உறவுகளாய் இணைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்! – அது நம் இனத்திற்கு வலிமை சேர்க்கும் அரசியல் படைமுகாம்! – சீமான் பேரறிவிப்பு

455

நாள்: 02.07.2023

உறவுகளாய் இணைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்! – அது
நம் இனத்திற்கு வலிமை சேர்க்கும் அரசியல் படைமுகாம்!

என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்!

பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பேரினத்தை மீட்கவும், தமிழ் இனத்தையும் நிலத்தையும் மொழியையும் போற்றிப் பாதுகாக்கவும், இழந்துவிட்ட தமிழரின் பழம்பெருமைகளையும் பண்பாட்டுச் செழுமைகளையும் மீளப்பெறச் செய்யவும், தமிழினத் தலைவரை நெஞ்சிலும், தலைவர் தந்த புலிக்கொடியைக் கைகளிலும் ஏந்தி, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்த்தேசிய அரசியலை விதைக்கும் பெரும்பணியை எனது தலைமையில் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பேரெழுச்சியுடன் செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி. தமிழரை அடையாளமற்று திசைமாற்றும் போலிப் புனைவுகளான ஆரியம்-திராவிடம் இரண்டிற்கும் மாற்றாக தூய்மையான தமிழ்த்தேசிய அரசியலை வெகுசன அரசியல் பேரியக்கமாக மாற்றி, அதன் மூலம் தமிழ்மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் முன்னிற்கிறது நாம் தமிழர் கட்சி!

தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எதிராக ஆட்சியாளர்களாலும், அதிகார வர்க்கத்தாலும் திணிக்கப்படும் யாதொரு தீங்கையும் தடுத்துக் காக்கும் காப்பரணாக நாம் தமிழர் கட்சி விளங்குகிறது. அதனை அங்கீகரிக்கும் வகையில்தான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 31 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. பண பலமும், படைபலமும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு மக்களிடம் வாக்குகளைப் பறிக்கும் சமகாலத் தேர்தல் அரசியல் வரலாற்றில் அவையனைத்தையும் தவிடுபொடியாக்கி, உண்மையும் நேர்மையுமாக மக்கள் பணியாற்றும் எளிய பிள்ளைகளான நம்மை, மக்கள் ஆதரிக்கத் தொடங்கிவிட்டதையே கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அப்படி அரசியல் விழிப்புணர்வு பெற்ற மக்கள், தமிழ் மண்ணின் ஆட்சி அதிகாரத்தை நம் கைகளில் வழங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதை இலக்காக வைத்து மக்களை நோக்கி முன்நகர வேண்டியதும், அவர்களை நமது கட்சியின் உறுப்பினாராய் இணைக்க வேண்டியதும் ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளையின் முதற்கடமையாகும்.

உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதென்பது கட்சிப் பொறுப்பாளர்களின் முதற்கடமை மட்டுமல்ல. அது கட்சியின் பல்வேறு படைப்பிரிவுகளாக உள்ள அனைத்து பாசறைகளின் முதற்கடமையும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதே ஆகும்.
ஆகவே, இனி கட்சியின் பொதுக்கூட்டங்கள், கலந்தாய்வுகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், நினைவேந்தல் நிகழ்வுகள் என யாதொரு கட்சி நிகழ்வுகள் நடைபெறும் இடங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் சேர்த்து நடத்தப்பட வேண்டும் என்பதை ஆழமாக மனதில் பதியுங்கள். நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யும்போதே அருகிலேயே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதற்கான இடத்தையும், பொறுப்பாளர்களையும், தேர்வு செய்து பதாகை முதல் படிவங்கள் வரை ஆயத்தப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, பாசறை சார்பில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும், அது குருதிக்கொடை கொடுத்தலோ, பனை விதை நடுதலோ, மருத்துவ முகாமோ நிகழ்வுகள் எதுவாகினும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதென்பது அந்நிகழ்வின் தவிர்க்கக்கூடாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறைந்தபட்சம் 10000 உறுப்பினர்களைக் கட்சியில் இணைக்க வேண்டும் என்பது நம் முதன்மை இலக்காக இருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குள் அது மும்மடங்காக உயர்ந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 30000 உறுப்பினர்கள் என்று பெருக வேண்டும்.

ஆதலால், என் அன்பிற்குரிய தம்பி-தங்கைகள், நாம் தமிழர் சொந்தங்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அது சிற்றூராட்சியோ, நகராட்சியோ, பேரூராட்சியோ, மாநகராட்சியோ ஒவ்வொரு வீடாக செல்லுங்கள். திண்ணைப் பரப்புரை செய்யுங்கள். நண்பர்களிடம் செல்லுங்கள். அவர்களின் அப்பா அம்மாவிடம், தாத்தா, பாட்டியிடம் செல்லுங்கள். நண்பர்களின் நண்பர்களிடம் செல்லுங்கள். அவர்களின் உறவுகளிடம் செல்லுங்கள். வயதில் மூத்த அண்ணன் அக்காளிடம் செல்லுங்கள். நம்மிலும் இளைய தம்பி தங்கையிடம் செல்லுங்கள். பள்ளிகள் முடித்த தோழர்களிடம் செல்லுங்கள். கல்லூரி படிக்கும் இளைஞர்களிடம் செல்லுங்கள். மதுக்கொடுமையால் பாதிக்கப்படும் மகளிரிடம் செல்லுங்கள். விளைநிலம் பறிகொடுக்கும் விவசாயிகளிடம் செல்லுங்கள். வேலை இழக்கும் தானி ஓட்டுனர்களிடம், அன்றாடம் உழைக்கும் ஆலைத் தொழிலாளர்களிடமும் செல்லுங்கள். நேசத்திற்குரிய நெசவாளர்களிடமும், பாசத்திற்குரிய பாட்டாளிகளிடம் செல்லுங்கள். எளிய தொழில் செய்யும் ஏழைகளிடம் செல்லுங்கள். பெட்டிக்கடை முதல் பெரிய கடைவரை நடத்தும் வணிகர்களிடம் செல்லுங்கள்.

அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் கொள்கையை எடுத்துச் சொல்லுங்கள். தமிழ்த்தேசியத் தத்துவத்தைப் பற்றிச் தெளிவாக சொல்லுங்கள். அனைத்து உயிர்களுக்குமான நம் அரசியலைப்பற்றிச் சொல்லுங்கள். கனிமவளம் முதல் கடல்வளம் வரை, மலைவளம் முதல் மழைவளம் வரை காக்கும் நம் போராட்டத்தை பற்றிச் சொல்லுங்கள்.

விவசாயத்தையும், ஆடு – மாடு வளர்த்தலையும் அரசுப்பணியாக்கும் நம் ஆட்சி செயற்பாட்டு வரைவினைப் பற்றிச் சொல்லுங்கள். குருதியைக் கொடையாக கொடுக்கும் நம் அன்பினைப் பற்றிச் சொல்லுங்கள். ஊழல்-இலஞ்சத்தை ஒழிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நாம் எடுக்கும் முயற்சியைப் பற்றிச்சொல்லுங்கள். திராவிட ஆட்சிகளில் தாழ்ந்து போயுள்ள தமிழ்நாட்டினைப் பற்றிச்சொல்லுங்கள். பத்தாண்டுகால பாஜக அரசின் கொடுமைகள் பற்றிச் சொல்லுங்கள். நம் விவசாயி சின்னத்தை ஒவ்வொருவரின் மனதிலும் பதிய வையுங்கள். ஒவ்வொரு ஊரிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துங்கள். நம்மை ஆதரிக்கும் அன்பு உறவுகள் அனைவரையும் நம் கட்சியின் உறுப்பினர் ஆக்குங்கள்.

நாம் இன்னும் சென்று சேராத சிற்றூர்களில், கட்சிக்கு அப்பாற்பட்டு, நம்மை ஆதரித்து வாக்களித்த பல இலட்சக்கணக்கான மக்களை அரசியற்படுத்தி, அமைப்பிற்குள் கொண்டுவந்து, நாம் தமிழர் கட்சியை வலுப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் மிக முக்கியப் பொறுப்பாகும். எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தரும் உறவுகளை அரவணைத்து, அவர்கள் அனைவரையும் கட்சியின் உறுப்பினர்களாக இணைத்து, நாம் தமிழர் கட்சியை மாபெரும் மக்கள் இயக்கமாக, அசைக்க முடியாத அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் முதன்மையான கடமையாகும். தேர்தல் நேரத்தில் நம் வலிமையைப் பறைசாற்றவும், அனைத்துத் தரப்பு மக்களைச் சென்றடையவும் நாம் களத்தில் தொய்வின்றி உழைக்கவேண்டிய போர்க்காலம் இது என்பதை உணர்ந்து தெளிந்து ஓய்வின்றி உழையுங்கள்.

ஒன்று பத்தாவோம்! பத்து நூறாவோம்!

பகைவர் நடுங்கும் படையாவோம்!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

 

புரட்சி வாழ்த்துகளுடன், 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபோளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம் (இரண்டாம்கட்டப் பயணத் திட்டம் 05-07-2023 முதல் 10-07-2023 வரை)