ஒரு கிராமத்து பறவை
சில கடல்களைக் கடந்த கதைதான் நீ..
கேள்விகளால் வேள்வி செய்த
கவிதை நெருப்பு நீ..
கொஞ்சம் தேநீர் காட்டும்
நிறைய வானம் நீ..
இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் மீதிலும்
வெறுப்புக்குப் பதில் காவி நிறத்திலும் ஒரு காதல் செய்தவன் நீ..
என் ஜன்னலின் வழியே எப்போதும் கேட்கும்
இன்னொரு தேசிய கீதம் நீ..
கல்வெட்டுகளில் கவிதை வடித்தவர்கள் நடுவில்
நீ மட்டும்
கவிதைகளில் கல்வெட்டுகள் பதித்தவன்..!
மூன்றாம் உலகப்போர் புரிந்தாலும்
ஒரு போர்க்களத்தில் இரண்டு பூக்கள் தருபவன் நீ..
தமிழாற்றுபடையின் எல்லா நதியிலும்
உன் ஓடம் மட்டும்..
தமிழ்நதி பாயும் உன் தண்ணீர் தேசம் முழுவதும்
பூக்கும் கவிதைப் பூக்கள் ; ஆனால்
இந்த பூக்கள் விற்பனைக்கல்ல..!
தமிழ்க்கவிதை பாற்கடல் நிரம்பி வழிய
பெய்யெனப் பெய்யும் மழை நீ..
உன் பழைய பனை ஓலைகளில்
நீ எழுதும் தமிழுக்கு நிறம் உண்டு எப்பொழுதும்..!
வடுகப்பட்டி முதல் வால்கா வரையிலும்
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் வடித்த
கவிச் சிற்பியே உன்னை வாழ்த்துகிறேன்
என் வார்த்தை கொண்டு..
பல்லாயிரம் ஆண்டுகால
மரபு செய்யுட்பாக்கள்
உயிர் கொள்ளும்
அடைகாப்பு..
நூற்றாண்டு கண்ட
புதுக் கவிதைப்பூக்கள்
நடை பயிலும்
குயில் தோப்பு..
மரபு கவிதை
விதிகள் மீறாமலும்
புதுக்கவிதை
மரபுகள் மாறாமலும்
திரையிசைப் பாடல்கள்
ஈன்று தரும்
இனிய யாப்பு…
கருவாச்சிகளுக்கும் காவியம் எழுதி,
கள்ளிக்காடுகளுக்கும் இதிகாசம் எழுதிய
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்..!
எங்கள் ஐயா!
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம்!
எங்கள் ஐயா
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!https://t.co/3DKLpzKROI@Vairamuthu pic.twitter.com/h2md1KajCy— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 13, 2023
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி