க.எண்: 2024010009
நாள்: 09.01.2024
அறிவிப்பு:
பெருவெளியைச் சிறுவெளியாய் ஆக்காதே!
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலாரை வணங்கிப் போற்றுவதற்காக இலட்சக்கணக்கான அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை திமுக அரசு கையகப்படுத்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும், வடலூர் பெருவெளியைக் கையகப்படுத்துவதை விடுத்து, புதிதான அமைக்கப்படவிருக்கும் பன்னாட்டு ஆய்வு மையத்தை வடலூரில் யாருக்கும் பாதிப்பில்லாத வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு கடந்த 17-12-2023 அன்று,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்தார்.
திமுக அரசு இத்திட்டத்தை கைவிடாத நிலையில், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உயிர்மநேயர் வள்ளலார் வழிதொடரும் அடியவர்கள் சார்பாக, வடலூர் உத்திர ஞான சிதம்பர சேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நாளை 10-01-2024 காலை 08 மணிமுதல் மாலை 04:30 மணிவரை கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் அஞ்சல் நிலையம் அருகில் நடைபெறவிருக்கும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத அறவழிப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவை அளிப்பதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.
எனவே, இப்போராட்டத்தில் கடலூர், சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், வீரத்தமிழர் முன்னணி உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி