதழியல் பணியிலும் சிறந்து விளங்கினார். இன உணர்வுப் போராட்டக்களங்களில் முன்களப் போராளியாகத் தன் இறுதிநாள்வரை திகழ்ந்த ஐயாவின் மறைவு தமிழ் இனத்திற்கும், மொழிக்கும் நேர்ந்து இருக்கிற ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
தனிப்பட்ட முறையில் என் மீதும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியின் மீதும் அதீத அக்கறைக் கொண்டு அதற்கான ஆலோசனைகளை வழங்கி, என்னை நெறிமுறைப்படுத்துவதில் ஐயாவிற்கு பெரும்பங்குண்டு. ஐயா கி.த பச்சையப்பன் அவர்களின் மறைவு என்பது தனிப்பட்ட அளவில் எனக்கு நேர்ந்து இருக்கிற பெரும் இழப்பாகவே கருதுகிறேன். பெரும்புலவர் ஐயா கி.த. பச்சையப்பன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத்துயரத்தில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். தமிழர் நிலம் இருக்கும் வரை, தனி நிகர் தமிழ் மொழி இருக்கும் வரை பெரும்புலவர் ஐயா கி.த.பச்சையப்பன் அவர்களின் புகழ் வரலாற்றில் நீடித்து நிலைத்து நிற்கும். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.