பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்!
இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்!
தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட பெருந்தமிழர் அப்பா நெல்லை கண்ணன் அவர்களது நினைவு நாள் இன்று!
‘தோன்றின் புகழொடு தோன்றுக’ எனும் தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தமிழுக்குத் தொண்டு செய்வதே தனது அருந்தவப் பயனெனக் கருதி வாழ்ந்து, தமிழ் தந்த புகழோடு மறைந்த அப்பா நெல்லை கண்ணன் அவர்களது தமிழ்ப்பணிகளை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர வேண்டியது ஒவ்வொரு தமிழரின் தலையாயக் கடமையாகும்.
அந்தவகையில், திருநெல்வேலி நகர வளைவு முதல் குறுக்குத்துறை சாலை இணைப்பு வரையிலான தென் வடல் புதிய சாலைக்கு அப்பா நெல்லை கண்ணன் அவர்களது பெயரைச் சூட்ட நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இன்று (18-08-2023) பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், அப்பா நெல்லை கண்ணன் அவர்களது பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கிறேன்.
தமிழ்க்கடல், இலக்கியப் பேராற்றல் அப்பா நெல்லை கண்ணன் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி