ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

147

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

 

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்றச் செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்குமுன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைவிட 3000 ரூபாய் அளவிற்குக் குறைவானதாக அடிப்படை ஊதியத்தை வழங்க முடிவெடுத்தது ஐயா கருணாநிதி அவர்கள் தலைமையிலான அன்றைய திமுக அரசு. அடிப்படை ஊதியம் குறைவானதன் விளைவாக மொத்த ஊதியமானது ரூபாய் 15000 அளவிற்கு இன்றளவும் குறைவாக வழங்கப்படுகிறது.
அதன்பின் 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும் இடைநிலை ஆசிரியரிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டைக் களைய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே அரசின் நிர்வாகத்தின் கீழ் ஒரே வகையான பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் குறைவான ஊதியம் வழங்குவது எவ்வகையில் நியாயமானதாகும்?

ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் உரிமைப் போராட்டத்தில் தோள்கொடுத்துத் துணை நிற்கும் விதமாக கடந்த
இடைநிலை ஆசிரியர் பெருமக்கள் கடந்த 26.04.2018 அன்று சென்னை – வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் முன்னெடுத்த தொடர்போராட்டத்தின் போது
நேரில் சென்று ஆதரவளித்தேன்.
அதன்பின்னர் அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய பரிந்துரைக் கடிதத்தையேற்று அப்போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப்பெறப்பட்டபோதிலும், எட்டு மாதங்களைக் கடந்தும் எவ்வித தீர்வும் வழங்கப்படாதநிலையில் மீண்டும் 27-12-2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியப் பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும், அதே கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததையும் நம்பி ஆசிரியப் பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவதை கண்டித்து மீண்டும் ஆசிரியப் பெருமக்கள் 31.12.22 அன்று பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் முன்னெடுத்த தொடர்ப் போராட்டத்தின் போதும்,  போராட்டக் கோரிக்கைகளுக்கு நேரில் சென்று ஆதரவளித்தேன்.

ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வாதார அடிப்படை உரிமையைப் பெறவேண்டி கடந்த 14 ஆண்டிற்கும் மேலாகத் தொடரும் இரு திராவிடக் கட்சிகளினது அரசுகளின் இத்தகைய பணியாளர் விரோதப் போக்கிற்கு எதிராக
எத்தனை எத்தனை அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.

தற்போது மீண்டும் ஆசிரியப்பெருமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கொடுஞ்சூழலுக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும், போராடிய ஆசிரியப்பெருமக்கள் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியும் மிகுந்த மனத்துயரை அளிக்கிறது. உரிமை மீட்க போராடும் ஆசிரியப் பெருமக்கள் தங்கள் உடல்நலத்தினை பாதுகாத்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு, கோரிக்கைகள் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

 

நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து,
அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.