கிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

221

கிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஐந்து பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஒன்பது தொல்தமிழ் குறவர் குடிமக்களை ஆந்திர மாநில காவல்துறை கைது செய்து சிறையிலடைத்து கடும் சித்ரவதை செய்துள்ளதுடன், பெண்களைப் பாலியல் வன்கொடுமை புரிந்துள்ள கொடூரச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசிற்கோ, காவல்துறைக்கோ தெரியாமல் ஆந்திர காவல்துறை தமிழ்நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தமிழர்களைச் சட்டவிரோதமாகக் கடத்தி சென்றிருப்பது அப்பட்டமான மாநில உரிமை பறிப்பாகும். தன் சொந்த மண்ணின் மக்களைக் கூடப் பாதுகாக்கும் திறனற்றதாக திமுக அரசு இருப்பது தமிழ்நாட்டிற்கே ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவாகும்.

கடந்த சூன் 11ஆம் நாள் இரவு ஆந்திர மாநிலத்தின் சித்தூர் காவல்துறையினர் 9 பேரையும் கடத்திச் சென்று ஒரு வார காலமாக, சட்டத்திற்குப் புறம்பாக மறைவிடத்தில் அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தியதுடன், இரண்டு பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து பிறப்பு உறுப்புகளில் மிளகாய் பொடி தூவியும், இரும்பு கம்பியால் கொடூரமாகக் குத்தியும் சித்திரவதை செய்துள்ள செய்தி கடும் ஆத்திரத்தையும், பெருங்கோவத்தையும் ஏற்படுத்துகிறது. உலகில் எந்தப் பெண்களுக்கும் ஏற்படக்கூடாத, கொடூரங்களை ஆந்திர காவல்துறையினர் தமிழ் பெண்களுக்குச் செய்துள்ளது சிறிதும் இரக்கமற்ற கொடுஞ்செயலாகும். நாகரீக சமூகத்தில் வாழும் மனச்சான்று உள்ள எவரும் இத்தகைய இழிசெயலில் ஈடுபடமாட்டார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட கொலையாளிகள் கூடச் செய்யத்துணியாத காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் காலங்காலமாகப் பழங்குடி மக்களுக்கு எதிராகச் செய்துவருவது அரச பயங்கரவாதமே ஆகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து தற்போதுவரை திருட்டுக் குற்றங்கள் எங்கு நடந்தாலும் காவல்துறையினர் தாய்த்தமிழ் குறவர் குடிமக்கள் மீது வீண்பழி சுமத்தி கைது செய்வதும், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி மிரட்டித் துன்புறுத்துவதும், அவர்களைக் குற்றப்பரம்பரையினராகச் சித்தரிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. தங்கள் மீது தொடுக்கப்படும் அக்கொடுமைகளுக்கு எதிராக தொல்தமிழ் குறவர்குடி மக்கள் தொடர்ச்சியாகப் போராடியும் இன்றுவரை அவை நின்றபாடில்லை.

அதன் ஒரு பகுதியாகவே, ஆந்திர மாநில சித்தூர் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் புலியாண்டிப்பட்டி குறவர் குடியைச் சேர்ந்த ஐயப்பன், அருணா, கண்ணம்மாள், ஸ்ரீதர் ஆகியோரை நள்ளிரவில் அடித்து வண்டியில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஐயப்பனின் சகோதரி சத்யா, தமிழ்நாடு காவல் துறையிடம் புகார் அளித்ததை அறிந்து கோபமுற்ற சித்தூர் காவல்துறையினர், மீண்டும் இரவோடு இரவாக தமிழ்நாட்டிற்குள் புகுந்து ஐயப்பனின் சகோதரி சத்யா மற்றும் அவரது கணவர் ரமேஷ், மருமகள் பூமதி ஆகியோரையும் கடத்திச் சென்று கலப்பட்டு காவல் நிலையத்தில் ஐந்து நாட்களாக சிறையில் அடைத்து வைத்து கொடூரச் சித்திரவதைகளுக்கும், பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.

ஆந்திர காவல்துறையின் இத்தகைய அத்துமீறல்கள் குறித்து பல தரப்பிலிருந்தும் புகார்களும், கண்டனங்களும் எழுந்தவுடன், வேறுவழியின்றி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு, கடத்திச் சென்ற ஏழு பேர்களில் மூன்று பெண்கள் மற்றும் சிறுவன் ரமேஷ் ஆகிய நால்வரை மட்டும் கிருஷ்ணகிரி மத்தூர் காவல் நிலையத்தில் சித்தூர் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் மூவர் நிலை என்ன ஆனது, அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதுகூட இன்றுவரை தெரியவில்லை. பாதிக்கப்பட்ட அருணா, சந்தியா, கண்ணம்மாள், ரேணுகா ஆகியோர், சித்தூர் காவல் நிலையக் காவலர்கள் தங்களுக்குச் செய்த கொடுமைகளை ஊடகங்களில் தெரிவித்ததன் பின்பே ஆந்திர காவல்துறை செய்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த பிறகும் திமுக அரசு இவ்விவகாரத்தில் தொடர்ந்து அமைதிகாத்து வருவது வெட்கக்கேடானது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆந்திர காவல்துறையினரால் 20 தமிழர்கள் பச்சைப்படுகொலை செய்யப்பட்டபோது அன்றைய அதிமுக அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்து, ஆந்திர அரசின் இனப்படுகொலைக்குத் துணைநின்று துரோகமிழைத்தது. அதேபோன்று, தற்போது தமிழ்ப் பழங்குடியினருக்கு ஆந்திர காவல்துறை இழைத்துள்ள கொடுமைகளைக் கண்டிக்காமல் திமுக அரசு அமைதிகாப்பது, தமிழர்களுக்குச் செய்கின்ற வரலாற்றுப் பெருந்துரோகமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ஆந்திர அரசிற்கு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், மனிதத் தன்மையற்ற இக்கொடூரச் செயல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலைமுயற்சி, வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிந்து உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஆந்திர காவல்துறையினரால் கடத்தப்பட்டுள்ள ஐயப்பன் உள்ளிட்ட மீதமுள்ள மூவரை விரைந்து மீட்கவும், அவர்கள்மீது பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இனி வரும் காலத்தில் இதுபோன்ற மனிதப் பேரவலங்கள் பழங்குடி தமிழர்களுக்கு நடைபெறாவண்ணம் காத்திட தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திவிசாரணையின்போது கொல்லப்பட்ட புளியங்குடி தங்கசாமி மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபழனி சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு